செய்திகள் :

ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமைக்கு அடித்தளம்; டெல்லி வரை எதிரொலித்த திருச்செந்தூர் இடைத்தேர்தல் |ஆடுபுலி

post image

தமிழ்நாட்டின் சட்டமன்ற அரசியல் வரலாற்றில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை பெற்றவர் செல்வி ஜெயலலிதா. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் முதலமைச்சரும் ஜெயலலிதாதான். திரைத்துறையில் புகழ்பெற்று விளங்கிய ஜெயலலிதா எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்து இந்திய அரசியலில் தனிப்பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தார்.

ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமைக்கு அடித்தளமிட்டது, அங்கீகாரம் வழங்கியது திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல். திருச்செந்தூர் இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள் டெல்லி வரை எதிரொலித்தன. எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி திருச்செந்தூரிலேயே முகாமிட்டார். முதலமைச்சர் எம்ஜிஆர் டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து திரும்பினார். பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் தனக்கு வைக்கப்பட்ட சோதனையில் வெற்றியைத் தட்டிச் சென்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்

1982 ஜூன் 19, 20 இருநாட்கள் தென்னாற்காடு மாவட்ட அதிமுக சார்பாக மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. கடலூர் திருவந்திபுரம் முதல் மஞ்சக்குப்பம் வரை மாபெரும் மகளிர் பேரணி நடைபெற்றது. மஞ்சக்குப்பம் பொதுக்கூட்டத்தின் முதல் நாள் மாநாட்டில் ”பாரதி கண்ட புதுமைப்பெண்” என்ற தலைமையில் செல்வி ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். அதிமுகவில் சாதாரண தொண்டராக இணைந்த ஜெயலலிதாவிற்கு, மிகப்பெரும் மாநாட்டில் உரையாற்ற வாய்ப்பு வழங்கி, அரசியல் நுழைவிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

1984 மார்ச் 29 நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் சார்பில் செல்வி ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் மேடைப்பேச்சுக்கு உரை எழுதிக் கொடுத்தவர் என்று கூறப்பட்ட வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அதிமுக சார்பிலும், திமுக சார்பில் வைகோவும், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலுவும் அதே சமயத்தில் மாநிலங்களவை சென்றனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அண்ணா அமர்ந்திருந்த இடம் ஜெயலலிதாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமிழகத்தின் பிரச்னைகள் பற்றி பேசுவதற்கு அடிக்கடி பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார் ஜெயலலிதா.

1986 ஜூலை 12 அன்று அதிமுக சார்பாக மதுரையில் நடந்த எம்ஜிஆர் ரசிகர்கள் மாநாட்டில், எம்ஜிஆருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கினார் ஜெயலலிதா. அந்த செங்கோலை மீண்டும் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கினார் எம்ஜிஆர். மதுரை மாநாட்டின் நிகழ்வுகள், அன்றைய காலகட்டத்தில் அரசியல் குறியீடாகப் பார்க்கப்பட்டது.

முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர்

1987ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த, அதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர், அதிமுக ஜெயலலிதா அணி, அதிமுக ஜானகி அணி என்று இரண்டாகப் பிளவு பட்டது.

1986 முதல் 1989 வரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்த செல்வி ஜெயலலிதா, மாநில அரசியலுக்குள் நுழைந்தார். 1989 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா அணிக்கு 27 இடங்கள் கிடைத்ததால் தமிழ்நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அதன் பின்னர் அதிமுகவும் ஒன்றிணைந்தது. அதிமுக பொதுச்செயலாளர் ஆக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால், நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெருவாரியான இடங்களைப் பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார் ஜெயலலிதா.

சாதாரண தொண்டர், கட்சி மாநாட்டில் கலை நிகழ்ச்சி, மகளிர் மாநாட்டில் சிறப்புரை, தேர்தல் கூட்டங்களில் பரப்புரை என்று படிப்படியாக அரசியலில் உயர்ந்த ஜெயலலிதாவிற்கு முதல் சவால் திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் மூலம் வந்தது. தொண்டர்களை சந்தித்து, வாக்குகளை ஈர்த்து கட்சியில் தன்னை ஒரு தனிப்பெரும் ஆளுமையாகக் காட்டிக் கொள்ள திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் ஜெயலலிதாவிற்கு உதவியது.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா

1982 ஜூன் 4 அன்று கட்சியில் சேர்ந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு காலத்திலேயே 1983 ஜனவரியிலேயே கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அதனை அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் விமர்சனத்திற்கு ஆளானது. அதனால், திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் வந்தபோது, அத்தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், கலைச்செல்வி ஜெயலலிதாவிற்கு எம்ஜிஆர் வைத்த சோதனை என்றார்கள் கட்சி நிர்வாகிகள்.

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ். கேசவ ஆதித்தன் திடீரென மரணமடைந்திருந்தார். அதிமுக எம்.எல்.ஏ.வான கேசவ ஆதித்தன் மீதும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மீதும், முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் மீதும், எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மிகப்பெரிய குற்றச்சாட்டை சுமத்திய நேரம் அது.

திருச்செந்தூர் முருகனின் தங்க வேல் காணாமல் போய் விட்டது. உண்டியலில் போடப்பட்ட வேல், ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று விட்டது என்று குற்றம் சுமத்தினார்கள் திமுகவினர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அறநிலையத் துறை உதவி ஆணையாளர் சுப்பிரமணிய பிள்ளை ஆலய வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அது கொலை என்று குற்றம் சுமத்தினர் எதிர்க்கட்சியினர்.

”எப்பா எப்பா வீரப்பா.. முருகன் வேல் எங்கப்பா..”

திருச்செந்தூர் அதிகாரி மரணத்திற்கும், காணாமல் போன வேல் எங்கே என்று கேட்டும், நீதி கேட்டு நெடும் பயணம் சென்றார் கருணாநிதி. மதுரை அண்ணா சிலை முதல் திருச்செந்தூர் முருகன் கோயில் வரை நடந்தே சென்று மக்கள் மத்தியில் நீதி கேட்டார். ”எப்பா எப்பா வீரப்பா.. முருகன் வேல் எங்கப்பா..” என்று நெடும்பயணத்தில் முழக்கமிட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு இந்தப் பிரச்னை மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியது. வேல் காணாமல் போனது குறித்து விசாரிக்க நீதிபதி சி.ஜெ.ஆர். பால் கமிஷனை அமைத்தது தமிழக அரசு. பால் கமிஷன் அறிக்கை கசிந்து அதுவும் சர்ச்சையானது.

இந்த சூழ்நிலையில்தான், திருச்செந்தூர் தொகுதிக்கு 1983 மார்ச் மாதம் இடைத்தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. திருச்செந்தூர் முருகனின் வேல் திருடப்பட்டதே முதன்மையான பிரச்சனையாக எதிரொலித்தது. பெரியார் வழி வந்த திமுக, முருகன் பிரச்சனைக்காகப் போராடும் போது, முருக பக்தர்கள் வாக்கு தங்களுக்கு கிடைக்கும் என்று நினைத்தனர். ஆனால் எம்ஜிஆர் கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த உடன்குடி அமிர்தராஜ் என்பவரை வேட்பாளராக அறிவித்தார். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமாக அறியப்பட்ட திமுக மக்கள் தொடர்புச் செயலாளர் நெல்லை நெடுமாறன் திமுக வேட்பாளராக களம் கண்டார்.

வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாக, இந்திரா காங்கிரஸ், திராவிடர் கழகம், ஜனதா கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்க் கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக், குமரி அனந்தன் கட்சி, பழ நெடுமாறன் கட்சி உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவு கேட்டு கடிதம் எழுதினார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது கோரிக்கையை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கவில்லை.

இந்திரா காங்கிரஸ், ஜனதா கட்சி, குமரி அனந்தனின் காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். திமுகவின் ஆளுங்கட்சிக்கு எதிரான பொது வேட்பாளர் கனவு நிறைவேறவில்லை. ஆனாலும் போட்டி கடுமையாக இருந்தது.

போட்டிப்போட்ட வீடியோ பிரசாரங்கள்!

திமுக சார்பில் தேர்தல் பரப்புரை செய்திட கருணாநிதி, அன்பழகன், நாஞ்சில் மனோகரன், வைகோ, கேபி கந்தசாமி உள்ளிட்டோர் திருச்செந்தூரில் முகாமிட்டனர். அதிமுக சார்பில் ராஜா முகமது, வலம்புரி ஜான், ஜெயலலிதா முக்கியப் பேச்சாளர்களாக இருந்தனர். தேர்தல் பரப்புரை சூடுபிடித்திருந்த நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் முதலமைச்சர் எம்ஜிஆர் உண்ணாவிரதம் தொடங்கி விட்டார். தமிழ்நாட்டிற்குத் தேவையான அரிசி, மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும், திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் எம்ஜிஆர் உண்ணாவிரதம் இருப்பதாக விமர்சனம் செய்தனர். முதலமைச்சர் எம்ஜிஆருக்கு பிரதமர் இந்திரா காந்தி அழைப்பு விடுத்தார். டெல்லி சென்று திரும்பினார் எம்ஜிஆர். அரிசிப் பிரச்னையும் முடிவுக்கு வந்தது.

ஆனால், எம்ஜிஆர் உண்ணாவிரதம், டெல்லிப் பயணம் இரண்டையும் வைத்து அதிமுகவை காங்கிரஸில் இணைக்கப் போவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின. திருச்செந்தூர் தேர்தல் பரப்புரையிலும் அந்தப் பிரச்னை எதிரொலித்தது.

ஆனால், திமுகவினர் எழுப்பிய, வேல் காணாமல் போன பிரச்னை முதல் எம்ஜிஆர் டெல்லிப் பயணம் வரை அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அதிரடியாக பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா. திருச்செந்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் அலைமோதியது. கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து தீவிர பரப்புரை செய்தார் ஜெயலலிதா. காயல்பட்டினம், குரும்பூர், உடன்குடி, ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம், மணப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு வழங்கப்பட்டது.

ஜெ.,-வின் ஒற்றை நாற்காலி முறை - திருச்செந்தூர் போட்ட விதை

இப்போது போல சமூக ஊடகங்கள் இல்லாத காலம் அது. ஆளுங்கட்சியான அதிமுக சத்துணவுத் திட்டம் வீடியோக்களை கிராமங்களில் திரையிட்டுக் காட்டினர். எதிர்க்கட்சியான திமுக நீதி கேட்டு நெடிய பயணம் போன கருணாநிதியின் வீடியோக்களை திரையிட்டார்கள்.

மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சியும் போட்டியில் இருந்தார்கள். கருப்பையா மூப்பனார் தலைமையில் பரப்புரை செய்தனர். ஜனதா கட்சியும் அத்தொகுதியில் செல்வாக்கு பெற்றிருந்தது.

செல்லுமிடமெல்லாம், ஜெயலலிதாவின் பேச்சிற்கு கிடைத்த வரவேற்பு, பெண்களின் வாக்குகளை அதிகளவில் ஈர்த்தது.

1983 மார்ச் 1 அன்று திருச்செந்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.

தேர்தல் முடிவுகளில் 1,766 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அமிர்தராஜ் வெற்றி பெற்றார். முன்னதாக 1977 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இதே திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அமிர்தராஜ் 1,135 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதா கட்சி வேட்பாளர் சுப்பிரமணிய ஆதித்தனை தோற்கடித்திருந்தார்.

திருச்செந்தூர் இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள் அரசியல் திருப்பங்களை பெரிய அளவில் ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, செல்வி ஜெ.ஜெயலலிதா எனும் அரசியல் ஆளுமைக்கு அங்கீகாரம் வழங்கியது. மற்றொருபுறம் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் ஒற்றை நாற்காலி மட்டும் போடுகின்ற வழக்கமும் திருச்செந்தூரில் இருந்தே தொடங்கியது.!

சமபலத்தில் மோதும் அதிமுக, திமுக; களத்தில் இன்னாள் முன்னாள் அமைச்சர்கள்! மதுரையில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'கள நிலவரம்மதுரை மாவட்டம்1. மதுரை மத்தி ச... மேலும் பார்க்க

தொகுதி மாறும் அமைச்சரின் மகன்; வலுப்பெறும் அதிமுக! - திண்டுக்கல் மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'திண்டுக்கல் மாவட்டம்1. திண்டுக்கல் சட்டம... மேலும் பார்க்க

"அனைவரும் திருப்தியடையும் வகையில் எங்களின் தொகுதி பங்கீடு இருக்கும்!"- பியூஸ் கோயல்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!' - காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு பின்னணி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.கவுக்கு இடையே ... மேலும் பார்க்க

`K.N நேரு டிக், T.R.B ராஜா பரிந்துரை' - பட்டுக்கோட்டை தொகுதி திமுக ரேஸில் முந்துவது யார்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பட்டுக்கோட்டை. திமுக கூட்டணியில் இத்தொகுதியை காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு கேட்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒ... மேலும் பார்க்க