Share Market: 'நல்ல காலம் பொறக்குது?' இப்போவே 'இதை' நோட் பண்ணி வையுங்க முதலீட்டா...
`தனித்துப் போட்டியிட்டு திமுகவுக்குப் பாடம் புகட்டுவோம்!' கூட்டணியிலிருந்து வெளியேறும் வேல்முருகன்?
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
த.வா.க-வுக்குள் என்ன நடக்கிறதென விசாரித்தோம்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் ஐக்கியமானார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். அப்போதே ஒரு எம்.பி சீட் கேட்ட அவருக்கு 2021-ல் ஒரேயொரு எம்.எல்.ஏ சீட்டைக் கொடுத்து ஆஃப் செய்தது தி.மு.க.
அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு எம்.பி சீட் கேட்ட அவருக்கு 2026-லும் ஒரேயொரு எம்.எல்.ஏ சீட்டைத் தர முன்வந்திருக்கிறது. இதனால் கடும் கொந்தளிப்பில் காணப்படுகிறது த.வா.க.

நம்மிடம் பேசிய அந்தக் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள், “சாதிக் கட்சியாக நாங்கள் செயல்படவில்லை என்றாலும், வடமாவட்டங்களில் வன்னியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் வேல்முருகன். தி.மு.க கூட்டணியில் இணைந்த இந்த 8 ஆண்டுகளில் வடமாவட்டங்களில் பா.ம.க-வுக்கு இணையான கிளைக் கட்டமைப்பை உறுதி செய்திருக்கிறோம்.
எதற்காக தி.மு.க-வுக்காக நாம் உழைக்க வேண்டும்?
ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதிப் பங்கீட்டின்போது எங்களை அவமானப்படுத்துகிறார்கள். மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகள் எனப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், வேல்முருகனைவிட கமல்ஹாசன் என்ன அரசியல் செய்துவிட்டார்...
கட்சியே நடத்தாமல் லெட்டர் பேடு மட்டும் வைத்திருக்கும் பலருக்கு ஒரு சீட் தர முன்வந்திருக்கிறது. ஆனால் எங்களுக்கு இரு சீட் தர யோசிக்கிறார்கள்” எனக் குமுறினர்.

தொட்டர்ந்து பேசியவர்கள், "பண்ruட்டி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் எங்கள் தலைவர் வேல்முருகன். இந்தமுறை அவர் போட்டியிட நெய்வேலி தொகுதியையும் கூடுதலாக ஒரு தொகுதியையும் கேட்டோம். ஆனால், மீண்டும் ஒரு தொகுதியை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.
அதுவும் அண்ணன் வேல்முருகனை பண்ருட்டியிலேயே நிற்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். கேட்கும் எண்ணிக்கையையும் தர மறுக்கிறார்கள்.. கேட்கும் தொகுதியையும் தர மறுக்கிறார்கள் என்கிறபோது எதற்காக தி.மு.க-வுக்காக நாம் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தலைமை முதல் கீழ்மட்ட பொறுப்பாளர்கள்வரை எழுந்திருக்கிறது.
தொகுதி ஒதுக்கீட்டில்தான் பாரபட்சம் காட்டுகிறார்கள், எங்களின் கோரிக்கையையாவது நிறைவேற்றுங்கள் என, சாதிவாரிக் கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மீது நடவடிக்கை, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, சுங்கச்சாவடிகள் அகற்றுதல், தமிழ்நாட்டில் 90 சதவிகிதம் மாநில மக்களுக்கே வேலைவாய்ப்பை உறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம். அதைப் பரிசீலிக்கவும் மறுக்கிறார்கள். பிறகு எதற்கு நாங்கள் கூட்டணியில் இருக்கவேண்டும். அதனால்தான் தனித்துப் போட்டி என்கிற முடிவை எடுத்திருக்கிறோம்'' என்கிறார்கள்.
திருமாவிடம் கேட்டால், சொல்வார்.!
நம்மிடம் பேசிய தலைமைக்கு நெருக்கமானவர்கள், "எங்களை தி.மு.க மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது. பா.ம.க கூட்டணியில் இல்லாத நிலையில் எங்கள் தலைவரின் பிரசாரம்தான் வன்னியர்களின் வாக்குகளைப் பெற தி.மு.கவுக்கு உதவுகிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற அண்ணன் திருமாவிடம் கேட்டால் அவரே சொல்வார்.
கடலூர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் எங்களுக்கு வலுவான கட்டமைப்பு இருக்கிறது. நாங்கள் வலுவாக உள்ள மாவட்டங்களில் பத்து முதல் 15 ஆயிரம் வாக்குகளையும் மற்ற இடங்களில் மூன்று முதல் ஐந்து ஆயிரம் வாக்குகளையும் கண்டிப்பாகப் பெறுவோம்.
நான்குமுனைப் போட்டியில், வெற்றி, தோல்வி ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகளில்தான் தீர்மானிக்கப்படவிருக்கிறது. கண்டிப்பாக தி.மு.கவின் வெற்றியைப் பறிக்கும் வாக்குகளாக எங்கள் வாக்குகள் இருக்கும். அப்போதாவது அவர்களுக்கு எங்களின் வலிமை புரியும்'' என்கிறார்கள்.

"தனித்துப் போட்டி என எப்போது அறிவிப்பீர்கள்?" என அவர்களிடமே கேட்டோம், "2 தொகுதிகளையும், நாங்கள் கேட்கும் தொகுதிகளையும் தி.மு.க தர முன்வந்தால் கூட்டணியில் தொடர்வோம். மார்ச் 22-ம் தேதி மாலைவரை தி.மு.க-வுக்கு கெடு, இல்லையென்றால் தனித்துப் போட்டி என தலைமை அறிவிக்கும்" என்றனர்.
















