மும்பை: நடுக்கடலில் உள்ள ஒ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் தீவிபத்து - 10 பேர் காயம்
சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்கள் - விமானியைத் தேடும் பணி தீவிரம்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்களை ஈரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு விமானியை ஈரான் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் போர்ச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் விமானம், அமெரிக்காவின் அதிநவீன F-15E ஸ்ட்ரைக் ஈகிள் ரகத்தைச் சேர்ந்தது. இரண்டு பேர் பயணிக்கக்கூடிய இந்த ஜெட் விமானத்தில் இருந்த ஒருவரை அமெரிக்கச் சிறப்புப் படைகள் பத்திரமாக மீட்டுள்ளன. மற்றொரு விமானப் பணியாளர் குறித்து இதுவரை தகவல் இல்லை. இதேபோல், குவைத் வான்பரப்பில் தாக்கப்பட்ட அமெரிக்காவின் A-10 வார்ஹாக் ரக விமானம் நொறுங்கி விழுந்தது. இதில் இருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். காணாமல் போன விமானியைத் தேடச் சென்ற அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அதிகாரப்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ட்ரம்ப், ``நிச்சயமாக இந்தச் சம்பவம் ஈரானுடனான பேச்சுவார்த்தையைப் பாதிக்காது. ஏனெனில் இது ஒரு போர்" என்று குறிப்பிட்டார். முன்னதாக, அமெரிக்க விமானங்கள் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது தடையின்றிப் பறக்கும் அளவிற்கு ஈரானின் இராணுவம் பலவீனமடைந்துவிட்டது என்று ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
`காணாமல் போன அமெரிக்க விமானியை உயிருடன் பிடிப்பவர்களுக்கு மதிப்புமிக்க வெகுமதி வழங்கப்படும்' என்று ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. தென்மேற்கு ஈரானில் விமானம் விழுந்த பகுதியைச் சுற்றி ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்காவைக் கிண்டல் செய்யும் வகையில், ``ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வந்தவர்கள், இப்போது தங்கள் விமானிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.













