செய்திகள் :

தென்காசி: கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்? - மனமுடைந்து விஷமருந்திய விவசாயி; உறவினர்கள் குற்றச்சாட்டு

post image

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய் புறம் வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். விவசாயியான இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த புகாரில் அந்தோணி ராஜை காவல் நிலையத்துக்கு வருமாறு சிவகிரி இன்ஸ்பெக்டர் முரளிதரன் அழைத்துள்ளார்.

அதன்படி காவல் நிலையத்துக்குச் சென்ற அவரிடம் இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அந்தோணி ராஜ் தனது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார். அவர் தன்னை எதிர்த்துப் பேசுவதாக நினைத்த இன்ஸ்பெக்டர் முரளிதரன், அங்கிருந்த அனைவர் முன்னிலையிலும் அந்தோணி ராஜை கன்னத்தில் அறைந்ததாக, அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அந்தச் சம்பவத்துக்கு பின்னர் அந்தோணி ராஜ் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். காவல் நிலையத்தில் தன்னை அவதூறாகப் பேசியதோடு மட்டுமல்லாமல் இன்ஸ்பெக்டர் அடித்து அசிங்கப்படுத்தி விட்டார் என வேதனையுடன் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு அவரை காவல் நிலையத்திலிருந்து அழைத்துள்ளனர்.

தன்னை மீண்டும் விசாரணை என்ற பெயரில் அழைத்து அவமானப்படுத்தி அடிப்பார்கள் என்ற அச்சத்தில் இருந்த அந்தோணி ராஜ், பயிர்களுக்கு தெளிக்கக்கூடிய பூச்சி மருந்து பாட்டிலை எடுத்துச் சென்றுள்ளார். காவல் நிலையத்தின் உள்ளேயே அவர் விஷம் அருந்தியிருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தென்காசி மருத்துவமனையில் இருந்து அந்தோணி ராஜ், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்துத் தெரிந்து கொள்வதற்காக குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்தனர். அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அந்தோணி ராஜைச் சந்திக்க அவர்களை போலீஸார் அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிகிச்சை பெற்றுவரும் அந்தோணி ராஜின் மகன் இசக்கிதுரை கூறுகையில், "நாங்கள் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் அரசின் சார்பாக கட்டித் தரப்படும் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் நாங்கள் அவர்களது இடத்தில் வீட்டை கட்டி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அது தொடர்பான விசாரணைக்கு எங்கள் அப்பாவைக் கூப்பிட்டபோது எனது மூன்று வயது மகனையும் கூட்டிக்கொண்டு அவர் சென்றிருந்தார்.

விசாரணையின் போது என்னுடைய அப்பா, 'அய்யா நாங்க எந்தத் தப்பும் செய்யல. எங்க எடத்துக்குள்ள தான் வீட்டை கட்டி இருக்கோம். நீங்க வேணா அளந்து பாத்துக்கோங்க. பக்கத்து வீட்டுக்காரர் இடத்துக்குள் எங்க வீடு இருந்துச்சுன்னா நீங்க என்ன சொன்னாலும் அதுக்கு கட்டுப்படுவேன்' என்று சொல்லியிருக்கிறார். அப்போது இன்ஸ்பெக்டர், 'வீடு கட்ட உள்ளாட்சியில் பெர்மிசன் வாங்கினாயா?' என்று கேட்டுள்ளார். அதற்கு, 'இது அரசு கட்டிக் கொடுத்த வீடு. அதனால் ஒர்க் ஆர்டர் மட்டும் தந்தாலே போதும்' என்று சொன்னதும், என்னை விட உனக்கு சட்டம் அதிகம் தெரியுமோ? என சொல்லியபடி அவதூறாகப் பேசியிருக்கிறார்.

ஸ்டேஷனில் அனைவரின் கண்முன்பாக எங்கள் அப்பாவை இன்ஸ்பெக்டர் அடித்ததால் அவர் மனம் உடைந்து விட்டார். எங்கப்பாவிடம், 'உன் மீதும் உன் மகன் மீதும் பொய்வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவேன்' என்று மிரட்டி அனுப்பியிருக்கிறார். அதன் பின்பு 15-ம் தேதி மறுபடியும் இன்ஸ்பெக்டர் கூப்பிட்டதால் பயத்தில் விஷம் குடித்துவிட்டார்.

எங்கப்பா எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரைப் பார்க்கவே விடவில்லை. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்ற பயத்தில் நாங்கள் இருக்கிறோம். எங்க அப்பாவின் இந்த நிலைக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் மற்றும் சிவகிரி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் மனு கொடுத்திருக்கிறேன்" என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து சிவகிரி காவல்துறையினரிடம் கேட்டதற்கு, "நிலப் பிரச்னை தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினோம். தன்னிடம் இருக்கும் ஆவணங்களை எடுத்துக் கொண்டு 15-ம் தேதி வருவதாகச் சொன்ன அந்தோணி ராஜ், விஷம் அருந்திவிட்டு ஸ்டேஷனுக்குள் வந்துவிட்டார். அதை அறிந்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அவரை விசாரணையின்போது அடித்ததாகச் சொல்வது தவறு" என்றார்கள்.

'அதிகாரமின்றி நிதானம் இழக்கும் திமுக!' - ஓர் அலசல்!

தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் முழுமையாக முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு ஒரு கூட்டணி அமைச்சரவை அமைந்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க

பக்ரீத்: 'நோ' பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் வெட்டுதல் - டெல்லி அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

வருகிற 28-ம் தேதி, பக்ரீத் பண்டிகை வர உள்ளது. இதை முன்னிட்டு, டெல்லியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி வளர்ச்சி அமைச்சர் கபில் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "பக்ரீத் ப... மேலும் பார்க்க

கடலூர்: ரியல் எஸ்டேட் பிசினஸ் `டு’ அமைச்சர்; வீட்டுவசதித் துறையை வசப்படுத்திய தவெக ராஜ்குமார் யார்?

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்று கடலூர். இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எம்... மேலும் பார்க்க

அறநிலையத்துறை அமைச்சர் மீதான விமர்சனங்கள்; `சாதி பார்த்து யாரையும் முன்நிறுத்தவில்லை' - ஆதவ் அர்ஜுனா

தமிழக முதலமைச்சர் தலைமையிலான த.வெ.க அரசில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக சீ.ரமேஷ் பதவியேற்றிருக்கிறார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதனை விமர்சித... மேலும் பார்க்க