RGS VET: பசுவுக்கும் தீபாவளி! நான்காம் ஆண்டாக 'கோ-ஸ்வஸ்தி' - இந்தியாவின் முதல் ம...
சிவகங்கை: துபாயில் தகவல் தொடர்பு துண்டிப்பு; கொல்கத்தாவில் வழிப்பறி- மீண்டது எப்படி? 18 நாள் திகில்!
வெளிநாட்டில் உழைத்துவிட்டுத் தாயகம் திரும்பும் ஆசையில் விமானம் ஏறக் காத்திருந்த கணவர் திடீரென மாயமானதால், 18 நாள்களாகக் கண்ணீரோடு தவித்த மனைவிக்கு, மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் கணவர் பத்திரமாக வீடு திரும்பியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்பேனியா டு தாயகம்:
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரி (35). இவரது கணவர் பெரியசாமி (43), குடும்பச் சூழல் காரணமாகக் கடந்த 2023-ம் ஆண்டு அல்பேனியா நாட்டுக்குக் கட்டட வேலைக்காகச் சென்றிருந்தார். மூன்று ஆண்டுக்கால உழைப்புக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 19-ம் தேதி அல்பேனியாவிலிருந்து ஊருக்குத் திரும்புவதாகத் தனது மனைவி முனீஸ்வரிக்குக் கைப்பேசி மூலம் மகிழ்ச்சியுடன் தகவல் தெரிவித்தார்.
துபாய் விமான நிலையத்தில் துண்டிக்கப்பட்ட தொடர்பு:
அன்றைய தினம் இரவு துபாய் விமான நிலையம் வந்து சேர்ந்த பெரியசாமி, அங்கிருந்து அதிகாலை 2 மணிக்கு கொல்கத்தா செல்லும் இணைப்பு விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருப்பதாக மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அதன் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை; தொலைபேசித் தொடர்பும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. விமானம் ஏற வேண்டிய கணவர் என்ன ஆனார் எனத் தெரியாமல் முனீஸ்வரியும், அவரது குடும்பத்தினரும் நிலைகுலைந்து போயினர்.
ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை:
கணவரைத் தேடி அலைந்து தவித்த முனீஸ்வரி, தனது குடும்பத்தினருடன் சென்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம் கடந்த நவம்பர் 2-ம் தேதி கண்ணீர்மல்க மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உடனடியாக அல்பேனியா மற்றும் துபாய் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய , மாநில அரசுகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில் மாயமானதாகக் கருதப்பட்ட பெரியசாமி கடந்த நவம்பர் 6-ம் தேதி பத்திரமாகத் தனது சொந்த ஊரான அய்யம்பட்டிக்கு வந்து சேர்ந்தார்.
பின்னணியில் நடந்த திகில் சம்பவம்:
துபாயில் மாயமானதாக நினைத்த பெரியசாமிக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அவரது தம்பி முருகன் விவரிக்கையில், "அண்ணன் துபாயிலிருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்குப் பத்திரமாகத்தான் வந்து இறங்கியுள்ளார். அங்கிருந்து சென்னைக்கு ரயில் மூலம் வருவதற்காக வாடகைக் காரில் ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்து, அண்ணனிடமிருந்த பாஸ்போர்ட், கைப்பேசி, பணம் உள்ளிட்ட அனைத்தையும் பறித்துக்கொண்டு நடுவழியில் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர்.

முன்பின் தெரியாத ஊரில், கையில் ஒரு ரூபாய்கூட இல்லாமல், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் கையறு நிலையில் அண்ணன் தவித்துள்ளார். பின்னர் பல சிரமங்களுக்கு இடையே நல்ல உள்ளங்களின் உதவியை நாடி சென்னை வந்து சேர்ந்தவர், அங்கிருந்து மூன்று நாட்களுக்கு முன்பு சிவகங்கைக்குப் பத்திரமாக வந்து சேர்ந்தார்'' என்றார் அதிர்ச்சி விலகாமல்.
கணவரை இழந்துவிட்டோமோ என்ற அச்சத்தில் 18 நாட்கள் தவித்த முனீஸ்வரிக்கு, மாவட்ட ஆட்சியரின் உதவியால் கணவர் உயிரோடு கண்முன்னே வந்து நின்ற சம்பவம் அய்யம்பட்டி கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












