புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: "சராசரியை விட குறைவாகவே மழைப்பொழியும்" - வானிலை...
கேரளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 127 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.மனு (40). கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக ஒரு சிறுமி சென்றுள்ளார்.
சிறுமிக்கு உடற்தகுதிப் பயிற்சி அளிக்க வேண்டும் எனக்கூறி ஜிம்முக்கு அழைத்துச் சென்று சிறார் வதை செய்துள்ளார்.
பின்னர் குளியலறைக்கு அழைத்துச் சென்ற பயிற்சியாளர் மனு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் சில ஆபாசப் புகைப்படங்களையும் எடுத்துள்ளார். மேலும், இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கிரிக்கெட் விளையாட விடாமல் எதிர்காலத்தையே பாழாக்கிவிடுவேன் என்று பயிற்சியாளர் மனு மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.
தொடர்ந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுமி, 2021-ம் ஆண்டு கிரிக்கெட் பயிற்சிக்குச் செல்வதை நிறுத்தினார். ஒருகட்டத்தில் தற்கொலைக்கும் முயன்ற அவரை பெற்றோர் மீட்டு, மனநல மருத்துவர் மூலம் சிகிச்சைக்கு அளித்தனர்.
சிறுமி சற்று நார்மல் ஆன நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்க சென்றார்.
அந்தப் போட்டியில் பயிற்சியாளர் மனுவும் சென்றுள்ளார். மனுவைக் கண்டதும் சிறுமி பயந்து கூச்சலிட்டுள்ளார். அது ஏன் என விசாரித்தபோது, பயந்துகொண்டே நடந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெற்றோர் வழிகாட்டுதல்படி கிரிக்கெட் பயிற்சியாளர் மீது சிறுமி புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மற்ற சிறுமிகளும் தைரியமாக முன்வந்து புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அந்தப் பயிற்சியாளர் மீது மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த 6 வழக்குகளில் ஏற்கனவே 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன. 4 வழக்குகளுக்கான தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2 வழக்குகளில் அறிவியல் பூர்வமான பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பிறகு விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று வழக்குகளில் பயிற்சியாளர் மனுவுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நான்காவது வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் அதிவேக சிறப்பு நீதிமன்றம் மனுவுக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 54,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு முந்தைய மூன்று வழக்குகளின் தண்டனைக் காலம் முடிந்த பின்னரே, நான்காவது வழக்கிற்கான தண்டனைக் காலம் தொடங்கும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நான்கு வழக்குகளிலும் சேர்த்து மொத்தம் 127 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2.23 லட்சம் ரூபாய் அபராதமும் மனுவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
முதல் மூன்று வழக்குகளின் தண்டனையை ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், நான்காவது வழக்கில் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் சேர்த்து அவர் மொத்தம் 127 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
















