செய்திகள் :

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்!

post image

சுவாமி ஐயப்பனைத் தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்கிறார்கள். அதேபோன்று சுவாமி ஐயப்பனுக்கு என்று சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா மற்றும் பந்தளம் என அறுபடைவீடுகளும் உண்டு.

இவை தவிர்த்து நாடு முழுவதும் ஐயப்ப சுவாமிக்குப் பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பல சபரிமலையைப் போன்றே பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டவை.

சில பிரச்னப்படி பக்தர்களுக்கு அருள்பாலிக்க எளிமையான கட்டுப்பாடுகளோடு அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு கோயில்தான் செங்கோட்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் கோயில்.

சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்
சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்

தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டைப் பகுதியில், ஆயக்குடி - சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சாம்பவர் வடகரை எனும் ஊர். இங்குதான் சுவாமி ஐயப்பன் அருளும் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது.

இங்கு சபரிமலை போலவே பதினெட்டுப் படிகள் உண்டு. மேலே சந்நிதானம் திகழ, அதனுள் சுவாமி ஐயப்பன் கருணாமூர்த்தியாய் அருள்பாலிக்கிறார்.

சுவாமி ஐயப்பனை இங்கே பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தங்கள் வீட்டுக் குழந்தையாகப் பாவித்துப் பக்தி செய்கிறார்கள். சுவாமியின் திருமுகமும் பால்ய பாவத்தோடு அனைவருக்கும் அன்பு செய்யும் கருணையோடு திகழ்கிறது.

பொதுவாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள், ஒரு மண்டல காலம் கடும் விரதமிருந்து முறையாக இருமுடி சுமந்து யாத்திரை செல்வார்கள். அப்படி முறைப்படி யாத்திரை செய்து செல்பவர்களே பதினெட்டாம் படி ஏறி ஐயனைத் தரிசிக்க முடியும். அந்தக் கணத்தில் கிடைக்கும் சிலிர்ப்பை அவர்களைத் தவிர வேறு யாரும் விவரிக்க முடியாது.

அதே தரிசன மகிழ்வைத் தரும் தலம்தான் சுதந்திர ஐயப்பன் கோயில். சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வருகிறார்கள். இங்கே பக்தர்கள் சுவாமியைத் தொட்டு வணங்க முடியும் என்பது கூடுதல் விசேஷம்.

சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்
சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்

இருமுடி கட்டினால் அது சபரிமலைக்குத்தான். இதை உணர்த்தும்விதமாக இங்கே இருமுடி இல்லாமல், ஆண் - பெண் பேதமின்றி அனைவரும் பதினெட்டாம் படி ஏறி ஐயனை வழிபடலாம். இது வேறு எங்கும் காணமுடியாத நடைமுறை அதிசயம்.

ஆகம, தாந்திரீக முறைகளில் இந்த வழக்கம் இல்லை. ஆனால் இந்தக் கோயில் அமைக்கப் பிரச்னம் பார்த்தபோது இவ்வாறே அமைக்கப்பட வேண்டும் என்று சுவாமி ஐயப்பனே வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார்கள் ஆலய நிர்வாகிகள்.

குளத்துப்புழையில் பாலகனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், ஆரியங்காவில் ஐயனாகவும், சபரிமலையில் யோகியாகவும் இருக்கும் பகவான், இங்கே குடும்ப நலனைக் காக்கும் காப்பாளனாகச் சங்கல்பிக்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்!

சபரிமலையில் வனத்தில் பிரம்மசார்ய யோகத்தில் இருக்கும் பகவான், இங்கே நாட்டில் - தன் குழந்தைகளான பக்தர்களுடன் வசிக்கிறார். ஆகவே, அந்தக் குழந்தைகளின் குடும்ப நலனைக் காப்பவராக சுவாமி திகழும் வண்ணம், இந்த ஆலயத்தை உருவாக்கியவர்கள் சங்கல்பம் செய்திருக்கிறார்கள் போலும்!

மேலும் பக்தரானவர் தன்னுடைய தாய் - தந்தை, மனைவி - மக்களுடன் குடும்ப சமேதராக பதினெட்டாம்படி ஏறி வர வேண்டும். தாங்களே கருவறைக்குள் சென்று இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்து, மாலை சாற்றி, நைவேத்தியங்கள் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி இறைவனை வழிபடலாம் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.

சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்
சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்

என்றாலும் பக்தர்கள் சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது மண்டல விரதம் முழுமையாக இருக்கவேண்டும்; மாதா, பிதா, குரு, தெய்வங்களைப் போற்றி வணங்கவேண்டும்; கணவன் மனைவி உறவில் உண்மையான அன்பும் தூய பண்பும் கொண்டிருக்க வேண்டும்.

தூய விரத நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும். இவையே இந்தக் கோயிலில் 18-ம் படிகளில் ஏறி வருவதற்கான தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

'தான் செய்த தவற்றுக்காக வருந்தி, அந்தத் தவற்றை மீண்டும் செய்யமாட்டேன்' என்று உறுதி பூண்ட பக்தர்கள், தாங்களே கருவறைக்குச் சென்று இறைவனுக்குத் தன் கையாலேயே நெய் அபிஷேகம் செய்யலாம் எனும் வழக்கம் இக்கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது.

வயதான தாய்மார்கள் தங்களின் சொந்தப் பிள்ளையாகக் கருதி, ஐயன் ஐயப்பனுக்கு எண்ணெய் தேய்த்து அபிஷேகித்து அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள். இளம் வயதினரோ இந்த ஐயப்பனைத் தங்களின் தகப்பனாராகக் கருதி வணங்குகிறார்கள். குழந்தைகளோ தங்களில் ஒருவனாக ஐயனைப் போற்றுகிறார்கள்.

பொதுவாக ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும்போது அவர்கள் குடும்பமும் விரதம் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து ஐயனைத் தரிசனம் செய்ய முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? அப்படி ஓர் அனுபவத்தை சுதந்திர ஐயப்பன் கோயில் நமக்கு அருளும்.

ஆண்டில் ஒருமுறை சபரிமலை சென்று வந்தபின்னர் சில பக்தர்கள் ஒரு மண்டல விரதம் இருந்து இந்த ஆலயத்துக்குக் குடும்பத்தோடு வந்து வழிபடுகிறார்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். ஐயனின் அன்பு தரிசனம் ஆனந்தம் அளிக்கும்.

வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!

மலைக்கு மேல் ஏறிச் சென்று வணங்கினால் நம்மை வாழ்க்கையிலும் ஏற்றிவிட்டு அழகு பார்ப்பான் முருகன். அப்படி அவன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். அவற்றுள் இயற்கை அழகு சூழ்ந்த ஒரு தலம்தான் பாலமதி.மலைகள் சூழ்ந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் முருகன் கோயில் பெயரில் மோசடி; பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை;பின்னணி என்ன?

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் பெயர் மற்றும் அடையாளத்தை கோயில் நிர்வாகத்தின் எந்தவிதமான அனுமதியும் இன்றி பயன்படுத்த... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்: போரை நிறுத்திய பொக்கிஷம்; இந்த ஈசனை சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை!

காஞ்சியின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் அதிசயம் கயிலாசநாதர் கோயில் என்பர். இந்தக் கயிலாசநாதர் கோயிலின் பிரமாண்ட வடிவமே பின்னர் உருவான தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற பிரம்ம... மேலும் பார்க்க

திருநெல்வேலி: நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.!

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.! மேலும் பார்க்க

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் திருவாதிரை தேரோட்டம் திருவிழா.!

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் திருவாதிரை தேரோட்டம் திருவிழா.! மேலும் பார்க்க

அரியலூர் திருமழபாடி வைத்தியநாதர் கோயில்: குழிகளாக நவகிரக சந்நிதி... நோய் தீர்க்கும் ஈசன்!

காவிரிக்கரை எங்கும் ஈசன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். தேவார மூவரும் பாடிப் பரவி அத்தலங்கள் மிகவும் சிறப்பும் மகிமையும் வாய்ந்தவை. இத்தலங்களுக்குச் சென்றாலும் அங்கு வாழ்ந்தாலும் மனதால் நினைத்தாலுமே புண... மேலும் பார்க்க