விஜய்க்கு நோ சொன்ன சிவக்குமார்; தமிழ்நாட்டிலேயே கிளம்பிய எதிர்ப்பு - என்ன செய்யப...
டாஸ்மாக் : `நிபந்தனைகளை மீறினால், உடனடி ரத்து' - செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன்!
டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் மற்றும் பார்கள் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவரை இடைப்பட்ட காலத்தில் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ள நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்கவும் ஆணை பிறப்பித்துள்ளனர்.
கடந்த 2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், டாஸ்மாக் கொள்முதல், பார் ஒதுக்கீடு மற்றும் சட்டவிரோத பார் செயல்பாடுகள் மூலமாகச் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாகக் கடந்த ஜூலை 28 அன்று செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. காலை இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டது.
முன்னதாக இந்த வழக்கில் வழக்கறிஞராக ஆஜராகியிருந்ததால், இயற்கை நீதி அடிப்படையில் வழக்கிலிருந்து தாம் விலகுவதாக நீதிபதி வி. மோகனா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு மறுவிசாரணை நடைபெற்றது.
நீதிமன்றத்தில் நடைபெற்ற பரபரப்பான வாதங்களின் போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்:
``2021 முதல் 2025 வரை உள்ள விவகாரங்களில் ஏற்கனவே முதற்கட்ட விசாரணைகள் அனைத்தும் நடத்தப்பட்டுவிட்டன.
தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ஏற்கனவே முடிந்த விவகாரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் தொடங்கியுள்ளனர்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறை தற்போது புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளது. " என்றார்.
இதற்குத் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார்.

``2021-2025 காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட நபரே அமைச்சராக இருந்தார். அப்போது வழக்கு பதிவு செய்யப்படாமல் அவரே தடுத்து வைத்திருந்தார். ஆட்சி மாற்றத்திற்குப் பின், முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகள் மீது நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை.
இந்த டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. செந்தில் பாலாஜி இதுவரை எந்தெந்தத் துறைகளுக்கெல்லாம் அமைச்சராக இருந்தாரோ, அந்த அத்தனை துறைகளிலும் குற்ற வழக்குகளைச் சந்தித்துத் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும் நபராகவே இருக்கிறார்.
அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது; விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இழுத்தடிப்பார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு தெரிவித்ததாவது:
"விசாரணையின் போது அவர் தலையிடாமல் இருப்பதையும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்? விசாரணைக்குத் தேவைப்பட்டால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம்" இவ்வாறு கூறிய நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்குக் பின்வரும் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இடைப்பட்ட காலத்தில் செந்தில் பாலாஜியைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனு தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். சாட்சிகள் மீது எந்தவித ஆதிக்கமும் செலுத்தக் கூடாது; வழக்கு விசாரணையில் தலையிடக் கூடாது.

நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளை மீறினால், அவரது முன்ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படும். இடைப்பட்ட காலத்தில் இந்த விவகாரத்தில் ஏதேனும் நிவாரணம் பெற விரும்பினாலோ அல்லது நீதிமன்றத்தின் கவனத்திற்குத் தெரிவிக்க விரும்பினாலோ லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், "வழக்கு விசாரணைக்குச் செந்தில் பாலாஜி தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவார்; அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். ஏற்கனவே அவரது பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால் அவர் வெளிநாடு செல்வதற்கும் வாய்ப்பில்லை" என நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.















