விருதுநகர்: நிலநடுக்கத்தால் வீதிக்கு வந்த மக்கள்; ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆகப் பத...
Doctor Vikatan: ஆஸ்துமா, வீஸிங் அலர்ஜி உள்ளவர்கள் வீட்டுக்குள் ஏர் பியூரிஃபையர் பயன்படுத்தலாமா?
Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக ஆஸ்துமா, வீஸிங் அலர்ஜி இருக்கின்றன. மருந்து, மாத்திரைகள் பயன்படுத்துகிறேன். இந்நிலையில் வீட்டுக்குள் இண்டோர் செடிகள் வளர்ப்பதும், ஏர் பியூரிஃபையர் கருவி வைப்பதும் காற்றைச் சுத்திகரிக்கும்... அதனால் அலர்ஜி குறையும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.

இண்டோர் செடிகள் வளர்ப்பதால் காற்று சுத்தமாகும், அதன் விளைவாக நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும் என்பதெல்லாம் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட விஷயம் அல்ல. அறையில் சூழ்ந்திருக்கும் காற்று என்பது அதிகமாக இருக்கும். அந்த அளவு காற்றை செடிகள் வைத்துச் சுத்திகரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமும் இல்லை.
இண்டோர் செடிகள் வளர்ப்பது என்பது பார்வைக்கு அழகாக இருக்கும். புத்துணர்வு தரும். மனதுக்கு நல்ல உணர்வைத் தரும். மற்றபடி, அது அறையின் காற்றைச் சுத்திகரிக்கும் என்றெல்லாம் நிச்சயம் சொல்ல முடியாது.
அதே சமயம், அந்தச் செடிகளை வைப்பதால் கெடுதலும் ஏற்படப் போவதில்லை. ஆனால், இதில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பூப் பூக்கும்படியான செடிகள் வைப்பதால், அவற்றில் உள்ள மகரந்தம் அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, அப்படிப்பட்ட செடிகளைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் அலங்காரப் பொருள்கள் வைப்பதுபோல, இண்டோர் செடிகளையும் வைக்கலாம், அவ்வளவுதான்.

வெளியில் இருக்கும்போது பிரச்னையில்லை, அதுவே வீட்டுக்குள் நுழைந்தால் அலர்ஜி ஏற்படுகிறது என்பவர்களுக்கு 'ஏர் பியூரிஃபையர்' (Air Purifier) கருவிகள் உதவும். வீட்டுக்குள் அலர்ஜியை ஏற்படுத்துவதில், டஸ்ட் மைட்ஸ் (Dust Mites) எனப்படும் கண்ணுக்குத் தெரியாத, மிகச்சிறிய நுண்ணுயிரிகளுக்குத்தான் முதலிடம்.
படுக்கை, மெத்தை, தலையணை, சோஃபா போன்றவற்றில்தான் இவை அதிகமிருக்கும். படுக்கை விரிப்பு, தலையணை உறை, சோஃபா உறை போன்றவற்றை வாரம் ஒருமுறை வெந்நீரில் ஊறவைத்துத் துவைத்து, வெயிலில் காய வைக்க வேண்டும்.
தலையணை, மெத்தை போன்றவற்றை வருடக் கணக்கில் உபயோகிப்பவர்கள் பலர். குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றை மாற்றலாம். அது முடியாத பட்சத்தில், குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை வெயிலில் வைத்திருந்து, நன்றாகத் தட்டிவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம். இந்த வேலையைக்கூட அலர்ஜி இல்லாதவர்கள் செய்வது சிறந்தது.
ஃபேன், ஏசி, சீலிங் போன்றவற்றில் இந்த டஸ்ட் மைட்ஸ் மிகவும் விருப்பமாகக் குடியிருக்கும். அப்படியே தூசு தட்டாமல், ஒட்டடை மட்டும் அடிக்காமல், ஈரத்துணி வைத்துத் துடைத்துச் சுத்தப்படுத்த வேண்டும். வீட்டின் சுவர்களில் பூஞ்சைத் தொற்று தென்படுவது, சுவர் பெயர்ந்து வருவது, கறுப்பாக இருப்பது போன்றவற்றைச் சரி செய்ய வேண்டும்.
வீட்டினுள் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் வர வேண்டியது மிக மிக அவசியம். காற்றோ, வெளிச்சமோ உள்ளே வர முடியாதபடி வீட்டைப் பூட்டியே வைத்திருக்கக்கூடாது. இதுதான் அலர்ஜியைத் தவிர்க்கும் இயற்கையான வழி.

அதிக அலர்ஜி உள்ளவர்களுக்கு ஹைப்போ அலர்ஜெனிக் தலையணைகள் (Hypoallergenic Pillow) உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தாத மெத்தை, தலையணைகளை கவரில் போட்டுத் தனியே வைக்கலாம். கரப்பான்பூச்சி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
அவற்றை விரட்டும் ஸ்பிரேகூட அலர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதால் அலர்ஜி பாதிப்புள்ளவர்கள் இல்லாத நேரத்தில் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள், வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டியது முக்கியம். தவிர்க்க முடியாத பட்சத்தில் அவர்கள் ஏர் பியூரிஃபையர் உபயோகிக்கலாம்.
அதையும் அறையின் அளவு, சூழலுக்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். ஹை எஃபிஷியன்சி பர்ட்டிகுலேட் ஏர் (High-Efficiency Particulate Air) எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏர் பியூரிஃபையர் வாங்குவது சிறந்தது. இதில் காற்றில் உள்ள மிகச்சிறிய துகள்களையும் மிகத் துல்லியமாக வடிகட்டும் ஒரு உயர்தர தொழில்நுட்பம் இருப்பதால் மற்றவற்றைவிட சிறந்தது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
















