`மனைவியிடம் சொல்வேன்'- மிரட்டிய காதலி; கொன்று உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த கடற்படை அதிகாரி
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவீந்திரா என்பவருக்கு டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் மோனிகா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் 2021ம் ஆண்டு அறிமுகமாகிக்கொண்டனர். அடிக்கடி விசாகப்பட்டினத்தின் பல பகுதிகளுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தனர். ரவீந்திரா கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். ரவீந்திராவிற்கு கடந்த 2024ம் ஆண்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து மோனிகாவுடனான தொடர்பை ரவீந்திரா தொடர்ந்தார். விடுமுறையில் வரும்போது மோனிகாவுடன் தியேட்டர், பார்க் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தார்.

இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்தது. ரவீந்திராவின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோனிகாவை தனது வீட்டிற்கு அழைத்தார். வீட்டில் இருந்தபோது மோனிகாவிற்கும் ரவீந்திராவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ரவீந்திரா தன்னுடைய காதலியை கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார்.
ஆன்லைன் கத்தி ஆர்டர்
அதன் பிறகு ஆன்லைனில் ரவீந்திரா கத்தி ஒன்றை ஆர்டர் செய்து வாங்கினார். அக்கத்தியைப் பயன்படுத்தி மோனிகாவின் உடலை பல துண்டுகளாக வெட்டினார். தலை, கை, கால் பகுதிகளை தனித்தனியாக வெட்டி எடுத்தார். உடல் பகுதியை மட்டும் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் வைத்து அடைத்தார்.
மற்ற பகுதிகளை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று அவற்றை எறித்துவிட்டார். அதன் பிறகு நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று மோனிகாவை கொலைசெய்ததை போலீஸாரிடம் கூறி சரணடைந்தார். உடனே போலீஸார் ரவீந்திராவின் வீட்டிற்கு வந்து குளிர்சாதன பெட்டியில் இருந்த உடலை மீட்டனர்.
மனைவியிடம் சொல்வேன் என மிரட்டினார்
இது குறித்து ரவீந்திரா போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ''மோனிகா என்னிடம் ரூ.3.5 லட்சம் வாங்கினார். அப்படி இருந்தும் எங்களது உறவு குறித்து என் மனைவியிடம் கூறிவிடுவேன் என்று கூறி தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. தொடர்ந்து மிரட்டி துன்புறுத்தியதால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் கொலை செய்ய முடிவு செய்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன உடல் பகுதிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டெல்லியில் ஸ்ரத்தா என்ற பெண்ணை அஃப்தாப் பூனாவாலா என்ற நபர் கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்திருந்தார். அவர்கள் இருவரும் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அஃப்தாப் இப்படுகொலையைச் செய்தார்.

















