"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" - திருச்சி ...
`பாமக பிரிவுக்கு பணம்தான் காரணம்' - புதிய கட்சி தொடங்கிய குரு மகள் கடும் தாக்கு
பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவராகவும்,வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் ஜெ.குரு. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த குரு, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். குருவின் மரணத்துக்கு பாமக கட்சித் தலைவர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் உயர்சிகிச்சை அளிப்பதற்கான உதவி செய்யாததுதான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குருவுக்கு கனல் அரசு என்ற மகனும், விருதாம்பிகை என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், குருவின் மகள் விருதாம்பிகை "ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி" என்ற புதிய கட்சியை தொடங்கினார். சேலம் மாவட்டம், ஓமலூரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை விருதாம்பிகை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வன்னியர் சமூக மக்களின் ஒற்றுமைக்காகவும், அனைத்து சமுதாய மக்களின் நலன் கருதி ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை என்பது வன்னியர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதுதான். வன்னியர் சங்கமும் இதற்காகத்தான் தொடங்கப்பட்டது.

மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய மகனுக்காக சங்கம் மற்றும் பாமக கொள்கையில் இருந்து பின்வாங்கினார். ஆனால், என் தந்தை தனது உயிர்மூச்சு இருக்கும் வரை வன்னியர் சமுதாயத்துக்காகப் போராடினார். எந்த மகனுக்காக, அவரை நம்பியிருந்த வன்னியர் சமுதாயத்தை ராமதாஸ் புறந்தள்ளினாரோ, இன்று பதவிக்காக அன்புமணி ராமதாஸை இழிவுபடுத்தி பேசி வருகிறார். ராமதாஸ் மீது எனக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், வயதான காலத்தில் அவரை அன்புமணி இழிவுபடுத்தி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாமக பிரிந்து கிடப்பதக்கு காசு தான் காரணம். 10.5 சதவீதம் தருகிறேன் என்று வன்னியரை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. தற்போது, அன்புமணி அதிமுக-வுடன் கூட்டணி வைக்கிறார். வன்னியரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து நிற்கிறார் அன்புமணி. ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளார் அன்புமணி. அரசியல் லாபத்துக்காகவும், காசுக்காகவும் அன்புமணி செயல்படுகிறார். அப்பா, மகனின் துரோகத்தை வன்னியர் மக்கள் மெல்ல மெல்ல புரிந்துகொண்டு வருகிறார்கள். அதை மக்களிடம் கொண்டு செல்லவே கட்சி தொடங்கியுள்ளேன்" என்றார்.


















