'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராட...
மகத்தான சாதனைகள்; ஸ்டார்க் கண்ணீர் - கிரிக்கெட் என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும் அலிஷா ஹீலி!
“இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பேசியிருந்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிஷா ஹீலி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
அலிஷா ஹீலி
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான அலிஷா ஹீலி, 2010 பிப்ரவரியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த பதினாறு ஆண்டுகளில், இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகள் (2013, 2022), ஆறு ஐசிசி T20 உலகக் கோப்பைகள் (2010, 2012, 2014, 2018, 2020, 2023), மேலும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் என பல சாதனைகளை படைத்துள்ளார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதையும் பெற்றுள்ளார்.

விக்கெட் கீப்பர்
மொத்தம் 162 T20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிக T20 போட்டிகளில் பங்கேற்ற இரண்டாவது வீராங்கனை ஆவார். அதோடு, T20 கிரிக்கெட்டில் 126 டிஸ்மிஸல்கள் செய்து, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் சேர்த்து அதிக டிஸ்மிஸல்கள் செய்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பெருமைகளைத் தேடி தந்த கடைசி இன்னிங்ஸ்
அவரது கடைசி இன்னிங்ஸும் பல பெருமைகளைத் தேடி தந்திருக்கிறது. உலகளவில் 150க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த இரண்டாவது பெண் வீராங்கனை என்ற சாதனை மட்டுமின்றி, இரண்டாவது அதிவேக 150 என்ற சாதனையையும் படைத்தார். மேலும், இந்திய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற பெருமையையும் பெற்றார்.

மிட்செல் ஸ்டார்க்கின் கண்ணீர்
அவரது கணவர் மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய ஆண்கள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர். இந்த கிரிக்கெட் தம்பதியரின் பயணம், அவர்கள் ஒன்பது வயதில் ஒரே அகாடெமியில் விளையாடிய காலத்திலேயே தொடங்கியது. மார்ச் 2020ல், ஆஸ்திரேலியா–தென் ஆப்பிரிக்கா ODI தொடரில் பங்கேற்காமல், தனது மனைவி விளையாடிய T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண ஸ்டார்க் சென்றது, அவர்களுடைய உறவில் உள்ள ஆதரவை வெளிப்படுத்திய தருணமாகும். ஹீலியின் கடைசி ஷாட்டுக்குப் பிறகு, கணவரின் கண்களில் தெரிந்த கண்ணீர் கலந்த பெருமிதம் அதற்கான தொடர்ச்சியாக அமைந்தது.
நாளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டு
பேட்டிகளில் நகைச்சுவையாக பதிலளிக்கும் பழக்கம் கொண்ட ஹீலி, இந்த தொடரில் இதுவரை ஓய்வு குறித்த கேள்விகளை தவிர்த்துவந்தார். கடைசி போட்டிக்கு முன், “இன்றுதான் ஆஸ்திரேலியாவின் பச்சை-மஞ்சள் அணியுடன் உங்கள் கடைசி நாள் என்று உணர்ந்துவிட்டீர்களா?” என்ற கேள்விக்கு அவர், “இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். அதனால், இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று பதிலளித்தார். அது அவர் எத்தகைய வீராங்கனை என்பதை வெளிப்படுத்தியது.

அலிஷா ஹீலியின் சாதனை
தான் விளையாடிய காலத்தில் பல சாதனைகளை முறியடித்தும், புதிய சாதனைகளை உருவாக்கியும் விளங்கிய அலிஷா ஹீலி, கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்துவிட்டார் என்பதில் சந்தேகமே இல்லை. அவரின் விடைபெறுதலை மறக்க முடியாததாக மாற்றியது அந்த கடைசி அதிரடி இன்னிங்ஸ் 98 பந்துகளில் 158 ரன்கள். இந்திய அணியின் தோல்வி வேதனையையும் மறக்க வைத்து, அவரை கொண்டாட வைத்த அந்த இன்னிங்ஸ், ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும்.
An Alyssa Healy century in her final ODI!
— 7Cricket (@7Cricket) March 1, 2026
And no one is prouder than Mitch Starc in the commentary box #AUSvINDpic.twitter.com/Ey27zCbPt2


















