`முதல்வர் தொகுதியில் பிரசாரம் செய்யக் கூடாதா? அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவ...
Youth: 'யூத்' படத்திற்கு சம்பளம் வாங்காததற்கு காரணம்.!" - சொல்கிறார் ஜி.வி. பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீ கௌரி ப்ரியா நடிப்பில் கடந்த வாரம் 'ஹாப்பி ராஜ்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.
அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் அப்பாஸும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் இத்திரைப்படம் கடந்த 27-ம் தேதி வெளியானது. அதே தேதியில், கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த 'யூத்' படத்தின் தெலுங்கு பதிப்பும் வெளியானது.
ஹைதராபாத்தில் 'ஹாப்பி ராஜ்' படத்திற்கான ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில் 'யூத்' படத்திற்கு சம்பளம் பெறாமல் இசையமைத்துக் கொடுத்ததற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், "அந்தப் படத்தை சம்பளம் பெறாமல் செய்ததற்கு காரணம் கருணாஸ்தான். அவர் என்னுடைய 'டார்லிங்' படத்தில் நடித்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது.
கருணாஸும், அவருடைய மனைவி கிரேஸ் நல்ல மனிதர்கள். அவர்களுக்காகதான், கென் கருணாஸின் 'யூத்' படத்திற்கு சம்பளம் பெறாமல் இசையமைத்தேன்.
'யூத்' படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை வாங்க எந்தவொரு ஆடியோ லேபிள்களும் முன் வரவில்லை. குறைவான படத்தை கொடுத்து உரிமத்தை பெறவே நினைத்தார்கள்.
மியூசிகிற்காக நாங்கள் நிறைய செலவழித்திருப்பதால், அது எங்களுக்கு சரியாக வராது என முடிவெடுத்து சொந்தமாக நானே ஒரு மியூசிக் லேபிள் தொடங்கிவிட்டேன்.
பிறகு பாடல்கள் வெளிவந்து, அது பெரியளவில் ஹிட்டானது. அப்போது, குறைவான பணத்திற்கு பாடல்கள் உரிமத்தை கேட்ட நிறுவனங்கள், அதைவிட 5 மடங்கு அதிகமான தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்கள்.
ஆனால், அதனை கொடுக்காமல் நாங்களே வைத்துக் கொண்டோம்." என்றவர், "'யூத்' படத்திற்கு இப்படியான கணக்குகளை நினைவில் வைத்து நான் இசையமைக்கவில்லை. அன்பிற்காக அதனை செய்தேன்." எனக் கூறியிருக்கிறார்.
















