Q3 RESULTS: JSW Steel, Adani Green, Cipla, Indico, KVB – Important Updates | IPS...
தனுஷ்கோடி வந்தடைந்த நுகர்வோர் விழிப்புணர்வு பயணம்; நாடு முழுவதும் 36 ஆயிரம் கி.மீ. பயணிக்கிறது!
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சம்மேளனத்தின் சார்பில் நுகர்வோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாரத் யாத்ரா பயணம் நடைபெறுகிறது.
புது டெல்லியில் இருந்து கடந்த டிசம்பர் 24ல் இப்பயணம் துவங்கியது. இந்தப் பிரசாரப் பயணம் நாடு முழுவதும் சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளது. இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் சார்பில் துவங்கப்பட்ட பிரசாரப் பயணம் ஜெய்ப்பூர், குஜராத், மும்பை, கோவா, கேரளா வழியாக தமிழ்நாடு வந்தடைந்தது.
9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து இந்தப் பிரசார யாத்திரை ஜனவரி 21 ஆம் தேதி ராமேஸ்வரம் வந்தடைந்தது. நேற்று முன்தினம் காலை தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து மீண்டும் பயணத்தைத் துவக்கியது.
இந்த விழிப்புணர்வு பிரசார வேன் பயணத்தை ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் நாசர்கான் துவக்கி வைத்தார். இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஆனந்த் சர்மா, செயல் தலைவர் செல்வராஜ், அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை இயக்குநர் ஷேக்சலீம், தேசிய செயலாளர் திருநாவுக்கரசு, ராமேஸ்வரம் மண்டலத் தலைவர் அசோகன் ஆகியோர் பிரசார யாத்திரை குறித்து விளக்கவுரை ஆற்றினர்.
மேலும் அப்பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள், பெண்களிடையே துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து பிரசாரம் செய்யப்பட்டது. தனுஷ்கோடி மக்கள் சார்பில் அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராமேஸ்வரம் பாரத ரத்னா டாக்டர் ஏபிஜெ. அப்துல் கலாம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் ரமேஷ் குமார் தலைமையில் மாணவர்களுக்கான நுகர்வோர் பயிற்சி வழங்கப்பட்டது. நுகர்வோர் உரிமைகள் குறித்து டாக்டர் அனந்த்சர்மா விளக்கிப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பாம்பன் அன்னை கொலஸ்டிகா கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு பயிற்சிக்கு முதல்வர் சிஸ்டர் ஆன்னி பெர்பட் சோபியா தலைமை வகித்தார்.
செயலாளர் சிஸ்டர் ரூபி வரவேற்றார். தேசியத் தலைவர் ஆனந்த் சர்மா, செயல் தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். இந்நிகழ்வுகளில் சிசிஐ ராமேஸ்வரம் மண்டலம் நிர்வாகிகள் முருகன், முத்துக்குமார், களஞ்சியம், பாண்டி, ஜான் போஸ், கல்லூரி நுகர்வோர் குடிமக்கள் மன்ற பொறுப்பு அலுவலர்கள் அழகர் ராஜா, ஜுகிலியோன், பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
















