செய்திகள் :

ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்: மனப்பிரச்னைகளைத் தீர்க்கும் ஊஞ்சல் உற்சவம்!

post image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, அருள்மிகு நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில். சுற்றியிருக்கும் ஊரில் உள்ள மக்களுக்கெல்லாம் தாயாக இருந்து காக்கும் இந்த அம்பிகை கோயில்கொண்ட வரலாறு அற்புதமானது.

முன்னொருகாலத்தில் விவசாயி ஒருவர், மாடுகள் பூட்டித் தன் நிலத்தை உழுதார். அப்போது, நிலத்தில் ஓரிடத்தில் கலப்பை மாட்டிக்கொண்டு அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு அந்த விவசாயி திகைத்தார். பூமிக்குள் தோண்டி பார்த்தபோது, உள்ளே பீடம் ஒன்று கிடைத்தது.

அதை வெளியில் எடுத்தார் விவசாயி. அப்போது, “நான் மாரியம்மன். எனக்கு இங்கே கோயில் அமைத்து வழிபாடு நடத்தவேண்டும். அப்படிச் செய்தால், அனைவரையும் காத்து நிற்பேன்" என்ற அசரீரி கேட்டது.

விவசாயி மனம் மகிழ்ந்து அவ்வண்ணமே செய்தார். அன்று முதல் இன்றுவரை அம்மன் அந்தப் பகுதி மக்களைக் காக்கும் தெய்வமாக ஆனார்.

ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்
ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்

ஒருமுறை அந்தப் பகுதியை ஆண்ட மன்னனுக்கு உடல் நலம் குன்றியது. அதைக் கண்ட அவன் மனைவி செய்வதறியாது இந்த அன்னையிடம் ஓடிவந்து வேண்டினாள். அன்னையும் மனமிறங்கி மன்னனுக்கு ஆரோக்கியம் அருள, அன்று முதல் இந்தத் தாய் பெண்களுக்குத் தாலி வரம் அருளும் நித்ய சுமங்கலி என்பதும் பிரசித்தமாயிற்று. அன்றுமுதலே இந்த அம்மனுக்கு `நித்யசுமங்கலி மாரியம்மன்' என்னும் திருப்பெயர் ஏற்பட்டது.

இந்தக் கோயில் கொங்கு மண்டலத்தில் தனிச்சிறப்போடு திகழ்கிறது, நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில். மற்ற கோயில்களில் எல்லாம் பெரும்பாலும் திருவிழாவின்போது மட்டும்தான் வேப்ப மரத்தால் ஆன கம்பம் நடப்பட்டு, அதனைச் சிவனாகப் பாவித்து திருக்கல்யாணம் முதலான வைபவங்கள் நிகழும்.

திருவிழா முடிந்ததும் அந்தக் கம்பம் நீர்நிலைகளில் சேர்க்கப்பட்டுவிடும். ஆனால், இந்தக் கோயிலில் வருடம் முழுவதும் கம்பம் அப்படியே இருக்கும். இந்தக் கோயிலில், ஐப்பசி முதல் செவ்வாய் தொடங்கி 15 நாட்கள் சீரும் சிறப்புமாக திருவிழா நடைபெறும்.

அதேபோல் ஆனிமாதம் அம்மனுக்கு திருவிளக்கு பூஜையும், சுமங்கலி பூஜையும் நடைபெறும். அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வார்கள்.

இங்கு வந்து சுமங்கலி பூஜையில் கலந்துகொண்டால் கன்னிப்பெண்களுக்கு மனதுக்கினிய மண வாழ்க்கை அமையும்; சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும்; தம்பதிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை.

ஆடி மாதத்திலும் சிறப்பு வழிபாடுகள் களைகட்டும். ஆடியில் அம்மனுக்கு நடைபெறும் 1000 கண்ணுடையாள் அலங்காரம், வெற்றிலை அலங்காரம், அன்ன அலங்காரம் ஆகியன விசேஷமானவை.

ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்
ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்

கோயிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலச்சந்தி பூஜையின் போது, அம்மனுக்கு 16 வகைப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பெண்கள் அம்மனுக்கு மஞ்சள் நிறத்தில் வஸ்திரம் வாங்கி சமர்ப்பணம் செய்தால் மாங்கல்யவரம் முதல் மழலைச் செல்வம் வரை சகல மங்கலங்களையும் தந்தருள்வாள்.

விழாக் காலங்களில் அக்னிச் சட்டி எடுத்தல், அலகுக் குத்துதல், பொங்கல் வைத்தல், அங்கப் பிரதட்சிணம், தீ மிதித்தல் என்று வழிபடுவார்கள்.

மேலும் உடல் வெப்பத்தால் உண்டாகும் அம்மை, அக்கி, காய்ச்சல் முதலான நோய்கள் நீங்கவும் இங்கே வேண்டிக்கொள்கிறார்கள். அன்னையும் அவர்களுக்கு விரைவில் நோய் நீங்க அருள் செய்கிறாள்.

உள்ளூரில் ஒரு நம்பிக்கை உள்ளது. கணவருக்கு உடல்நலப்பிரச்னை என்றால் பெண்கள் நேரே ஆலயத்துக்கு வந்து கோயில் கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, வேம்புக்கம்பத்துக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து பிரார்த்திக்கின்றனர்.

முடிந்தால் சிலர் பால் அபிஷேகம் செய்து, மஞ்சள்- குங்குமம் இட்டு, வஸ்திரம் அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கணவர் விரைவில் நலம் பெறுவார் என்பது நம்பிக்கை.

அதேபோன்று, ஐப்பசி மாத திருவிழாவின் 3-ஆம் நாள் வேம்புக்கம்பம் மாற்றும் நிகழ்ச்சியின்போது, பிள்ளை வரம் வேண்டி நிற்கும் பெண்களுக்கு மட்டும் தயிர் சாத பிரசாதம் வழங்கப்படுகிறது.

ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஊஞ்சல்
ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஊஞ்சல்

இந்தப் பிரசாதத்தைப் பெற விரும்பும் பெண்கள், காப்புக் கட்டிய நாளிலிருந்து பயபக்தியுடன் விரதம் கடைப்பிடிப்பார்களாம். பிரசாத தயிர் சாதம் பெறுவதற்காக, வெளியூர் பெண்களும் பெருமளவில் இந்தக் கோயிலுக்கு வந்து கலந்துகொள்கிறார்கள்.

இங்குள்ள ஊஞ்சலில் அம்மனின் பாதச்சுவடு பதிக்கப்பட்டுள்ளது. மனதுள் இனம் புரியாத பயம், சோர்வு, கலக்கம் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அம்மனை வழிபட்டு, இந்த ஊஞ்சலை மூன்று முறை ஆட்டிவிட்டு, பிரார்த்தித்து சென்றால், பயம் விலகி மனம் குளிரும் என்கிறார்கள்.

இது அன்றாடம் நடக்கும் அதிசயம் என்கிறார்கள் பக்தர்கள். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ராசிபுரத்தில் அருளும் நித்ய சுமங்கலி அம்மனைத் தரிசனம் செய்து வாழ்வில் நலம் பெறுங்கள்.

வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!

ஆற்றங்கரையிலும் ஆலமரத்து அடியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு எளிமையாக அருள் பாலிப்பவர் பிள்ளையார். இவரை எல்லோரும் எப்போதும் வழிபடலாம், வழிபடவேண்டும் என்பதற்காகவே இப்படியாக அமைத்தனர் நம் முன்னோர்கள். அப... மேலும் பார்க்க

வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!

மலைக்கு மேல் ஏறிச் சென்று வணங்கினால் நம்மை வாழ்க்கையிலும் ஏற்றிவிட்டு அழகு பார்ப்பான் முருகன். அப்படி அவன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். அவற்றுள் இயற்கை அழகு சூழ்ந்த ஒரு தலம்தான் பாலமதி.மலைகள் சூழ்ந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் முருகன் கோயில் பெயரில் மோசடி; பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை;பின்னணி என்ன?

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் பெயர் மற்றும் அடையாளத்தை கோயில் நிர்வாகத்தின் எந்தவிதமான அனுமதியும் இன்றி பயன்படுத்த... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்!

சுவாமி ஐயப்பனைத் தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்கிறார்கள். அதேபோன்று சுவாமி ஐயப்பனுக்கு என்று சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா மற்றும் ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்: போரை நிறுத்திய பொக்கிஷம்; இந்த ஈசனை சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை!

காஞ்சியின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் அதிசயம் கயிலாசநாதர் கோயில் என்பர். இந்தக் கயிலாசநாதர் கோயிலின் பிரமாண்ட வடிவமே பின்னர் உருவான தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற பிரம்ம... மேலும் பார்க்க

திருநெல்வேலி: நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.!

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.! மேலும் பார்க்க