தமிழக ஊர்ப்பெயர்களில் 'ஹள்ளி' இணைக்கப்பட்ட விவகாரம்; ஜி.கே.மணியின் கோரிக்கைக்கு ...
Doctor Vikatan: குப்புறப் படுத்துத் தூங்கினால் முதுகுவலி வரும் என்பது உண்மையா?
Doctor Vikatan: என் வயது 45. நான் பல வருடங்களாகக் குப்புறப் படுத்துத் தூங்கியே பழகியவன். சமீபகாலமாக எனக்கு முதுகுவலி இருக்கிறது. படுக்கும் பொசிஷன் சரியில்லை என்றால் முதுகுவலி வரும் என்கிறான் என் நண்பன்.
குப்புறப்படுத்தால் முதுகுவலி வருமா.... மல்லாந்த நிலை, ஒருக்களித்த நிலை, குப்புறப் படுப்பது... எந்தப் பொசிஷனில் தூங்குவது சரியானது?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

மக்களில் சுமார் 10 சதவிகிதத்தினர் மல்லாந்த நிலையிலேயே படுத்துத் தூங்குகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இப்படித் தூங்கும்போது முதுகெலும்புக்கும் நல்ல ரெஸ்ட் கிடைக்கிறது.
சுமார் 60 சதவிகித மக்கள் ஒருக்களித்துத் தூங்குவதாகவும், சுமார் 16 சதவிகித மக்கள் ஒருக்களித்துத் தூங்குவதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது. ஒருக்களித்துத் தூங்கும்போது உங்கள் சுவாசம் சீராக இருக்கும் என்பதால் இது ஓர் ஆரோக்கியமான தூங்கும் முறையாகச் சொல்லப்படுகிறது.
ஒருக்களித்துத் தூங்குபவர்கள், தோள்கள் மற்றும் இடுப்புப் பகுதிக்குச் சரியான அழுத்தம் தரும் மென்மையான மெத்தையைத் தேர்வு செய்ய வேண்டும்.
தூங்கும் முறை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நல்ல தலையணை உபயோகிப்பதும் முக்கியம். ரொம்பவும் தடிமனாக இல்லாமல் நடுத்தரமான, போதுமான உயரத்தில் தலையணையைத் தேர்ந்தெடுங்கள்.
மெத்தையானது, உங்கள் முதுகுத்தண்டின் இயற்கையான வளைவை உறுத்தாதபடி, மிகவும் கடினமாக இல்லாததாகப் பார்த்துக் கொள்ளுங்கள். 'மெமரி ஃபோம்' (Memory foam) மற்றும் ஹைபிரிட் மெத்தை (Hybrid bed) வகைகள் சிறப்பாக இருக்கும்.

குப்புறப்படுத்துத் தூங்குவது கழுத்துக்கு நல்லதில்லை. பலகாலமாகப் குப்புறப்படுத்தே தூங்கிப் பழகியவர்கள், மிக மெல்லிய தலையணையைப் பயன்படுத்த வேண்டும். தலையணை இல்லாமல் தூங்குவது அதைவிடவும் சிறப்பு.
குப்புறப்படுத்துத் தூங்குகிறவர்களுக்கு முதுகுவலி வரும் வாய்ப்பு உண்டு. இந்த நிலையில் உறங்குபவர்களுக்கு முதுகெலும்பு தொய்வடையாமல் தடுக்க உறுதியான மெத்தை தேவைப்படும். 'இன்னர் ஸ்பிரிங் ஃபோம்' (Inner spring foam) வகை மெத்தையைப் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், உங்கள் முதுகுவலிக்குக் குப்புறப்படுத்துத் தூங்குவதுதான் காரணம் என நீங்களாக நினைத்துக்கொண்டிருக்காமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். வலிக்கு வேறு காரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கேற்ப சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

















