RCB vs MI: மைதானத்தில் தகாத வார்த்தைகளைப் பேசிய RCB பயிற்சியாளர்; பிசிசிஐ-யின் ந...
தூத்துக்குடி: `சரியாக பூட்டப்படாத கைதி அறை; கண்ணயர்ந்த போலீஸார்' - கைதி தப்பியோடிது எப்படி?
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக மெஞ்ஞானபுரம் காவல்நிலைய போலீஸார் தமிழரசனை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியதிருந்ததால், காவல் நிலையத்திலுள்ள கைதி அறையில் அடைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த கண்ணயர்ந்து தூங்கவே கைதி அறையில் இருந்த தமிழரசன், கதவை திறந்து தப்பியோடியுள்ளார்.

இந்த நிலையில், தமிழரசனை விசாரிப்பதற்காக அழைத்துவரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது போலீஸார் கைதி அறைக்குச் சென்று பார்த்தபோது தமிழரசனைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த போலீஸார், சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது தமிழரசன் தப்பியோடியது தெரிய வந்தது.
வழக்கமாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பழைய, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், ஜாமீனில் வெளி வந்த குற்றவாளிகளை கண்காணித்து தனிப்பிரிவு போலீஸார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அவ்வப்போது தகவல் அளிக்க வேண்டும் என்பது விதி.
ஆனால், தற்போது விசாரணைக்கைதியாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழரசன் குறித்து தனிப்பிரிவு போலீஸார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சில போலீஸாரிடம் பேசினோம், “ஒவ்வொரு காவல் நிலையத்திலும் விசாரணைக்கைதிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால், கைதிகள் அறையில் அடைத்து பாதுகாக்கப்படுவது வழக்கம். சம்மந்தப்பட்ட குற்ற வழக்கில் முழு விசாரணை நடைமுறைக்கு வந்த பிறகே அதில் தொடர்புடையவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

அதுவரை கைதி அறையிலேயே பாதுகாக்கப்படுகின்றனர். இதுதான் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. ஆனால், விசாரணையில் கைதி அறையை போலீஸார் சரியாக பூட்டவில்லை என்பது தெரிய வந்துள்ளது. முறையாக அறைக் கதவை பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தால் கைதி தமிழரசன் தப்பித்துச் செல்ல வாய்ப்பிருந்திருக்காது. பணியில் இருந்த போலீஸார் மற்றும் தனிப்பிரிவு போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்றனர்.


















