`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' - ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என...
தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் - சிரமத்தில் வியாபாரிகள்!
தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் மூன்று கழிவறைகள் கட்டப்பட்டிருந்தும் ஒன்றுகூட பயன்பாட்டில் இல்லை என அப்பகுதி மக்கள் கூறியதையடுத்து, அங்கு சென்று அப்பகுதி மக்களிடம் இது குறித்து கேட்டறிந்தோம்.

நம்மிடம் பேசியவர்கள், "தஞ்சாவூர்ல மிக பழைமையான மார்கெட் என்றால் அது காமராசர் மார்கெட்தான். இது சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ₹20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் நவீனமயமாக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு புதிய பொலிவுடன் கட்டப்பட்டது. ஆனால், இங்கு ஒன்றுக்கு மூன்று கழிவறைகள் இருந்தும், ஒன்றுகூட இப்போது பயன்பாட்டில் இல்லை. இங்கு ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து போகிறார்கள். இங்கு 500-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. காய்கறி, பழக்கடை, பல்பொருள் அங்காடி என அனைத்து கடைகளும் இங்கு இருக்கிறது. இந்த முக்கியமான இடத்தில் பொதுக் கழிவறை இருந்தும் பயன்பாடின்றி இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.
இங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் மைதானத்தில்தான் இயற்கை உபாதைகளை கழிக்கிறோம். ஆண்கள்கூட எப்படியாவது சமாளித்துக் கொள்கிறோம். ஆனால் இங்குள்ள பெண்கள்தான் ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியே கழிவறை இருந்தும், பயன்பாடு இன்றி பூட்டியே இருக்கிறது. புது கழிவறை கட்டி மூன்று ஆண்டுகளாகிறது. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை.

இப்போது புது கழிவறை முன்புறம் பார்க்கிங் இடமா போச்சு. ஏற்கெனவே இருந்த கழிவறையும் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. நாங்களும் அதிகாரிகளிடம் கழிவறைகளை திறக்கக் கோரிக்கை விடுத்தோம். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகள் இவ்வளவு பேர் இங்கு இருக்கிறோம்... அவசரத்துக்கு என்ன செய்வோம்? எங்களோட சிரமம் அதிகாரிகளுக்கு புரியவில்லை. இங்கிருக்கிற கழிவறைகளை உடனடியாக சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.














