திண்டுக்கல்: மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் `சிறுமலை பல்லுயிர...
`திமுகவில் பொன்முடி ஓரம் கட்டப்பட்டதற்கு காரணமே சி.வி.சண்முகம் தான்!’ - பின்னணியை உடைக்கும் அதிமுக
`சிகரெட் பற்ற வைத்து முகத்தில் புகையை ஊதுவார்..’
விழுப்புரம் அ.தி.மு.க-வின் தெற்கு நகரச் செயலாளராக இருந்த பசுபதி, கடந்த மார்ச் மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதுடன், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். தொடர்ந்து, `வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் தொடர்பான விஷயங்களில் சி.வி.சண்முகம் தன்னிச்சையாக செயல்படுகிறார்.
மேலும், விழுப்புரம் அ.தி.மு.க-வில் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணனின் தலையீடு அதிகமாகிவிட்டது. கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிகரெட் பற்ற வைக்கும் ராதாகிருஷ்ணன், அதன் புகையை கட்சி நிர்வாகிகள் முகத்தில் ஊதுகிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் மற்றும் பட்டியல் சமூக மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஆனால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட ஒன்றியச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால் மிகக் குறைந்த அளவில் இருக்கும் உடையார் சமூகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு அந்தப் பதவியை வழங்கியிருக்கிறார்.
இப்படிப்பட்ட காரணங்களால்தான் நான் கட்சியில் இருந்து விலகுகிறேன். ஆனால் கட்சி மாறமாட்டேன். நானும் என் ஆதரவாளர்களும் அ.தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்போம். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவதற்காக பாடுபடுவோம்" என்று பேசியிருந்தார்.
அதற்கடுத்த மறுநாள் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் அறிவிப்பு வெளியானது.
`எம்.ஜி.ஆருக்கு செய்யப்பட்ட துரோகம்’
தேர்தலுக்குப் பிறகு சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க தனி அணியாக செயல்படத் தொடங்கியது. அப்போது அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடியைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்த பசுபதி, மீண்டும் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில்தான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்த சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல சீனியர்களின் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமி, அவர்களின் எதிரணியினருக்கு வழங்கினார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பசுபதி தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ``அ.தி.மு.க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி போன்றவர்களின் வரலாறு தெரியாமல், நாம் போய் ஒருவருக்கு முட்டுக் கொடுக்கலாமா ?

ஆனால், `தி.மு.க நமக்கு ஆதரவு கொடுத்தால் நம் மனைவி பிள்ளைகள் நம்மை வீட்டில் சேர்ப்பார்களா?' என்று இவர் (முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்) கேட்டாராம். 1981-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திண்டிவனம் தொகுதியில் ராஜாராம் என்பவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.
அப்போது இந்த சி.வி.சண்முகத்தின் அப்பா வேணுகோபாலும், அவரது குடும்பத்தினரும் தி.மு.க-வுக்கு தேர்தல் வேலைகளை செய்தனர். அந்த தேர்தல் பிரசாரத்திற்கு திண்டிவனம் வந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இந்த விவகாரம் குறித்து வேணுகோபாலை அழைத்துக் கேட்டார்.
அதற்கு நான் அப்படித்தான் செய்வேன் என்று எம்.ஜி.ஆரிடம் சொன்னவர் வேணுகோபால். அப்போது, `இந்த துரோகியை கட்சியை விட்டு நீக்கிவிட்டுத்தான் பொதுக்கூட்டத்தில் பேசுவேன்' என்று சொல்லிவிட்டு வேணுகோபாலை நீக்கினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
தி.மு.க-வில் ஏன் பொன்முடி ஓரம் கட்டப்பட்டார்?
அதேபோல வேணுகோபால் நீக்கப்பட்ட விவகாரம் அன்றைய தினம் மாலையே செய்தித்தாள்களில் வெளியானது. அதன்பிறகுதான் திண்டிவனத்தில் பேசிவிட்டுச் சென்றார் எம்.ஜி.ஆர் அவர்கள். அதையடுத்து மீண்டும் தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு வேணுகோபால் எவ்வளவோ கேட்டும், எம்.ஜி.ஆர் அவர்கள் மறுத்துவிட்டார்.
ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று கட்சி துண்டறிக்கைகளை கிழித்துப் போட்டுக் கொளுத்திவிட்டு, எம்.ஜி.ஆர் மீதே மண்ணை வாரி வீசிவிட்டு வந்த குடும்பம் உங்களுடையது.
அதுமட்டுமா… அதன்பிறகு 1989 சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மாசிலாமணிக்குத்தான் உங்கள் குடும்பமே ஓட்டு போட்டது. அதை நான் சத்தியம் செய்து சொல்கிறேன். ஆனால் உன்னால் அப்படி சத்தியம் செய்து சொல்ல முடியுமா ?

உன் அண்ணனுக்கு எப்படி வேலை வாங்கினீர்கள் ? உன்னால் அசிங்கப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட செஞ்சி ராமச்சந்திரன் மூலமாக, மறைந்த கலைஞர் கருணாநிதியைப் பார்த்துதான் வேலை வாங்கினீர்கள். பொங்கலூர் பழனிசாமி என்ற அமைச்சரிடம்தான் உன் அண்ணன் வேலை செய்தார்.
தி.மு.க-வுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லையா ? நீ யோக்கியமா ? சரி பழைய கதையை விடுவோம். தி.மு.க-வில் பொன்முடியை ஏன் ஓரம் கட்டினார்கள் ?
பொன்முடியுடன் நீ எவ்வளவு உறவாடினாய்… அரகண்டநல்லூரில் இருவரும் ஒரே காரில் இருந்து இறங்கி, பொன்முடியின் தோள் மீது கைபோட்டுக் கொண்டு பேசியது எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ சட்டத்துறை அமைச்சராக இருக்கும்போதுதான் செம்மண் குவாரி வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கின் சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாறினார்கள்.
`பொன்முடியுடன் உனக்கிருக்கும் தொடர்பு..’
ஆனால் வேண்டுமென்றே நீ எதையும் செய்யவில்லை. அதனால் பொன்முடி குடும்பத்தினர் அனைவரும் விடுதலையானார்கள். அப்போதும் மாவட்ட அமைச்சராக, சட்டத்துறை அமைச்சராக இருந்த நீ எதையும் செய்யவில்லை.
ஆனால் சென்னையில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். ஏனென்றால் நீ பொன்முடியுடன் தொடர்பில் இருந்தாய். விழுப்புரம் நகராட்சித் திடலுக்கு அருகில் இருக்கும் புறம்போக்கு இடத்தை வளைத்துப் போட்டு பட்டா வாங்கியதுடன், அதில் சுவரையும் கட்டியிருக்கிறார் பொன்முடி.
அதை எதிர்த்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்தார். அதன்பிறகு அவர் விரட்டப்பட்டார். அப்போது உன்னிடம் உதவி கேட்டார். ஆனால் அவருக்கு நீ எந்த உதவியையும் செய்யவில்லை.
அதனால் நீதிமன்றத்தில் பொன்முடிக்கு சாதகமாக தீர்ப்பாகிவிட்டது. நாம் ஆட்சிக்கு வந்ததும் அந்த இடத்தை மீட்க மீண்டும் வழக்கு தொடுக்கலாம் என்று சொன்னோம். ஆனால் சி.வி.சண்முகம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
2016 தேர்தலில் பொன்முடியுடன் நெருங்கிய தொடர்பு. இப்படி நீ தி.மு.க-வுடன் தொடர்பில் இருப்பது மாவட்டம் முழுக்க தெரியும். ஆனால் யோக்கியன் போல எங்கள் பொதுச் செயலாளரை நீ குறை சொல்கிறாய். இப்படி உன்னுடைய வண்டவாளங்கள் இன்னும் நிறைய இருக்கிறது.
உன்னுடைய பயணித்தவர்கள் நிறையபேர் இன்னும் எங்களுடன்தான் இருக்கிறார்கள். உன்னைப் பற்றி நிறைய சொல்லலாம். ஆனால் எங்கள் பொதுச் செயலாளர் எதையும் பேச வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்" என்று முடித்தார்.














