செய்திகள் :

பொன்னமராவதி: குடியிருப்பு பகுதியில் இடையூறாக இரும்பு குடோன்; மக்கள் சிரமம் - அதிகாரிகள் சொல்வதென்ன?

post image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அண்ணாநகரின் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் பழைய இரும்புக் கடை குடோனில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, அப்பகுதி மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுகாதாரச் சீர்கேடு, போக்குவரத்து நெரிசல் எனத் தொடரும் இந்தப் பிரச்னைக்கு முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னமராவதி அண்ணாநகரில் இயங்கி வரும் பழைய இரும்புக் கடையின் குடோனில், தீபாவளி இரவு 08/11/2026 அன்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குடோனுக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர், பழைய ஃப்ரிட்ஜ் உள்ளிட்டவற்றில் தீ மளமளவெனப் பரவியது.

இரும்புப் பொருட்களை வெட்டப் பயன்படுத்தும் ஆக்ஸிஜன், எல்.பி.ஜி மற்றும் அசிட்டிலீன் கேஸ் சிலிண்டர்கள் உள்ளே இருந்திருக்கலாம் என்றும், ஒருவேளை அதிலும் தீ பரவி இருந்தால் இன்னும் சேதம் அதிகமாக இருந்திருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் பீதியோடு தெரிவிக்கின்றனர்.

பொன்னமராவதி

தீக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இரும்புக் கடைக்குள் இருந்த பொருட்களின் உராய்வின் காரணமாக தீ பிடித்திருக்கலாம்" என்றனர்.

நல்வாய்ப்பாகப் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டாலும், சுற்றிலும் வீடுகள் நிறைந்த குடியிருப்புப் பகுதி என்பதால் தீபாவளி அன்று மக்கள் நள்ளிரவில் தூக்கத்தைத் தொலைத்துத் தவித்தனர்.

முதலமைச்சர் தனிப்பிரிவு புகார்:

ஆரம்பத்தில் சாதாரண பழைய இரும்பு வாங்கும் கடையாகத்தான் இது திறக்கப்பட்டது. ஆனால், தற்போது பிளாஸ்டிக் பொருட்களைக் கம்ப்ரஸ் செய்யும் ராட்சத இயந்திரம் வைத்து, கிரேன் மூலமாக லாரிகளில் ஏற்றி ஏற்றுமதி செய்யும் அளவுக்குப் பெரிய கடையாக மாறியுள்ளது.

குடியிருப்புப் பகுதியில் இந்த இயந்திரம் வைப்பதற்குப் பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், தீயணைப்புத் துறையிடமும் முறையான தடையில்லாச் சான்று (CTO) வாங்கப்பட்டுள்ளதா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

பொன்னமராவதி

இதுமட்டுமன்றி, கடைக்கு முன்பாகச் சாலையிலேயே பழைய பொருட்களை மலைபோலக் கொட்டி வைத்துள்ளனர். இதை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

கடையின் வெளியே ஆக்கிரமித்துக் கொட்டப்பட்டுள்ள பழைய பொருட்களாலும், இரும்பு போட வரும் டெம்போக்களாலும், கிரேன் மூலமாக லாரிகளில் பிளாஸ்டிக் பண்டல்களை ஏற்றுவதாலும் இந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வேகுப்பட்டி, குழிபிறை, நெற்குப்பை, ஒழுகமங்களம், கொன்னப்பட்டி, கொன்னையூர், பூலாங்குறிச்சி, அரசமலை, காரையூர் எனப் பல்வேறு ஊர்களில் இருந்து பொன்னமராவதியில் இருக்கும் தனியார் பள்ளிகளில்தான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த வழியைத்தான் அமல அன்னை பள்ளி மற்றும் லயன்ஸ் பள்ளி மாணவ மாணவிகள் தினமும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, அமல அன்னை பள்ளியின் 6 பேருந்துகள், லயன்ஸ் பள்ளியின் 8 பேருந்துகள் என காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி வாகனங்கள் இந்த நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.

ஆணி போன்ற இரும்புப் பொருட்கள் சில நேரங்களில் ரோட்டில் சிதறிக் கிடப்பதால் பள்ளிக்கு நடந்தே செல்லும் சிறு குழந்தைகள் வாகனங்களுக்கு இடையே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அபாய நிலை உள்ளது. பள்ளி வாகனங்களின் டயர்களும் பஞ்சர் ஆகிவிடுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொன்னமராவதி

சாலையோரம் கொட்டப்படும் பழைய பொருட்களால் அப்பகுதியின் சாக்கடைக் கால்வாய் முழுமையாக அடைத்துக்கொண்டு கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்குகிறது. மேலும், கடையின் வெளியே திறந்தவெளியில் கிடக்கும் பழைய சின்டெக்ஸ் டேங்குகளில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

வெவ்வேறு கிராமங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம்.

"ஆரம்பத்துல இருந்தே வெளிய எந்தப் பொருளும் போடாதீங்கனுதான் சொல்றோம். ஆனா, கேக்க மாட்றாங்க. குடோன்ல பிடிச்ச தீ, கடைக்கு முன்னாடி இருந்த பொருள்ல பிடிச்சிருந்தா அவுங்க கடையிலையும் தீ பிடிச்சுருக்கும்; எங்க வீட்டுலையும் பிடிச்சிருக்கும். கடைக்கு மேலதான் கரண்டு கம்பி போகுது.

கொசுத் தொல்ல அதிகமா இருக்கு. எங்க வீட்ல உள்ளவங்களுக்கு 2 வாரமா முடியல. பழைய வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், சின்டெக்ஸ் ஓப்பன்லே இருக்குறதால தண்ணி தேங்கிறுது. இவுங்க போடடுற குப்பையால சாக்கடை அடைச்சுக்குது.

பிளாஸ்டிக்க கம்ப்ரஸ் பண்ற மெஷின் வச்சிருக்காங்க. அதுல இருந்து வர சத்தத்தால வீட்லே இருக்கவே முடியல.

அவுங்க தொழிலும் பாதிக்கக் கூடாது. அதே நேரத்துல பக்கத்துல இருக்க வீட்டுக்காரங்களுக்கும் எந்தப் பாதிப்பும் இருக்கக் கூடாது. வெளிய கெடக்குற பொருளெல்லாம் எடுத்து உள்ள வச்சுக்கிட்டா நல்லா இருக்கும். நாங்களும் பல தடவ சொல்லிட்டோம். ஆனா, கேக்கல. அதுனாலதான் சி.எம். செல்லுக்கு கம்ப்ளைன்ட் போட்டோம். ஆனா, அதுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கல. சீக்கிரம் தீர்வு கெடச்சா நல்லா இருக்கும்" என்றனர்.

பொன்னமராவதி

இதுகுறித்து விளக்கம் கேட்க பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புகொண்டோம். தொட்டியம்பட்டி ஊராட்சியில் தற்போது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் அந்த ஊராட்சியை கவனித்து வரும் மண்டல அலுவலரிடம் பேச அறிவுறுத்தினார்.

அதன்படி மண்டல அலுவலரிடம் கேட்டபோது, "தீபாவளிக்கு முன்பாகவே அந்த கடைக்கு நேரில் சென்று, ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை அகற்றச் சொல்லி எச்சரிக்கை விடுத்தோம். அதன் பேரில் அவர்களும் பெயரளவுக்கு சுத்தம் செய்திருந்தார்கள். இப்போது மீண்டும் பழைய ஃப்ரிட்ஜ், சின்டெக்ஸ் டேங்குகள் வெளியே இருப்பதாகத் தெரிவிக்கிறீர்கள்.

உடனடியாக ஊராட்சிச் செயலரை அனுப்பி மீண்டும் நேரில் பார்வையிடச் சொல்கிறேன். விரைவில் இதைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

மேலும், பிளாஸ்டிக் கம்ப்ரஸ் இயந்திரம் வைக்க முறைப்படி அனுமதி (CTO) பெறப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, "அது முந்தைய ஊராட்சி மன்றத் தலைவர் காலத்தில் வாங்கப்பட்டதா எனத் தெரியவில்லை; அதையும் நான் சரிபார்க்கிறேன்" எனப் பதிலளித்தார்.

தொடர்ந்து, முதலமைச்சர் தனிப்பிரிவில் மக்கள் அளித்த புகார் குறித்துக் கேட்டதற்கு, "ஆமாங்க சார்... மக்களும் புகார் பண்ணியிருக்காங்க. பள்ளிக் குழந்தைகளுக்கெல்லாம் ரொம்ப தொந்தரவா இருக்குனு சொல்லிருக்காங்க. சீக்கிரமே இதைச் சரிபண்ண உத்தரவு கொடுக்கிறேன்" என்றார்.

``தமிழகத்தில் பணவீக்கம் உயர்வு; உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கணும்"- அன்புமணி

இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் பணவீக்கம் உயர்ந்துள்ளது எனவும் உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே பிடியாணை: நீதித்துறையை அதிரவைத்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் காலமானார்

இந்திய நீதித்துறை வரலாற்றில் பதவியில் இருந்தபோதே உச்ச நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரும்,அதிரடியான கருத்துகளுக்கு பெயர் பெற்றவருமான சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71... மேலும் பார்க்க

"Teleprompter பயன்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பிடித்தவரே நடுவர்"- மோடிக்கு ராகுல் சவால்!

இந்திய பிரதமர் மோடி தன்னுடைய பேச்சுகளின் போது, டெலி பிராம்ப்டர் பயன்படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.தீபாவளியையொட்டி நேற்று (நவம்பர் 12) டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் செய்தியாள... மேலும் பார்க்க

ஆரணி: தவெக மா.செ மீது பாலியல் புகார்; கட்சி அலுவலகத்தை இழுத்து மூடிய பெண் நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க-வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் எம்.சத்யா என்கிற சத்தியராஜ். செய்யாறு தொகுதியைச் சேர்ந்த சத்யா, ஆரணி தொகுதியை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே நி... மேலும் பார்க்க

சிவகங்கை: துபாயில் தகவல் தொடர்பு துண்டிப்பு; கொல்கத்தாவில் வழிப்பறி- மீண்டது எப்படி? 18 நாள் திகில்!

வெளிநாட்டில் உழைத்துவிட்டுத் தாயகம் திரும்பும் ஆசையில் விமானம் ஏறக் காத்திருந்த கணவர் திடீரென மாயமானதால், 18 நாள்களாகக் கண்ணீரோடு தவித்த மனைவிக்கு, மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் கணவர் பத்திரமா... மேலும் பார்க்க

அயலக உதவித்தொகை திட்டம்: விமர்சித்த திமுக; விளக்கம் அளித்த சமூக நீதித்துறை!

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக... மேலும் பார்க்க