திருவொற்றியூர் அ.தி.மு.க பிரசாரத்தில் கைகலப்பு - வேட்பாளர் மகன் மீது சரமாரி குற்...
போர் நிறுத்தத்தை சாதித்த பாகிஸ்தான்: அமெரிக்கா, ஈரானை சமாளித்தது ஏன், எதற்கு?|Explained
உலகில் இன்று பரபர செய்தியே 'இரண்டு வாரங்களுக்கான ஈரான் போர் நிறுத்தம்'. அதுவும் 38 நாள்களுக்குப் பிறகு.
இந்தப் போர் நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதை வரவேற்ற ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி என இரு தரப்பும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரை பாராட்டி தள்ளியிருக்கின்றனர்.
உலக அரங்கில் பாகிஸ்தானுக்கு இந்தப் பாராட்டுகளும், போர் நிறுத்தமும் புது முகமாக மாறியுள்ளது.

ஸ்டார் பிளேயர் 'பாகிஸ்தான்'
சரி... இந்தப் போர் நிறுத்த முயற்சிக்குள் பாகிஸ்தான் எப்படி வந்தது என்கிற கேள்வி பலருக்கும் எழும்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப்புள்ளி அசிம் முனீர். கடந்த மார்ச் 22-23 தேதிகளில், போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நாங்கள் முன்னெடுக்கிறோம் என்று ட்ரம்பின் காதுகளுக்கு எடுத்துச் சென்றார் அசிம் முனீர்.
ட்ரம்ப் ஓகே சொல்ல, ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தொலைபேசியில் உரையாடினர்.
இந்த உரையாடலுக்குப் பின், மார்ச் 26-ம் தேதி பாகிஸ்தான், அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் அதிகாரப்பூர்வ இடைத்தரகர் ஆனது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையையும், போர் நிறுத்தத்தையும் பாகிஸ்தான் மட்டும் சாத்தியமாக்கவில்லை. பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது. ஆனால், இதில் ஸ்டார் பிளேயர் பாகிஸ்தான்.
இந்தக் குழு தான் அமெரிக்காவின் 15 பரிந்துரைகளை ஈரானிடமும், ஈரானின் 10 பரிந்துரைகளை அமெரிக்காவிற்கும் கொண்டு சென்றது.

ட்ரம்ப் மிரட்டல்
இந்தப் பேச்சுவார்த்தை ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கடும் தாக்குதல்கள்... கடுமையான சொற்கள் என மாறி மாறி நடந்துகொண்டிருந்தது.
இதன் உச்சமாக தான் நேற்று கிழக்கு நேர மண்டலத்தின் படி, இரவு 8 மணிக்கு ஈரானுக்கு நேரம் குறித்தார் ட்ரம்ப். இது கடந்த ஞாயிற்றுக்கிழமை சொன்னது.
நேற்று அமெரிக்க நேரப்படி அதிகாலை (நமக்கு மாலை), 'ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த ஈரான் நாகரிகமும் அழிக்கப்படும்' என்று தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதன் பிறகு, அமெரிக்காவில் இருந்து வந்த ஒவ்வொரு பேச்சுகளும், எதிர்வினைகளும் இந்தத் தாக்குதலை உறுதி செய்வதாக இருந்தது.
இன்னும் ஐந்து மணி நேரம் தான்... இன்னும் நான்கு மணிநேரம் தான்... என்று கவுன்டவுன் சென்றுகொண்டிருந்த நேரத்தில், நமக்கு நள்ளிரவு 3 மணியளவில், இரண்டு வார கால அவகாசத்தைக் கேட்டது பாகிஸ்தான்.
இதற்கு ட்ரம்ப் ஒப்புதல் கொடுக்கவே, இந்திய நேரப்படி இன்று காலை பெரிய சம்பவம் தடுக்கப்பட்டது.

ஏன் பாகிஸ்தான்?
அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் என்ட்ரி கொடுக்க முக்கிய காரணமே, அதன் எல்லை தான்.
இந்தியா, சீனா, ரஷ்யாவைப் போல ஈரான் போர், பாகிஸ்தானுக்கு எங்கேயோ நடக்கும் போர் அல்ல. அது பக்கத்து நாட்டில் நடக்கும் போர்.
பாகிஸ்தானும், ஈரானும் கிட்டத்தட்ட 900 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இந்தியா மாதிரி பாகிஸ்தானும் எரிபொருளுக்குப் பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நாடு தான்.
அதனால், ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் பாகிஸ்தானுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து வரும் 81 - 90 சதவிகிதம் எண்ணெய் இறக்குமதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால், பாகிஸ்தானில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளது... அலுவலகங்கள் நான்கு நாள் வேலை நேரமாக மாறியிருக்கின்றன.
சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் பாகிஸ்தானியர்கள் அதிகம் வேலை பார்க்கிறார்கள். அங்கிருந்து வரும் பணத்திற்கும் 'கட்' ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாக, ஷியா முஸ்லீம்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடு பாகிஸ்தான். இங்கே ஈரான் உச்சத் தலைவர் கமேனியில் இறப்பால் கராச்சி போன்ற இடங்களில் போராட்டம் நடந்தது.
2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானும், சவுதியும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன் படி, இரு நாட்டில் எந்த நாட்டிற்கு ஆபத்து என்றாலும், மற்ற நாடு உதவ வேண்டும்.
இந்தக் காரணங்களால் தான், பாகிஸ்தான் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.

பாகிஸ்தானுக்கு பயன் என்ன?
இதை தாண்டி, இந்த அமைதிப் பேச்சுவார்த்தை, போர் நிறுத்தத்தால், பாகிஸ்தானுக்கு சில... பல நன்மைகளும் உண்டு.
> பாகிஸ்தான் மட்டுமே ஈரான், அமெரிக்கா என இரு நாடுகளுடனும் நல்ல உறவில் இருக்கிறது. அதனால், இருவரிடமும் பேச பாகிஸ்தானுக்கு மிக எளிதாக இருந்தது.
> முன்னரே சொன்னதுபோல, பெரிய வளர்ச்சி இல்லாத நாடு... தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்று பாகிஸ்தானுக்கு வேறு முகம் இருந்தது. இப்போது அது முற்றிலும் மாறியிருக்கிறது.
வரும் 10-ம் தேதி அமெரிக்கா, ஈரான் இடையே நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் தான் நடக்க உள்ளது. இதுவே பெரிய மாற்றம்... முன்னேற்றம்.
> போர் நிறுத்தத்தின் மூலம் எண்ணெய் சப்ளை முதல் அந்த நாட்டிற்குள்ளேயே எழுந்த அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கட்டியுள்ளது பாகிஸ்தான்.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு இந்தப் போர் நிறுத்தத்தில் பல சாதகங்கள் இருந்தாலும், பாகிஸ்தானின் இந்த முயற்சியைக் கட்டாயம் பாராட்டி தான் ஆக வேண்டும்.














