LIK: "அனிருத் நடிக்க வேண்டிய படம் அது!"- ஆர்.ஜே பாலாஜி ஷேரிங்ஸ்
இந்திரா Vs காமராஜர்: தமிழகத்தை உலுக்கிய 1971-ன் அந்தச் 'சதுரங்க' தேர்தல் | Vote Vibes
1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தேசிய அரசியலில் கோலோச்சிய காமராஜர் மற்றும் ராஜாஜி ஆகிய இரு துருவங்களின் செல்வாக்கு சரிந்து, கருணாநிதி தலைமையிலான தி.மு.க தேசிய அளவில் ஒரு வலிமையான சக்தியாக உருவெடுத்த தருணம் அது.
காங்கிரஸ் பிளவும் அதிகாரப் போட்டியும்:
லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு, இந்திரா காந்தியைப் பிரதமராக அமர்த்தியவர் காமராஜர். ஆனால், பதவியேற்ற பிறகு இந்திரா காந்தி தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினார். கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி, காமராஜரின் ஆலோசனைகளை மீறி முடிவெடுத்தார். இதன் விளைவாக, இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. காமராஜர் தலைமையில் மூத்த தலைவர்களைக் கொண்ட 'ஸ்தாபன காங்கிரஸ்' என்றும், இந்திரா காந்தி தலைமையில் 'இந்திரா காங்கிரஸ்' என்றும் இரு அணிகளாகப் பிரிந்தன.
கூட்டணி மாற்றங்கள்:
தமிழகத்தில் 1967-ல் தி.மு.க-வை ஆதரித்த ராஜாஜியின் சுதந்திரா கட்சி, 1971-ல் தனது பரம எதிரியான காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸுடன் கைகோர்த்தது. இதனை 'மகா கூட்டணி' என்று அழைத்தனர். மறுபுறம், ஆளுங்கட்சியான தி.மு.க, இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று, ஓராண்டு முன்னதாகவே சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தித்தார்.
திமுக - இந்திரா காங்கிரஸ் மோதல்:
தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க-விற்கும் இந்திரா காங்கிரஸிற்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. சட்டசபையில் 80 இடங்களைக் கேட்ட இந்திரா காங்கிரஸிற்கு, வெறும் 15 இடங்களே தரப்படும் என தி.மு.க பிடிவாதம் காட்டியது. "இது எங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு" என காங்கிரஸ் கூறியபோது, "எங்கள் இயக்கமே சுயமரியாதை இயக்கம்தான்" எனப் பதிலடி கொடுத்தார் கருணாநிதி. இறுதியில் சட்டசபைக்கு 20 இடங்களும், நாடாளுமன்றத்திற்கு 10 இடங்களும் இந்திரா காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டன.

தேர்தல் முடிவில்...
தேர்தல் முடிவுகள் தேசியத் தலைவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தன. காமராஜர் - ராஜாஜி கூட்டணி படுதோல்வியைத் தழுவியது. தி.மு.க 184 தொகுதிகளைக் கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஸ்தாபன காங்கிரஸ் வெறும் 15 இடங்களை மட்டுமே வென்றது. இந்த வெற்றியின் மூலம், காமராஜர் மற்றும் ராஜாஜி போன்ற தேசியத் தலைவர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் முடிவுக்கு வந்தது. இந்திரா காந்தியைத் தனது நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வைத்ததன் மூலம், கருணாநிதி தேசிய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்தார்.
















