அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!
மகாராஷ்டிரா அமைச்சரின் படுக்கை அறை காணொளி - திட்டமிட்ட சதியா? பதவி விலகுவாரா?
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் சார்பாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் நர்ஹரி ஜிர்வால். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
நர்ஹரி தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. அமைச்சரின் படுக்கை அறையில் திருநங்கை ஒருவர் இருக்கிறார். ஒரு காணொளியில் அமைச்சர் உறங்கிக்கொண்டிருக்கிறார். அங்கு திருநங்கை ஒருவர் படுக்கையில் அமர்ந்து இருக்கிறார். மற்றொரு காணொளியில் அமைச்சருடன் திருநங்கை படுத்திருக்கிறார். அந்த காணொளியால் அவர் சார்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காணொளியில் இடம் பெற்றுள்ள திருநங்கையின் சகோதரர் இது குறித்து கூறுகையில்,' அவள் பிரபலமானவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்.

அவள் சட்டமேலவை உறுப்பினராகவோ அல்லது திருநங்கை வாரியத்தின் உறுப்பினராகவோ வர விரும்பினார். என்னையும் மிரட்டி இருக்கிறார்''என்றார். இந்த காணொளியை தொடர்ந்து அமைச்சர் நர்ஹரிய உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் ஹர்ஷ்வர்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா இது குறித்து கூறுகையில், "இது ஒரு அவமானகரமான காணொளி. இதே அமைச்சர் இதற்கு முன்பு ஒரு லஞ்ச வழக்கில் தொடர்புடையவராக இருந்தார். இத்தகையவர்களைத்தான் கட்சி முன்னிறுத்த விரும்புகிறதா? அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்''என்று தெரிவித்தார்.
தற்போது வெளியாகியுள்ள ஒரு காணொளியின் பின்னணியில் உள்ள உள்நோக்கம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருக்கிறது. இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அமோல் மிட்கரி அளித்த பேட்டியில், ''சம்பந்தப்பட்ட காணொளி நர்ஹரிக்கு எதிரான ஒரு சதித்திட்டம் ஆகும். சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த உடனேயே இந்த 8 மாதப் பழைய காணொளி ஏன் திடீரென வெளிவந்துள்ளது? பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜோதிடர் அசோக் கராத் வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு சக்திவாய்ந்த நபர்களை அம்பலப்படுத்தும் என்பதால் இது செய்யப்பட்டிருக்கலாம்.
இது அந்த வழக்கிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும். இது ஒரு திட்டமிடப்பட்ட சதி. தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுனேத்ரா பவார் தனது கணவருக்குப் பிறகு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நர்ஹரி தான். முதலில் லஞ்ச வழக்கு வெளிவந்தது. அது ஓய்ந்துவிட்டதாகத் தோன்றியபோது, இந்த சர்ச்சை எழுந்துள்ளது.”என்று தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே நர்ஹரியின் அலுவலகத்தில் அவரது துறை கிளார்க் ஒருவர் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கி பிடிபட்டார். இப்போது மீண்டும் நர்ஹரி சர்ச்சையில் சிக்கி இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் சுனேத்ரா பவாருக்கு எழுந்துள்ளது. மற்றொரு புறம் கட்சியின் மகளிர் அணித்தலைவி ரூபாலி சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஜோதிடர் அசோக்குடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மாநில பெண்கள் கமிஷன் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இப்போது ரூபாலியை கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நாசிக் மற்றும் அகில்யா நகர் மாவட்டத்தில் இருந்து சுனேத்ரா பவாருக்கு வந்து இருக்கிறது. சுனேத்ரா பவார் கட்சி தலைவராகி ஒரு மாதம் தான் ஆகி இருக்கிறது. அதற்குள் இப்பிரச்னைகள் வந்து இருக்கிறது. ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் மாணிக்ராவ் சட்டமன்ற கூட்டத்தின் போது தனது மொபைல் போனில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















