"பவர்-பிளேல விக்கெட்டை விட்டதுதான் பெரிய அடி!" - தோல்விக்குப் பின் ஹர்திக்!
தஞ்சை மாவட்டம், கொரநாட்டுக் கருப்பூர் பெட்டிக்காளி கோயில்: குபேர நிதி அளிக்கும் ஈசனின் சந்நிதி!
கும்பகோணத்தைச் சுற்றியிருக்கும் கோயில்களின் எண்ணிக்கை அநேகம். பழைமையும் பெருமையும் வாய்ந்த அந்தக் கோயில்களின் சாந்நித்தியமும் மகிமையும் பெரியது. அப்படி ஒருகோயில்தான் திருப்பாடலவனம் என்று போற்றப்படும் கொரநாட்டுக் கருப்பூர்.
கும்பகோணத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கொரநாட்டு கருப்பூரில் அபிராமியம்மை சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்திரன், ஈசனின் அருளைப் பெற, கும்பகோணத்தில் பௌந்தரீக யாகம் செய்தபோது, யாகக் கலசத்தில் இருந்து அமிர்தத்துக்கு நிகரான ஐந்து திரவத் துளிகள் சிதறி சுவாமிமலை, திருப்பாடலவனம் எனும் கொரநாட்டுக் கருப்பூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், திருவிடைமருதூர் ஆகிய தலங்களில் விழுந்தன.
அதனால், இவை பஞ்ச குரோசத் தலங்களாக விளங்குகின்றன. மாசி மகத்தன்று இந்த ஐந்து தலங்களையும் ஒரேநாளில் தரிசிப்பது வெகு புண்ணியம் என்கின்றன புராணங்கள்.

பிரம்மன் இங்கே சிவலிங்கப் பூஜை செய்து, தோஷம் நீங்கிச் சிவனருள் பெற்ற தலமாக கொரநாட்டுக் கருப்பூர் விளங்குகிறது. குபேரனும் இங்கு வழிபட்டே செல்வத்துக்கு அதிபதியானார். இந்திரன் இங்கு தவமிருந்து சிவ-பார்வதி தரிசனம் பெற்றான். இதனால் சூரியன், சுரதன் போன்றோர் வந்து வழிபட்ட தலம் இது.
இத்தலத்தில் புகழ்பெற்ற புகழ் கொண்ட சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்தான் துடியான ஒரு காளியம்மனும் வீற்றிருக்கிறாள். இத்தலத்தில் இந்தக் காளி கோயில்கொண்ட வரலாறு மிகவும் சிலிர்ப்பானது.
220 வருசத்துக்கு முன், ஊருக்கு தெற்கே காவிரி ஆற்றில் மிதந்துவந்தது ஒரு பெட்டி. அது ஊரார் எல்லாரும் சேர்ந்து அதைத் திறந்து பார்த்தனர். மின்னும் மேனியளாய் உள்ளே அம்மனின் சிலை. எட்டுக் கரங்களும் அலங்கார வடிவமுமாகத் திகழ்ந்த அன்னையின் திருமேனி இடுப்புவரை மட்டுமே இருந்தது.
இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஜனங்கள் திகைத்து நிற்க ஒரு சிறு பெண் அருள்வந்து `வந்திருக்கறவ... குலம் காக்கும் காளி. அவளை ஓலைக் குடிசைக்குள் வைத்து, தயிர் சாதப் படையல் போட்டுக் கும்பிடுங்க' என்று சொன்னாள். அதை அப்படியே ஏற்று மக்களும் செய்தனர்.
ஆனால் ஒருநாள் குடிசைத் தீப்பற்றி எரிந்தது. பெட்டியை மக்கள் பாதுகாத்தனர். அதன்பின் குறி கேட்டபோது காளி, சுந்தரேஸ்வரர் கோயிலில் கோயில்கொள்ளவே விரும்புகிறாள் என்றனர். அதன்பின் பெட்டிக் காளியை அங்கேயே கோயில்கொள்ளச் செய்தனர்.

இன்று சுந்தரேஸ்வரர் கோயில் என்பதைவிட பெட்டிக்காளி, சுந்தரகாளி கோயில் என்று சொன்னால்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரிகிறது.
மூன்றாம் குலோத்துங்கச் சோழன் இந்த ஆலயத்தைப் புனரமைத்ததாகச் சொல்கிறார்கள். ஐந்துநிலை ராஜகோபுரம் மற்றும் இரண்டு திருச்சுற்றுகளுடன் திகழும் ஆலயத்தில் அனைத்துப் பரிவாரத் தெய்வங்களையும் தரிசிக்கலாம். மூலவர் சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பிகை அபிராமி ஆகியோருக்கு இடையே ஈசான பாகத்தில் எழுந்தருளி இருக்கிறாள் ஸ்ரீபெட்டிக்காளியம்மன்.
காளிதேவியின் சிரம் வடக்கு நோக்கி இருக்குமாறு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பெட்டிக்குள் இருக்கும் காளி அழகு வதனமும் ஆங்கார ரூபமும் ஒருங்கே கொண்டவள். வலது திருக்கரங்களில் சூலம், அரிவாள், உடுக்கை, கிளி தாங்கியபடியும், இடது கரங்களில் பாசம், கேடயம், கபாலம், மணி ஏந்தியபடி திகழ்கிறாள் இந்தப் பெட்டிக்காளி.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், ராகுகால வேளையில் பெட்டி திறக்கப்படும். அப்போது சுந்தர மகாகாளிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும். அவ்வேளையில் அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மற்ற நாள்களில் பெட்டி திறக்கப்படுவதில்லை.
பெட்டியைத் திறந்தபிறகு, வண்ணமிகு மலர்கள், புனுகு, ஜவ்வாது, சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் பழங்கள் வைத்து அர்ச்சனை செய்து ஆராதிப்பது வழக்கம். சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.
குங்குமம், எலுமிச்சைப்பழம் மற்றும் புஷ்பம் என அம்மன் கோயிலில் தரப்படும் பிரசாதம் எதுவும் இங்கே தரப்படுவதில்லை. விபூதியும் நைவேத்தியமுமே பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படுகின்றன.
இந்தக் காளியைத் தரிசிப்பதற்கு வேறுசில கட்டுப்பாடுகளும் உண்டு. கர்ப்பிணிகள், எண்ணெய் ஸ்நானம் செய்தவர்கள், முகச்சவரம் செய்தவர்கள் காளியைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

ஸ்ரீசுந்தரேஸ்வரரை வழிபட்டு, குபேரன் செல்வத்துக்கு அதிபதியாக வரம்பெற்ற தலம் இது என்பதால் தீபாவளித் திருநாளுக்கு மறுநாள் கேதாரகௌரி நோன்பு அன்று ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் ஸ்ரீஅபிராமி யம்மைக்கும் சிறப்பு குபேர பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த நாளில் நடைபெறும் ஹோமம், அபிஷேகம், விசேஷ பூஜை ஆகியவற்றில் கலந்துகொண்டால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதிகம்.
தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில் இங்கு வந்து, பெட்டிக்காளியம்மனுக்கு நெய் தீபமேற்றி வணங்க வேண்டும். ஆறாவது வெள்ளிக் கிழமையன்று, சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து அம்மனை வணங்கினால், வேண்டியது கிடைக்கும் என்கிறார்கள்.
மேலும், சர்க்கரைப் பொங்கல், உப்பு இல்லாத தயிர் சாதம் மட்டுமே அம்மனுக்குப் படைக்கிறார்கள். உப்பு சேர்த்த எந்தப் பொருளையும் நைவேத்தியம் செய்வதில்லை. பெட்டியைத் திறப்பதற்கு முன்னர், உக்கிரக் காளியைக் குளிர்விக்கும் பொருட்டு, குளிர்ச்சி தரும் தயிர்ப் பள்ளயம் போடப்படுகிறது.
பசுந்தயிர் கலந்த சாதத்தில் வெங்காயம் நறுக்கிச் சேர்த்துப் பள்ளயம் போடப்படும். இதனால் காளியின் வெம்மை தணிந்து குளிர்வாள் என்கிறார்கள் பக்தர்கள்.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை பெட்டிக்காளியையும் குபேரனுக்கு அருளிய சுந்தரேஸ்வரரையும் தரிசித்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.


















