RR vs MI: "வைபவ் சூர்யவன்ஷிட்டருந்து புதிய ஷாட்களைக் கத்துக்கணும்" - ஆட்டநாயகன் ...
தென்காசி: விவசாயி மீது துப்பாக்கிச்சூடு - காவல்துறை மீது உறவினர்கள் புகார்; வழக்கு பதிவு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் சேட் மகன் மணிகண்டன்(32). விவசாயியான இவர் பனையேறும் தொழிலும் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவிற்கு மருதம்பத்தூர் பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் சக போலீசாரான காவலர்கள் மணிராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோரை அழைத்துக் கொண்டு மருதம் புத்தூர் காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது ஒரு பனை மரத்தில் பதநீர் எடுப்பதற்காக கணையம் வைத்துள்ளதை கண்ட உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மரத்தின் உரிமையாளரான மணிகண்டனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து மணிகண்டனையும் மணிகண்டனின் தந்தை பெருமாள் சேட்டையும் அழைத்துக் கொண்டு பனைமரம் இருக்கும் பகுதிக்கு சென்றார்.

அந்த நேரத்தில் மணிகண்டனின் சகோதரரான சிவன் பொன்ராஜ் மற்றும் குடும்பத்தினர் தோட்டத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். காவல் துறையினர் தனது தம்பியையும் தந்தையையும் அழைத்துக் கொண்டு வந்து விசாரணை நடத்தியதை கண்ட சிவன் பொன்ராஜ் மற்றும் குடும்பத்தினர் அருகில் சென்று என்னவென்று விசாரித்தனர்.
அப்போது உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா அனைவரையும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டனை பனை மரத்தின் மீது ஏறி பானையை எடுக்க வற்புறுத்தியுள்ளார். அப்போது மணிகண்டன் பனைமரத்தின் மேலே ஏறிக் கொண்டிருக்கும்போது காவல்துறையினருக்கும் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா காயமடைந்தால் ஆத்திரமடைந்த அவர் தான் கொண்டு வந்த துப்பாக்கியை மணிகண்டனை நோக்கி சுட்டுள்ளார்.

நான்கு முறை மணிகண்டனை நோக்கி சுட்டதில் இரண்டு குண்டுகள் மணிகண்டனின் காலில் பட்டு படுகாயம் அடைந்தார். இதனை கண்ட சக போலீசார் இசக்கி ராஜா மற்றும் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் சம்பவம் குறித்து மணிகண்டனின் உறவினர்களுக்கு தெரிய வரவே ஆலங்குளம் முக்கூடல் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தை கேள்விப்பட்ட அகில இந்திய காமராஜர் ஆதித்தனார் கழக பொதுச் செயலாளர் சிங் நாடார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக ஆலங்குளம் காவல்துறை கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சம்பந்தமே இல்லாமல் சாதாரண விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய உதவி ஆய்வாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று காவல் துணை கண்காணிப் பாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் இரவு 7 மணி முதல் ஒரு மணி வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடைபெற்ற இந்த போராட்டத்தில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், தட்சணமாறா நாடார் சங்க தலைவர் ஆர் கே காளிதாஸ், ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் கே ஆர் பி பிரபாகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் பால்ராஜ், தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் (Sub-Collector) வைஷ்ணவி பாலிடம் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறினார். அதனை எடுத்து ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, மற்றும் காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து போராட்டத்தினர் கலைந்து சென்றனர்.
















