சர்க்கரை நோய் சிகிச்சை: 'MVCON 2026' மாநாட்டில் டாக்டர் ஏ.வி.அனூப்பிற்கு வாழ்நாள...
புதுச்சேரி: `புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!' - காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு பின்னணி
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
ஆனால் காங்கிரஸ் – தி.மு.க-வுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் இருபது தொகுதிகள் வேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ், அதன்பிறகு 16+12+2 என்ற கணக்கில் இறங்கியது. அதாவது காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 12 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்றது காங்கிரஸ்.

அதை ஏற்க மறுத்த தி.மு.க, வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்து 18 தொகுதிகளைக் கேட்டது. அப்படி ஆரம்பித்த பேரம் 14+14+2 என்ற கணக்கில் இறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை தொடங்கியது. கடந்த தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட ஐந்து தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
அதில் முதலில் இருப்பது முன்னாள் முதல்வர் நாராயணசாமி 2016-ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி. ஆனால் அது தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் தொடர்ச்சியாக ஆறு முறை வெற்றிபெற்ற தொகுதி என்பதுடன், கடந்த தேர்தலில் வெறும் 400 வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்ட தொகுதி என்பதால் அதைக் கொடுக்க மறுக்கிறது தி.மு.க.
அதேபோல ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட தொகுதிகளை கேட்டு வருகிறது காங்கிரஸ். இதுகுறித்து இறுதி செய்வதற்காக புதுச்சேரி தி.மு.க மேலிடப் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, எதிர்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா உள்ளிட்டவர்கள் கடந்த 21-ம் தேதி தனியார் விடுதியில் காத்திருந்தனர்.
ஆனால் அந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அதனால் அன்றைய தினம் இரவே தி.மு.க தேர்தல் குழுவினர் சென்னை அறிவாலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ப.சிதம்பரம், கனிமொழி உள்ளிட்டவர்கள், புதுச்சேரி தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்தனர்.

அதன்பிறகு காங்கிரஸுக்கு 16 தொகுதிகள், தி.மு.க-வுக்கு 12 தொகுதிகள், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்று என உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக அஜந்தா சிக்னல் அருகேயிருக்கும் தனியார் விடுதியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்களை, நேற்று இரவு 11.30 மணிக்கு தி.மு.க-வின் தேர்தல் குழுவினர் சந்தித்து ஆலோசனை செய்தனர்.
இரவு ஒரு மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வெளியேறினார்கள். இந்த நிலையில்தான் தற்போது புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சங்கர், `30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது' என்று முகநூலில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ``அது உண்மைதான்" என்று முடித்துக் கொண்டார்.
`காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு இறுதி முடிவா அல்லது தி.மு.க-வை வழிக்கு கொண்டுவருவதற்கான ஸ்டண்டா என்று இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்’ என்று முகநூலில் விவாதித்து வருகின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.














