2026 T20 WC-ல் ரோஹித்துக்கு சிறப்பு அங்கீகாரம்; ஒரே குழுவில் IND, PAK; வெளியானது...
சிவகாசி: நிறுவனத்தின் அருகில் மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம்; பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் விநாயகர் காலனியில் வசிப்பவர் கென்னடி கண்ணன்( வயது 50 ). இவர் சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் செல்லும் சாலையிலுள்ள காளியம்மன் கோயில் பழைய தெருவின் பின்புறம் லட்சுமி வெடி பட்டாசு போன்ற பட்டாசுகள் தயாரிக்கத் தேவையான காகிதங்களைத் தயாரிக்கும் காகித கட்டிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் அருகே ஆட்களின் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி என்பதால் காளியம்மன் கோயில் பழைய தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அங்கேயே சில அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை கென்னடி கண்ணன் அடிக்கடிக் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தொடர்ச்சியாகப் பிரச்னையிருந்து வந்த நிலையில் கென்னடி கண்ணன் தனது நிறுவனத்தைச் சுற்றிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி கண்காணித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் கென்னடி கண்ணனின் நிறுவனத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் கென்னடி கண்ணனும், அவரது மனைவி மஞ்சுளாவும் தங்களது நிறுவனத்தினுள் அமர்ந்து பேப்பர்களை தரம் பிரிக்கின்ற பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டப் பகலில் நிறுவனத்தின் பின் பக்க ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் கென்னடி கண்ணன் அணிந்திருந்த மேல் சட்டை தீப்பிடித்து எரிந்து அவரது முதுகில் தீக்காயம் ஏற்பட்டதுடன், வைக்கப்பட்டிருந்த பேப்பர் பண்டல்களிலும் தீப்பிடித்து எரிந்து சேதமானது. காயமடைந்த கென்னடி கண்ணன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாசி டிஎஸ்பி அனில் குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சிவகாசி வட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.





















