"எனக்கு கோவை வேறு கரூர் வேறு அல்ல; எனக்கு கோவையில் வாய்ப்பு தர காரணம்..!" - செந்...
சென்னை: மனைவியின் கழுத்தில் கத்திரிக்கோல்; போதை கணவரிடம் போலீஸ் விசாரணை!
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி சுகன்யா (31). கார்த்திக் வீட்டில் நேற்றிரவு பயங்கர சத்தம் கேட்டது. அதனால் அவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் என்னவென்று விசாரித்தனர். அப்போது கழுத்தில் கத்திரிக்கோல் குத்திய நிலையில் சுகன்யாவை ரத்தம் சொட்ட, சொட்ட தூக்கிக் கொண்டு கார்த்திக் வெளியில் வந்தார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சுகன்யாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கார்த்திக் கொண்டு சென்றார். அங்கு சுகன்யாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதோடு இந்தச் சம்பவம் குறித்த எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்கும் மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸார் உயிரிழந்த சுகன்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து கார்த்திக்கிடம் சுகன்யா எப்படி இறந்தார் என விசாரித்தனர். அப்போது கார்த்திக் மது போதையிலிருந்ததால் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்தனர். அதனால் சுகன்யா எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. போதை தெளிந்த பிறகு கார்த்திக்கிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையில் சுகன்யாவின் கழுத்தில் கத்திரிக்கோல் குத்திய காயத்தை பார்த்த டாக்டர்கள், சில தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்தனர். அதனடிப்படையில் கார்த்திக்கிடம் போலீஸார், விசாரித்தபோது சம்பவத்தன்று தனக்கும் தன் மனைவி சுகன்யாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து சுகன்யா கழுத்தில் குத்திக் கொண்டார் என்று கார்த்திக் தெரிவித்திருக்கிறார். ஆனால், சுகன்யாவால் அவ்வளவு ஆழத்துக்கு கத்திரிக்கோலால் குத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனால் மர்ம மரணம் என்ற பிரிவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.


















