BB Tamil 9: "இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன்" - பிக் பாஸில் துஷார...
"புதிய கதைகளைச் சொன்னேன்; ஆனால், விஜய் சாருக்கு ‘பகவந்த் கேசரி’தான்..." - இயக்குநர் அனில் ரவிபுடி
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
கூடிய விரைவில் பிரச்னைகள் முடிக்கப்பட்டு திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் வெளிவந்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் திரைப்படம் எனச் சொல்லப்படுகிறது.
‘பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி சிரஞ்சீவியை வைத்து இயக்கியிருக்கும் படம் இந்தப் பொங்கலுக்கு வெளியாகியிருக்கிறது.
அப்படத்திற்கான ப்ரோமோஷன் நேர்காணல்களில் ‘ஜன நாயகன்’ திரைப்படம் தொடர்பாக அவர் பேசியிருக்கிறார்.
அப்போது இயக்குநர் அனில் ரவிபுடி பகிர்கையில், “‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் முக்கியக் கருவை மட்டும் வைத்து விஜய் சாரின் ‘ஜன நாயகன்’ படத்தை எடுத்திருக்கிறார்கள்.
படத்தின் முதல் 20 நிமிடங்கள், இண்டர்வெல் காட்சி மற்றும் இரண்டாம் பாதியில் சில விஷயங்கள் மட்டும் ‘பகவந்த் கேசரி’ படத்தில் இருந்தது போல இருக்கும்.
மற்றபடி வில்லன் கதாபாத்திரத்தின் விஷயங்கள், ரோபோ - சயின்ஸ் ஃபிக்ஷன் எலமெண்டுகளைச் சேர்த்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு இது புதிய ஒன்றாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.

விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்குவதற்கான டிஸ்கஷன் முதலில் இயக்குநர் அனில் ரவிபுடியிடம்தான் நடந்திருக்கிறது.
ஆனால், இறுதியில் அது கைகூடி வரவில்லை. இது குறித்து இயக்குநர் அனில் ரவிபுடி பேசும்போது, “இது விஜய் சாரின் கடைசி திரைப்படமாக இருந்தாலும், நான் ரீமேக் திரைப்படம் செய்யக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன்.
நான் அவரிடம் பல புதிய கதைகளைச் சொன்னேன். ஆனால், அவருக்கு ‘பகவந்த் கேசரி’தான் மிகவும் பிடித்திருந்தது” எனப் பேசியிருக்கிறார்.



















