Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
திருச்செந்தூர் முருகன் கோயில் பெயரில் மோசடி; பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை;பின்னணி என்ன?
இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் பெயர் மற்றும் அடையாளத்தை கோயில் நிர்வாகத்தின் எந்தவிதமான அனுமதியும் இன்றி பயன்படுத்தி, Instagram, YouTube, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பி, பக்தர்கள் மற்றும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நபர்கள் மீது திருக்கோயில் நிர்வாகத்தால் அவ்வப்போது காவல் துறையில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களை முடக்குவதற்கும், அவற்றை நிர்வகிக்கும் நபர்களை அடையாளம் கண்டு, சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் காவல் துறை மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 04.01.2026 அன்று சமூக ஊடகப் பக்கத்தில், மூலவர் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பன்னீர் இலை விபூதி, சந்தனக்காப்பு பிரசாதம், குங்குமம், திருநீறு, கயிறுகள் உள்ளிட்ட பொருட்கள் பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் எனப் பொய்யான தகவல்களை வெளியிட்டு, திருக்கோயில் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், மோசடியாக பணம் பறிக்கும் நோக்கில் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சமூக ஊடகப் பக்கத்தை உடனடியாக முடக்கவும், வெளியிடப்பட்ட காணொளிகளை நீக்கவும், மேலும் இந்த மோசடி செயல்களில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள்மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், கோயிலின் ஆன்லைன் சேவைகள், தரிசன முன்பதிவு, நன்கொடைகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை அறிய https://tiruchendurmurugan.hree.tn.gov.in மட்டுமே பயன்படுத்துமாறும், சமூக ஊடகங்களில் பரவும் திருக்கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத, தவறான மற்றும் உண்மைத்தன்மையற்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.





















