ராக்கெட் வேகத்தில் Gold, Silver, Metal பங்குகள் - எப்படி பயனடைவது? | IPS Finance...
"பேசி சரிபண்ணிட்டேன்" - மின்சாரம் பாய்ந்து இறந்த ஐடிஐ மாணவர்; அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் பதில்
திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலர் பரஞ்ஜோதி ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதற்காக, நேற்று முன்தினம் கட்டடத்திற்கு மின்விளக்கு அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
அப்போது, அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்த பைத்தம்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ இரண்டாம் ஆண்டு மாணவர் கருணா (வயது: 20) என்பவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.

இதில், நிலைதடுமாறி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த கருணாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி கருணா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் தரப்பிலிருந்து உரிய இழப்பீடு மற்றும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கருணாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முசிறி கைகாட்டி பகுதியில் திருச்சி - நாமக்கல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அனால், எம்.எல்.ஏ தரப்பில், "கான்ட்ராக்டர்தான் அந்தப் பையனை அழைத்து வந்தார். எனவே, அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'' என்று கூறி மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், கோபமான மாணவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி காவல் ஆய்வாளர் செல்லதுரை மற்றும் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு காவல் நிலையம் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறந்துபோன மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. முதல்கட்டமாக ரூ. 50,000 வரை கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி - நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இந்நிலையில், தமிழர் தேசம் கட்சியினர், ''அப்பாவி இளைஞனின் இறப்பை மூடிமறைக்கும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து, முசிறி தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜிடம் பேசினோம்.
"கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டான். மின்சாரம் தாக்கி இறக்கவில்லை. தவறாகப் பரப்புகிறார்கள். அந்தப் பையனின் குடும்பத்தினரைப் பார்த்துப் பேசி சரிபண்ணிவிட்டேன்" என்றார்.



















