தந்தை இறப்புக்குக் காரணமான ஏர்லைன்ஸின் விமானத்தில் பயணம்? சர்ச்சைகளுக்கு அஜித் ப...
விழுப்புரம் மாவடட்ம் பரிக்கல் நரசிம்மர் திருக்கோயில்: கடன், பிணி தீர்க்கும் அற்புதத் தலம்!
நாளை என்பதே நரசிம்மரிடம் இல்லை என்பார்கள். அபயம் என்று சரணடைந்தால் ஓடிவந்து காப்பார் நரசிம்மர் என்பது நம்பிக்கை.
நரசிங்கப் பெருமான் மீது, பிரகலாதனைப் போன்றே அளவற்ற பக்தியும் அடங்காத அன்பும் கொண்டிருந்த அரசன் வசந்தராஜன். பரிகலாசுரன் என்னும் அசுரனை வதைத்து வசந்த ராஜனுக்கு நரசிம்மர் அருள் புரிந்த அரிய தலம் பரிக்கல்.
விழுப்புரம்- உளுந்தூர்ப்பேட்டை நெடுஞ்சாலையில், விழுப்புரத்துக்கு தெற்கே 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம்.
திரிபுரம் எரித்த நிகழ்வில் அசுரர்கள் மாண்டனர். ஆனால் அந்த நிகழ்வில் தப்பிய அசுரன் பரிகலாசுரன். திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பகுதியில் யாருக்கும் தெரியாமல் பதுங்கிக் கொண்டான். அப்போது அந்தப் பகுதியை ஆண்டு வந்தவன் வசந்தராஜன் என்னும் மன்னன்.
தன் படைகளின் ஒரு பிரிவை நிறுத்தி வைத்துள்ள பரிக்கல் பகுதியில் நரசிம்மருக்கு நல்லதொரு கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவன் இதயத்தில் எழுந்தது. திருப்பணிகளைத் தொடங்கிய வசந்தராஜனுக்குச் சோதனைகள் தோன்ற ஆரம்பித்தன.
பரிகலாசுரன் தன் மாயப் படைகளுடன் வந்து பரிக்கல் பகுதியைத் தாக்கி மன்னனின் படைகளையும், திருப்பணி நடைபெற்று வந்த கோயிலையும் ஆவேசத்துடன் அழித்தான்.

வசந்தராஜனின் பிரியத்துக்கு உரிய பெற்றோர் இதே நேரம் மரணம் அடைந்தனர். மனம் வருந்திய மன்னன் பணிகள் அனைத்தையும் பாதியில் நிறுத்தி விட்டு தன் குருதேவரான வாம தேவரைப் பணிந்து வழிகாட்ட வேண்டினான். திருப்பணி துவக்கப்பட்ட நாளும், கோளும், நடைமுறையில் அனுசரிக்கப்பட்ட சாத்திர நெறிகளும் சரிவர அமையவில்லை என்பதை எடுத்துரைத்தார் வாமதேவர்.
கோயில் எழுப்ப வேறோர் இடத்தைத் தேர்ந்தெடுத்த வாமதேவர், வழிமுறைகளையும் தெளிவாகத் தெரிவித்தார். திருப்பணி தொடங்குமுன் மூன்று நாள்கள் இரவு- பகலாக இடைவிடாமல் வேள்வி இயற்ற வேண்டும் என்பதை இயம்பிய வாமதேவ முனிவர், பரிகலாசுரனால் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க விரிவான ஏற்பாடுகள் செய்தார்.
கங்கணம் ஒன்றை பூஜித்து வசந்தராஜன் கையில் கட்டினார். அரசனைப் பாதுகாக்கக் கூடிய அரிய மந்திரத்தை அவனுக்கு உபதேசம் செய்தார். முனிவர்கள் பலருடன் தான் யாகம் செய்யும்போது, வசந்தராஜன் அருகில் இருந்த புதருக்குள் மறைந்து இருக்குமாறு செய்தார்.
மறைவாக புதருக்குள் இருந்து கொண்டே மந்திரங்களை அவன் இடைவிடாமல் சொல்ல வேண்டும் என்பதற்காக மனத்தை நிலைநிறுத்தும் ஒரு ஞான நிலையை அவனுக்கு நல்கினார். ஏற்பாடுகள் யாவும் முடிந்ததும், யாகம் தொடங்கியது. யாகம் நடப்பதைப் பார்த்த பரிகலாசுரன் மாயப் படையுடன் பாய்ந்து வந்தான்.
அச்சம் அடையாத வாமதேவ முனிவர், ஆதியந்தம் இல்லாத அந்த நரசிம்ம மூர்த்தியின் அடிபணிந்து உய்யுமாறு அவனுக்கு அறிவுரை பகன்றார். ஆனால் பரிகலாசுரன் கேட்கவில்லை. யாக சாலையையும், மங்கலப் பொருட் களையும் மனம் போனபடி காலால் இடறி வெறியாட்டம் போட்டான்.
பிறகு வசந்தராஜன் மறைந்திருக்கும் புதரை அழித்து உட்புகுந்தான். தன் கையில் இருந்த கோடரியால் வசந்தராஜனின் தலையைப் பிளந்தான். இதைக் கண்ட நரசிம்மர் கோப ரூபத்தோடு தோன்றினார். பரிகலாசுரனை அழித்தார்.

அரக்கனை அழித்த அக்கணமே, வசந்தராஜன் உயிர்த்தெழுந்தார். அச்சம் அளிக்கும் உக்கிர உருவத்தை விடுத்து, அன்னை மகாலட்சுமியை அருகில் அமர்த்தி அன்பு பொங்கும் சாந்த மூர்த்தியாக அடியவர்க்கு அருள் பாலித்தவாறு அங்கு விளங்க வேண்டும் என்றும் இறைஞ்சினான் வேந்தன் வசந்தராஜன்.
திருமகள் அருகில் இருக்கச் சாந்த நரசிம்மராக, லட்சுமி நரசிம்மராக திவ்விய தரிசனம் தந்தார் சிங்கப் பெருமான். உயிர்த்தெழுந்த வாமதேவரும் மற்றவர்களும் வணங்கி மகிழ்ந்தனர்.
பரிகலாசுரன் வதம் செய்யப்பட்டதால் அந்தத் தலம் ‘பரிகலபுரம்’ என்று அழைக்கப்பட்டு, பின் ‘பரிக்கல்’ என்று மருவியது.
நான்கு புறங்களிலும் திருவீதிகள் சூழ்ந்திருக்க நடுவே மிக அழகாக அமைந்துள்ளது பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம். கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார். கொடிமரத்தின் அருகே வீழ்ந்து வணங்கி விட்டு உள்ளே நுழைந்தால் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கும் நரசிம்மரின் கருவறை.
பின்புறத் தடக்கைகள் சங்கும் சக்கரமும் தாங்கி அருட்காட்சி தருகின்றன. முன்புற இடக்கையால் மகாலட்சுமியை அழகுற அணைத்தவாறே, வலக்கையால் அருளை வாரி வழங்குகிறார். மணாளனின் மடியில் மகிழ்ச்சியுடன் அமர்ந்துள்ள மகாலட்சுமியின் முகத்தில் துலங்கும் புன்முறுவலை இன்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படி ஓர் அற்புதமான மந்தகாசப் புன்னகை.
கருவறையைச் சுற்றியுள்ள உட்பிராகாரத்தை வலம் வந்தால், தென்மேற்கில் கனகவல்லித் தாயாரின் சந்நிதி. கனகவல்லித் தாயார் சந்நிதிக்கு நேர் எதிரே வடமேற்கில் பக்த ஆஞ்சநேயர், வீரஆஞ்சநேயர் சந்நிதிகள். வெளிப் பிராகாரத்தில் ஆஞ்சநேயருக்கென்று மறுபடி ஒரு தனி சந்நிதி. தென்மேற்கு மூலையில் வரசித்தி விநாயகருக்கென ஒரு தனி சந்நிதி.

நாடி வருவோரின் பிணிகளைப் போக்கும் திருத்தலங்களில் பரிக்கலும் ஒன்று. அபூர்வ சக்தி வாய்ந்த பலன்களைத் தரும் கண்கண்ட மகத்தான திருத்தலம். பரிக்கல் நரசிம்மர் மிகப் பெரும் கடன் தொல்லைகளிலிருந்து மீளவும், உடலிலுள்ள நோய்கள் நீங்கி நலம் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அபாயங்களிலிருந்து மீளவும் என்றும் அருள் புரிபவர்.
இப்படிப்பட்ட அற்புதமான நரசிம்மர் தலத்தை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். வாழ்வில் வளமும் நலமும் கிடைக்கும்.


















