"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப...
ஜடாயு மலையில் ஒரு திக்திக் அனுபவம் – ஆன்மீகமும் சாகசமும் நிறைந்த வர்கலா
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பசுமையான இயற்கை அழகு, வனப்பகுதிகள், தெளிவான கடற்கரைகள் மற்றும் மலைகள் என இயற்கையின் அருளால் ஆசிர்வதிக்கப்பட்ட கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு விடுமுறை நாட்களில் சென்று வருவது ஒரு இனிமையான அனுபவம். பசுமைக் காடுகளும், சலசலத்து ஓடும் அருவிகளும், நெடிதுயர்ந்த மலைச் சிகரங்களும், வண்ண மலர் கூட்டங்களும் நிறைந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டே இருக்கத் தோன்றும்
கடந்த அக்டோபர் மாத இறுதியில் கேரளாவின் நீண்ட அழகிய கடற்கரைகள் நிறைந்த வர்கலாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சோழன் டிராவலைச் சேர்ந்த விஜய் மற்றும் ரவி செய்த உதவிகள் மறக்க முடியாதவை. வர்கலா, கேரள தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 51 கிமீ தொலைவில் அமைந்த அழகிய கடற்கரை நகரம். வட இந்தியாவுக்கு கோவா போல தென் இந்தியாவுக்கு வர்கலா என்று இங்குள்ள மக்கள் பெருமையுடன் கூறுகிறார்கள்.

கீச் கீச் என்று சப்தமிட்டபடி பறவைகள் பறந்து செல்ல. நம்மை சுற்றி பச்சை பசேல் என இருக்கும் இடத்தின் வழியே மலைக் குன்றுகள் சூழ காட்சியளிக்கும் அரபிக்கடல் கடற்கரையில் காலார நடந்து செல்லும் இனிமையான அனுபவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது ஒவ்வொருவரையும் நோயிலிருந்து ஆரோக்கியமாக மாற்றி, சுத்தமான மாசுபடாத காற்றைச் சுவாசிக்கச் செய்யும் ஒரு இடமாகும்.
நாரதர் தனது வல்கலமை (மரப் பட்டையால் செய்யப்பட்ட ஆடை) இந்த இடத்தில் எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. வல்கலம் எறியப்பட்ட இந்தக் கிராமத்திற்குச் சென்று வந்தால், பிரஜாபதிகளின் பாவம் நீங்கும் என்று நாரதர் கூறியபடியே, பிரஜாபதிகள் தங்கள் பாவத்தை நீக்கிக் கொண்டு, இந்தக் கிராமத்திற்கு வர்கலா என்று பெயரிட்டனராம். எனவே, இந்த இடம் ஆன்மீக நடைமுறைகள் மற்றும் இயற்கையான மூலிகைகளால் நிறைந்து, அனைவரையும் அமைதி நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

வர்கலாவில் சிவகிரி மடம், ஜனார்த்தன ஸ்வாமி கோயில், வர்கலா பீச், பாபநாசம் பீச், கபில் ஏரி, வர்கலா சுரங்கப்பாதை, மற்றும் பவர் ஹவுஸ் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன.
வர்கலா பீச்
அமைதியான அரபிக் கடலிலிருந்து வெண்நுரைகளுடன் கரையைத் தழுவிச் செல்லும் அலைகள், கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில் சிறிய குன்றுகள், நீலநிற வானம் என்று இயற்கை அழகு கொஞ்சும் இந்தப் பீச் சுற்றுலா .பயணிகளை ஈர்க்கிறது. வர்கலா கடற்கரையில் பாராசூட், படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம்.

ஜனார்தனன் கோயில்
இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது. மிகவும் அமைதியான சூழவில் திருவிளக்குகளின் ஒளியிவ் பகவான் விஷ்ணுவை வணங்கியது பரவசமாக இருந்தது
கபில் பீச்
அமைதியான மற்றும் அழகான சூழலை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். கூட்டம் அதிகம் இல்லாத கடற்கரையைத் தேடுபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். கடற்கரையும், அதன் அருகில் ஓடும் பேக்வாட்டர்ஸையும் ஒருங்கே கொண்டுள்ளது.. அழகான சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காணலாம்..

ஜடாயு பார்க்
ராமாயணத்தில், ஜடாயு (ராட்சத அளவிலான பறவை) பெரும் அசுரனான ராவணனுடன் சண்டையிட்டு இந்த இடத்தில் விழுந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இயற்கை பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும். இங்கு பிரம்மாண்டமான ஜடாயு பறவையின் சிலை முக்கியமான ஈர்ப்பு.,
கேபிள் காரில் மேலே ஏறும் வசதியும் உள்ளது.. நாங்கள் ஜடாயு மலை உச்சிக்கும் பயணம் செய்தோம். கேபிள் கார் மூலம் மலையின் மீது ஏறுவது ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஜடாயுவின் அற்புதமான அமைப்பு உண்மையிலேயே மனதைக் கவரக்கூடியது. இந்த இடம் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.
இங்கு இயற்கையின் அழகை உண்மையிலேயே அனுபவிக்க முடியும். அடிக்கடி மழை பெய்யும் மற்றும் மலையைச் சுற்றி குளிர்ந்த காற்று வீசும். மலை உச்சியிலிருந்து பசுமையான விரிந்து பரந்த காடுகளைக் காணலாம். நாங்கள் இங்கு சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும்போது பெருமழை பெய்ய ஆரம்பித்து விட்டது.
கேபிள் காருக்காக ஒரு இடத்தில் காத்திருந்தோம். எங்களுக்கு முன் சென்றவர்களின் கேபிள் கார் பழுதடைந்துவிடவே பாதியிலேயே நின்று விட்டது.. மேலும் மழையும் வலுக்கவே மற்ற கேபிள் கார்களையும் நிறுத்தி விட்டாகள். வெகு நேரம் மலையின் மேல் காத்திருந்தோம். வெகு நேரம் கழித்து ஒரு மினி வேனில் அந்த குறுகிய மலைப் பாதை வழியாக கீழே அழைத்துச் செல்லப்பட்டோம். கொட்டும் மழையில் மலைச் சரிவுகளின் குறுகிய பாதையில் வண்டி ஒரு பக்கமாக சாய்ந்தவாறு மெதுவாகக் கீழே இறங்கியது. எங்களுக்கு வண்டியிலிருந்து இறங்கும் வரை திகிலாக இருந்தது.
அழகான கடற்கரைகள், அமைதியான வனப்பகுதி, எங்கும் பசுமையான இடங்கள், உயர்ந்த மலைகள் ,குன்றுகள், கோயில்கள் மற்றும் கேரள உணவுடன் உபசரிக்கும் மலையாள சேட்டன்கள் என சற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது வர்கலா..
-வி. ரத்தினா
ஹைதராபாத்



















