செய்திகள் :

நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் கனமழை; தாமிரபரணியில் வெள்ளம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

post image

தென்குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழை காரணமாக பிற பகுதிகளில் இருந்து ஆற்றுப்பகுதிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் படித்துறையையும் கல்மண்டபங்களையும் மூழ்கடித்துச் செல்கிறது.

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு
தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு

இதனால், ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை இறக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு பாபநாசம் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டவுள்ளது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 130 அடியைத் தாண்டியதால் ஆற்றில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையில் இருந்து சுமார் 15,250 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 11,060 கன அடி தண்ணீரும் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கடலில் கலக்கிறது.

மற்ற அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதேபோல கோரம்பள்ளம் கண்மாயில் இருந்து சுமார் 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு
தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு

குறிப்பாக ஏரல், ஆத்தூர் பாலங்களுக்கு அருகில் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியது. கம்பாநதி காமாட்சி அம்மன் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

திருச்செந்தூர் முருகன் கோயில், சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் வளாகத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் சுமார் 2 முதல் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

சில இடங்களில் சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் வெள்ளநீர் கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் தேங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்ப்பிடிப்புக் குளத்தின் கரைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதே போல கயத்தார், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய், ஊரணிகளும் பெய்து வரும் மழையால் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு
தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு

சில தாழ்வான பகுதிகள், பாலங்கள் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு கருதி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல்: ``கழிவுநீர் கலப்பதால் பச்சை நிறத்துக்கு மாறிய நீர்'' - தவிக்கும் மக்கள்; காரணம் என்ன?

திண்டுக்கல், சீலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எஸ். பெருமாள்கோவில்பட்டி மற்றும் ஏ. ஓடைப்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள செல்லமந்தாடி பெரியகுளம் தண்ணீர் தா... மேலும் பார்க்க

முல்லை பெரியாறில் வெள்ளப்பெருக்கு: உப்பார்பட்டி தடுப்பணை உடைப்பு; தவிக்கும் தேனி விவசாயிகள்

தேனி வீரபாண்டி அருகே முல்லை பெரியாற்றின் குறுக்கே கட்டபட்டுள்ளது உப்பார்பட்டி தடுப்பணை. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் முல்லை பெரியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் உப... மேலும் பார்க்க