திமுக ஆர்ப்பாட்டம்:``பவுடர் அமைச்சர், டவுசர் அமைச்சரை வச்சிட்டு எங்களை சொல்றீங்க...
தங்கம் வென்ற மதுரா; வைரலாகும் கியா பானர்ஜி: நிறத்தின் அடிப்படையில் பாராட்டு? எதை நோக்கி செல்கிறோம்?
சமூக வலைதளங்களில் ஒரு தடகள வீரர் அல்லது வீராங்கனை சாதனைகளைப் படைக்கும்போது, அந்த வெற்றிகள் எந்த அளவிற்கு கொண்டாடப்படுகின்றன என்பது பல நேரங்களில் அவர்களின் திறமையை மையப்படுத்தியதாக மட்டும் இருப்பதில்லை. மாறாக, அவர்களின் புறத்தோற்றம், நிறம் மற்றும் அழகு சார்ந்தவையாக இருக்கின்றன.
தென்னாப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடைபெற்ற 2026 ஐ.பி.எஃப் உலக சப்-ஜூனியர் பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை மதுரா கர் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியனாக வரலாறு படைத்திருக்கிறார்.

மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரியைச் சேர்ந்த 17 வயதான மதுரா கர் 52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று தனது உடல் எடையை விட பல மடங்கு அதிக எடையைத் தூக்கி சாதனைப் படைத்திருக்கிறார்.
மறுபுறம் அதே ஐ.பி.எஃப் உலக சப்-ஜூனியர் பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கியா குனால் பானர்ஜி 47 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறார்.
ஆனால் மதுராவுக்கு கிடைக்கும் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் விட கியாவுக்கு கிடைத்த பாராட்டுகளும் அங்கீகாரமும் அதிகம். கியாவின் புகைப்படங்களும், வீடியோக்களும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் கொண்டாடப்பட்டிருக்கின்றன.
ஒரு வீராங்கனை தங்கம் வென்று உச்சத்தை தொட்டாலும், மற்றொரு வீராங்கனைக்குக் கிடைக்கும் கவனமும், கொண்டாட்டமும் நிறத்தின் அடிப்படையிலான வர்க்க மற்றும் அழகியல் பாகுபாடுகளை மிக அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தங்கம் வென்ற வீராங்கனைக்குத் தரப்பட வேண்டிய முதலிடத்துக்கான அங்கீகாரம், தோற்றத்தின் அடிப்படையில் மற்றொருவருக்குக் கொடுக்கப்படுவது என்பது கடுமையான உழைப்பைக் கேலி செய்வதற்குச் சமம்.
திறமையை விட வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், கடின உழைப்பால் உச்சத்தை அடைந்தவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். இது அவர்களின் உழைப்புக்கு இழைக்கப்படும் பெரிய அவமரியாதை.
திறமையைக் காட்டிலும் தோற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும் இந்த மனநிலை, பல இளம் விளையாட்டு வீரர்களை மனதளவில் சோர்ந்துபோகச் செய்யும்.
இது வெறும் தனிப்பட்ட ஒரு நபருக்கான புறக்கணிப்பு அல்ல; மாறாக, நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நிறவெறியின் நீட்சி.
சர்வதேச அல்லது தேசிய மேடைகளில் தேசியக்கொடியை உயர்த்தும் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் மரியாதை அவர்கள் வென்ற பதக்கத்தின் தரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, அவர்கள் நிறத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது.

சமூக வலைதளப்பக்கங்களும், ஊடகங்களும், பொதுமக்களும் பாராட்டுதல்களை வழங்கும் போது நிறம் மற்றும் தோற்றப் பாகுபாடுகளைக் கடந்து, உழைப்பிற்கு மட்டுமே முதலிடம் வழங்க வேண்டும்.
ஒருவரின் தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அவர்களது சாதனை மட்டுமே பேசப்பட வேண்டும். கொண்டாடப்பட வேண்டும்!

















