தேமுதிக: ``2026 தேர்தலுக்குத் தயார், 234 தொகுதியும் எங்கள் இலக்கு" - பிரேமலதா கொ...
"திமுக கூட்டணி கட்சிகள் இன்று அடிமைகளாக செயல்பட்டு வருகின்றன" - சொல்கிறார் செல்லூர் ராஜூ
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "மதுரை மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் இல்லாமல் தற்போது ஸ்தம்பித்துப் போயுள்ளது. இதன் காரணமாக இரண்டு மாமன்ற கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
துணை மேயர் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்? திமுகவைச் சேர்ந்த 63 மாமன்ற உறுப்பினர்கள் இருந்தும் மாநகராட்சி நிர்வாகம் முறையாக செயல்படவில்லை. கடந்த இரண்டு மாமன்ற கூட்டங்களில் வரிவிதிப்பு குழுத் தலைவர், நகரமைப்பு குழுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய குழுத் தலைவர்கள் நியமிக்கப்படாமல் நான்கு மாதங்கள் கடந்து விட்டது.

மதுரை மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை மாமன்ற கூட்டங்களில் எடுத்துச் சொல்லும் வாய்ப்பை அதிமுக மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களிடமிருந்து இந்த அரசு பறித்து வருகிறது, மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.
மாநகராட்சியில் ஏற்கனவே 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது, அந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு ஐஜி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டும் நீதிமன்றம் அமைத்த அந்த விசாரணைக் குழு ஒரு வாரம் மட்டுமே பணியாற்றியது.
மேயரின் கணவர் கண் துடைப்புக்காக கைது செய்யப்பட்டார்; ஆனால் மேயர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாநகராட்சி ஆணையர் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் தற்போது தமிழக அரசின் அடிமையாக மாறி செயல்படுகிறார்.
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 100 வார்டுகளுக்கும் 24 மணி நேர குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த தண்ணீர் சாக்கடையுடன் கலந்து வருகிறது
2.5 லட்சம் குடியிருப்புகளுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை, பல இடங்களில் குழாய்கள் முறையாக பதிக்கப்படவில்லை, சில வீடுகளுக்கு திட்டமே சென்றடையவில்லை
மேலும், டவுன் பிளான் அலுவலகத்தில் பெரும் முறைகேடுகள் நடைபெறுகின்றன, யார் தவறு செய்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

மதுரை 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என அமைச்சர் மூர்த்தி கூறுவது ஆச்சரியமாக உள்ளது, மந்திரத்தில் மாங்காய் பறிக்கப் போகிறார்களா? தங்கத்தை கொடுத்தாலும் மதுரை மக்கள் திமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்.
மதுரை மக்களுக்கு தமிழக அரசு என்ன செய்துள்ளது? அதிமுகவை பார்த்து தமிழக முதல்வருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. முதல்வரும் துணை முதல்வரும் என்ன பேசினாலும் அடுத்த ஆட்சி அதிமுகதான்.
அனைத்து அலுவலகங்களிலும் இ.டி ரெய்டுகள் நடைபெற்று வருகிறது. அரசு நலத்திட்டங்கள் கிழக்கு தொகுதியில் மட்டுமே நடைபெறுகின்றன, மற்ற தொகுதிகளில் ஏன் நடத்தப்படவில்லை ?
திமுக கூட்டணி கட்சிகள் இன்று திமுக அடிமைகளாக செயல்பட்டு வருகிறது, அவர்கள் எங்களைப் பார்த்து அடிமைகள் எனக் கூறலாமா? தவெக - அதிமுக கூட்டணி குறித்து பொதுச்செயலாளரிடம் கேட்டு சொல்கிறேன்.
இன்னைக்கு யார் யார் மீதோ மக்களுக்கு வெறி என்று சொல்கிறார்கள், ஆனால் உண்மையான வெறி, பற்று எம்ஜிஆர் மீது மக்களுக்கு இருந்தது. அதனால்தான் எம்ஜிஆர் குடித்த சோடாவை குடிப்பதற்கு மக்கள் போட்டி போட்டார்கள். அதையெல்லாம் ஏளனமாக விமர்சனம் செய்கிறது திமுக. எம்ஜிஆர் எங்கள் பெரியப்பா என்று கூறியவர் முதல்வர் ஸ்டாலின், உங்கள் பெரியப்பாவை நீங்களே விமர்சனம் செய்யலாமா? முதல்வர் கிட்ட இந்த கேள்வியை கேளுங்க" என்றவர்,
'ஓபிஎஸ், டிடிவி அதிமுகவில் மீண்டும் இணைவார்களா? என்ற கேள்விக்கும், கூட்டணி குறித்த கேள்விக்கும் "தலைமை தான் முடிவு எடுக்கும்" என்றார்.











