2026 T20 WC-ல் ரோஹித்துக்கு சிறப்பு அங்கீகாரம்; ஒரே குழுவில் IND, PAK; வெளியானது...
தென்காசி: விவசாய இலவச மின் இணைப்பிற்கு ரூ.7,000 லஞ்சம்: வசமாக சிக்கிய இளநிலை பொறியாளர்!
தென்காசி மாவட்டம், வி.கே புதூர் அருகே கீழ வீராணம் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர் அவரது தந்தையின் பெயரில் வி.கே புதூரில் உள்ள நிலத்திற்கு மின் கம்பம் வைப்பதற்கு ரூபாய் 24,000 பணம் செலுத்தி, இலவச விவசாய மின் இணைப்பு வாங்கியுள்ளார். இந்த மின் இணைப்பு சம்பந்தமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வி.கே புதூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் வைக்க வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது.

அப்போது அதற்கான ஆவணங்கள் மற்றும் ரூபாய் 10,000 பணத்துடன் தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பணத்தை கொடுக்க முடியாததால் குறைத்து கூறுமாறு கூறிய நிலையில், ரூபாய் 7,000 கொடுத்தால் தான் மீட்டர் பொருத்துவேன் என இளநிலை பொறியாளர் திட்டவட்டமாக கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லஞ்ச பணத்தை கொடுக்க முடியாததால் செல்வகணேஷ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தப் பணத்தை இளநிலை பொறியாளர் தனது நண்பர் துரையிடம் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் ரசாயனம் பவுடர் தடவிய ரூபாய் 7,000 கொடுக்கும் பொழுது கையும் களவுமாக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இளநிலை பொறியாளர் பிரேம் மற்றும் அவரது நண்பர் துரை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





















