செய்திகள் :

ஜெய்பீம் : நம்பிக்கை ஒளி! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 42

post image

அறிவொளி ஆசிரியை மித்ரா, ஒரு தேர்தல் அலுவலர் முன்பாக சில பழங்குடி மக்களை அழைத்துக்கொண்டு போய் நிறுத்தி ஒரு கோரிக்கை வைக்கிறார். அவரது வேண்டுகோள், அம்மக்களுக்கான ஓர் அடையாள அட்டை! அப்போது அருகிருக்கும் உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் குணசேகரன்,

”அய்யா ஓட்டுப்போடுங்க, அம்மா ஓட்டுப்போடுங்கன்னு கண்டகண்ட சாதிகாரனுக காலில் விழுவது எல்லாம் போதாதா? இன்னும் இவனுக குடிசைக்கெல்லாம் நாங்க போயி குனிஞ்சு நிக்கணுமா, போம்மா வேலையைப் பாத்துகிட்டு” என்று சொல்லி அவர்களை அங்கிருந்து விரட்டுகிறார். கேட்க நாதியற்ற நிலை என்பது இதுதான்.

கதிர்வேல் எனும் பக்கத்து ஊர் பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுக்குள் புகுந்த பாம்பைப் பிடித்து, உதவி செய்கிறான் ராசாக்கண்ணு எனும் ஒரு பழங்குடி இளைஞன். அதற்கு அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும், அவரது மனைவியும் சேர்ந்து அவனுக்குச் செய்யும் கைம்மாறு மனிதர்கள் எத்தனைக் கொடூரமானவர்கள் எனும் உண்மையைப் போட்டுடைக்கிறது. மனம் நொந்துபோகிறோம். உதவிகோரி வாசல் தேடி வந்து நிற்கும் செங்கேணியை குணசேகரன், ’சீ போ’ என்று ஒரு நாயைப்போல விரட்டுகிறார். சாதிய மனம் எத்தனைக் கீழ்மையானது என்பதற்கான ஆதாரம் இந்தக் காட்சி.

லிஜோ மோல்

காவல்துறை, விசாரணைக் கைதியாய்ப் பிடித்துக்கொண்டு போன தன் கணவன் ராசாக்கண்ணுவையும், மேலும் இரு உறவினரையும் காணாமல் தவித்து போய் நடுத் தெருவில் நிற்கிறாள் செங்கேணி. அவளது கைப்பிடியில் ஒரு பெண் குழந்தை, வயிற்றிலொரு குழந்தை. சக மனிதர்களால் புழுவுக்கும் துச்சமாய் மதிக்கப்படும் நிலையில், அதே சக மனிதர்களான கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அவளுக்கு உதவ முன்வருகிறார்கள். அவர்கள் மூலமாக தொழிற்சங்கவாதியும், போராளியுமான துடிப்பான ஓர் இளம் வக்கீலான சந்துருவின் சட்ட உதவி கிடைக்கிறது.

விசாரணைக் கைதியான ராசாக்கண்ணு சிறையிலிருந்து தப்பிவிட்டதாகச் சொல்கிறது காவல்துறை. மிகச் சிக்கலான இந்த வழக்கில், ஒட்டு மொத்த அரசு எந்திரத்தையே எதிர்த்துப் போராடத் தயாராகிறார்கள் செங்கேணியும், சந்துருவும். குற்றவாளிகள் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக இருப்பவர்கள் எனும் உண்மை வெளியாகும் தருணத்தில், மாநில அரசின் கௌரவம் காத்திட நீதி மற்றும் காவல்துறையின் உச்சபட்ச அதிகாரப் பதவிகளான அட்வகேட் ஜெனரல் மற்றும் டிஜிபி ஆகியோரே இந்த வழக்கில் நேரடியாகக் களமிறங்குகிறார்கள். சமூகத்தின் கடைக்கோடியில் கிடக்கும் ஓர் எளிய பெண்ணுக்கு முன்னாலும் கூட இந்தப் பேரரசின் கௌரவம் போட்டி போடுகிறது. ராசாக்கண்ணுவுக்கு என்னவாயிற்று, செங்கேணிக்கு நீதி கிடைத்ததா என்பது கதையின் முடிவு.

சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருந்தார். தமிழ்த் திரையுலகில் 25 ஆண்டுகளைக் கடந்து முன்னணிக் கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் கேரியரில் உச்சத்தில் வைக்கக்கூடிய படமாக ஜெய்பீம் அமைந்தது. இத்தகைய திறன் வாய்ந்த நடிகர் ஏன் எப்போதும் கமர்ஷியல் கதைகளின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறார் எனும் வருத்தமும் நமக்குத் தோன்றாமலில்லை. மேனாள் உயர்நீதி மன்ற நீதியரசர் கே. சந்துரு, வழக்கறிஞராக இருந்த காலத்தில் அவர் வாதாடிய வழக்கொன்றின் பாதிப்பிலிருந்துதான் இந்தக் கதை உருவாக்கப்பட்டிருந்தது.

சூர்யா, சந்துருவாக அவரது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் உள்வாங்கிக்கொண்டு அற்புதமாக நடித்திருந்தார். நீதிமன்றத்தில் வாதிடும் காட்சிகளில் அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் நமக்கு நெகிழ்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தின. சூர்யாவின் நட்சத்திரப் பிம்பம் கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்க்கிறது என்றாலும், சற்று நேரத்திலேயே அந்தப் பிம்பம் மறைந்து ஒரு தீவிரமான போராளியாகவே நமக்குத் தோன்றினார்.

ஜெய்பீம்

செங்கேணியாக நடித்த லிஜோமோல் ஜோஸ், இந்தப் படத்தின் பெரும் பலமாக அமைந்தார். கணவனைத் தேடி அலைகிற, காவல் நிலையத்தில் அவமானப்படுத்தப்படுகிற, நீதிக்காகப் போராடுகிற ஒரு பழங்குடிப் பெண்ணின் வலியையும் உறுதியையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கில் அரசுத் தரப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையில் டிஜிபியின் முன்னால் சமரசத்துக்காக அழைத்து வரப்படுகிறாள் செங்கேணி.

’இந்தக் கேஸில் வெற்றியடைந்து நீங்கள் என்ன சாதித்துவிட முடியும்? உங்கள் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்துக்குப் போதுமான பணத்தை ஏற்பாடு செய்து தருகிறோம். யோசித்து முடிவெடுங்கள்’ என்கிறார் டிஜிபி.

’எங்களைச் சாவடிச்சாலும் ஏன்னு கேட்க நாதியில்லதான். அதுக்குன்னு கொலகாரங்க குடுக்குற பணத்துல எங்களால சோறு திங்கமுடியாது சார். இந்தக் கேசுல தோத்தாலும் பரவாயில்ல. போராடித் தோத்தேன்னு புள்ளைங்ககிட்ட சொல்லிக்கிறேன்’ என்று உறுதியாக நிற்கும் செங்கேணியாய் லிஜோமோல் நம்மைக் கலங்க வைக்கிறார்.

ராசாக்கண்ணுவாக நடித்த மணிகண்டன், மனைவியின் மீதான காதலும், மழைநீரால் இடிந்துவிழும் மண்சுவரை மாற்றி அவளுக்கு ஒரு செங்கல் வீடு கட்டித்தர வேண்டும் எனும் கனவுமாய் வாழும் ஓர் அப்பாவி இளைஞனாக வருகிறார். அதிகாரத்தின் கோரப்பிடிக்கு முன்னால் அஞ்சி நிற்கும் நிலையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்துவரும் மணிகண்டனை முதலில் பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சேர்த்தது ராசாக்கண்ணுதான். மித்ராவாக வரும் ரஜிஷா விஜயன், காவல்துறை அதிகாரிகளாக பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைமை அரசு வழக்கறிஞராக ராவ் ரமேஷ், மனசாட்சியற்ற எஸ்.ஐ குருமூர்த்தியாக தமிழ் மற்றும் பல்வேறு முக்கியப் பாத்திரங்களில் குரு சோமசுந்தரம், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், சுஜாதா, பவா செல்லத்துரை முதலானோரும் நடித்திருந்தார்கள்.

ஜெய்பீம் படத்தில் நடித்தவர்கள்

எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு, படத்தின் யதார்த்தத் தன்மையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. 1990-களின் தொடக்கத்தில் நடக்கும் கதையாதலால், கலை இயக்குநர் கே. கதிரின் பங்களிப்பும் இன்றியமையாததாக அமைந்திருந்தது. பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள், காவல் நிலையம், நீதிமன்றம், மக்கள் நெருக்கடியற்ற சென்னையின் காமராசர் சாலை என ஒவ்வொரு இடமும் கவனமாக உருவாக்கப்பட்டிருந்தன, சிறப்புற படமாக்கப்பட்டிருந்தன.

ஷான் ரோல்டனின் பின்னணி இசை, படத்தின் உணர்ச்சிகளைத் தாங்கி நின்ற மற்றொரு முக்கியமான அம்சம். பாடல்கள் கதையோடு இணைந்து பயணித்தன. யுகபாரதி எழுதி அனந்து, கல்யாணி நாயர் பாடிய ’செண்டுமல்லியா மனசுல மணக்குற நீ’ எனும் பாடல் ராசாக்கண்ணுவுக்கும், செங்கேணிக்கும் இடையிலான உறவைப் பாடியது. அவனைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் செங்கேணியின் நாட்களின் வலியை யுகபாரதி எழுதி, ஷான் ரோல்டன் பாடிய ’பொல்லாத உலகத்திலே’ வெளிப்படுத்தியது. யுகபாரதியின் ’மண்ணிலே ஈரமுண்டு’ கவிதை வரிகளை வைக்கம் விஜயலட்சுமி பாடியிருந்தார். அந்தப் பாடல் படத்தின் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு செங்கேணியின் கண்ணீர் மழையோடு சேர்ந்து கலந்தோடும் பொழுதினில் ஒலித்து நம் மனமெங்கும் நிறைகிறது.

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்காக ஜெய்பீமை தயாரித்தவர்கள் ஜோதிகா மற்றும் சூர்யா. திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருந்தவர் த.செ.ஞானவேல். சூர்யா நடித்த ரத்தச்சரித்திரம் படத்தின் வசனகர்த்தாவாக திரைத்துறைக்குள் வந்த ஞானவேல் 2017-ல் வெளியான ’கூட்டத்தில் ஒருவன்’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். ஜெய்பீம் இவருக்கு இரண்டாவது படமாக அமைந்தது. கொரோனா நெருக்கடியில் தியேட்டரில் வெளியாக முடியாத சூழலில், ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது ஜெய்பீம். சிறந்த படம், சிறந்த நடிகை, நடிகர், இயக்குநர் பிரிவுகளில் பன்னாட்டு திரைவிழா விருதுகள், தமிழ்நாடு அரசின் திரைவிருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை படம் குவித்தது.

வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் வரவுக்குப் பிறகு பெருமளவில் தமிழ் சினிமா தலித் அரசியலைப் பேசும் ஊடகமாக மாறியிருக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும், பகுதியாகவும் பல படங்களில் தலித் அரசியலை இவர்கள் பேசியிருந்தாலும் பெரும்பாலும் அவை முழுமையடையாத முயற்சிகள் எனும் தன்மையையே கொண்டிருந்தன. இதில் அவற்றைக் குறை சொல்லும் நோக்கம் நமக்கில்லை, மாறாக ஜெய்பீமுக்கான பாதை அமைத்துக் கொடுத்தவை அவையே, இதுவோர் கலை இயக்கத்தின் (Cinema Movement) தொடர்ச்சி என்றுதான் உயர்த்திப் பிடிக்கிறோம். அந்த அளவுக்கு முழுமையான ஆக்கமாக த.செ.ஞானவேலின் இந்த ’ஜெய்பீம்’ அமைந்திருந்தது.

ஜெய்பீம் படத்தில் நடிகர் சூர்யா

இந்தச் சமூகத்தால், சக மனிதர்களால் பட்டியலினத்தவர் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகிறார்கள், வன்மத்துக்கு ஆளாகிறார்கள் என்று கடிவாளம் கட்டிய குதிரையாய் ஒரே திசையில் சிந்தித்துக் கொண்டிருந்த நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஜெய்பீம். அதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை, இந்த சர்வாதிகாரமிக்க அரசு எந்திரத்தால் இருளர், குறவர், ஒட்டர் முதலான பழங்குடியின மலைவாழ் மக்கள் எப்படியெல்லாம் துச்சமாக நடத்தப்படுகிறார்கள், அவர்களின் உயிரும், உடமைகளும், தன்மானமும் எத்தனை மலிவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது கண்டு துடித்துப் போகிறோம். அத்தனை நேரமும், அவர்கள் காவல்துறையின் சோம்பலுக்கு முன்பாக, எளிமையான சந்தேகத்துக்கு இலக்காகிவிட்ட துரதிருஷ்டசாலிகள், பாவம் எனும் எண்ணமும் கூட ஒரு மூலையில் இருந்தது. ஆனால், எஸ்.ஐ குருமூர்த்தி கொள்ளைக் கும்பலுடன் கரம் கோத்துக்கொண்டு, தெரிந்தேதான் இந்த அநீதியை இழைத்திருக்கிறான் என்று தெரியவரும் போது, நமக்கு சக மனிதர்கள் மீதான நம்பிக்கையே ஆட்டம் கண்டுவிடுகிறது.

போலவே, பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகளுக்கு படம் சொல்லும் தீர்வுகள் முதிர்ச்சியானவை மற்றும் நம்பிக்கை தருபவை. மக்கள் மன்றத்துக்கு முன்பான அறவழித் தெருமுனைப் போராட்டங்களையும், நீதிமன்றத்தில் சட்டப் போராட்டங்களையும் ஜெய்பீம் தீர்வாக முன்னிறுத்துகிறது. அசுரன், கர்ணன் போன்று இது வன்முறையைத் தீர்வாக்கவில்லை.

எல்லாவற்றையும் தாண்டி இப்படியான தீவிர அரசியல் பேசும் படங்கள் என்றாலே விறுவிறுப்பு சற்று கேள்விக்குறியாகி விடுவது சகஜம்தான். ஆனால், அதையும் உடைத்து ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பார்க்கிற விறுவிறுப்போடு ஜெய்பீம் உருவாக்கப்பட்டிருந்தது. ஓர் இடத்தில், அட்வகேட் ஜெனரல் நேரடியாக வாதாடுவதற்காக களமிறங்கிய காட்சியில், சந்துருவின் குறுக்கு விசாரணையால் போலீசாரின் பொய்கள் வெளிப்படுகின்றன. அப்போது சூர்யா ஆர்ப்பாட்டமாக ’சிபிஐ’ விசாரணை கோரும் இடமெல்லாம் புல்லரிப்பை ஏற்படுத்தும் கணங்களுள் ஒன்று.

இறுதிக் காட்சியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நாளிதழ் வாசிக்கும் சந்துருவுக்கு முன்பாக, இன்னொரு நாளிதழை எடுத்துக்கொண்டு கம்பீரமாக அமர்கிறாள் சிறுமி அல்லி. அவளுக்கு அப்படியொரு இடத்தைக் கொடுத்ததன் மூலமாக, தமிழின் தரமான படங்களின் வரிசையில் தனக்கென கம்பீரமான ஓர் இடத்தை உறுதி செய்துகொள்கிறது ஜெய்பீம்!

விஜய் ஆண்டனி ஏன் செருப்பு அணிவதில்லை?- எமோஷனலாக விளக்கம் அளித்த மனைவி

மு.மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'அப்பா குட்டி'. நவம்பர் 20ம் தேதி இந்தப் படம் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (நவ.1... மேலும் பார்க்க

O.M: "அவனுக்கு எவ்ளோ திமிர் பார் எனத் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு தனுஷ் விளக்கம்

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன் காதலர்களாக நடித்த 'தேரே இஷ்க் மெய்ன்' பாலிவுட் படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் பட விளம்பர நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்த த... மேலும் பார்க்க

O.M: "இதெல்லாம் ஒரு Role-ஆ?" - மம்மூட்டியின் பேச்சைக் கேட்டு குலுங்கிச் சிரித்த தனுஷ்

'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓம்'. இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சா... மேலும் பார்க்க

"விஜய் அரசியலுக்குப் போயிட்டு நடிக்க மாட்டேங்கிறார்; அதனால நீங்க..."- தனுஷுக்கு சாய் பல்லவி கோரிக்கை

'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓம்'. இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சா... மேலும் பார்க்க

ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவைக் கரம்பிடித்த நடிகை மிருணாளினி ரவி - வைரலாகும் புகைப்படங்கள்| Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

தேர்வுக்குழுவை புறக்கணித்த‌து ஏன்? திரைப்பட மானியம் வழங்கிய‌தில் முறைகேடா? கவனிப்பாரா ராஜ்மோகன்?

குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மானியம் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் ... மேலும் பார்க்க