PBKS vs LSG: `தேன் கூட்டில் கை வைத்த ரிஷப் பன்ட்' - அடித்து ஆடிய பஞ்சாப்; அடி வா...
தஞ்சை மாவட்டம், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்: சாபங்கள் தீர்க்கும் பிருஹத் சனீஸ்வரர் சந்நிதி!
சுவாமி அட்சயபுரீஸ்வரர் என்று அருளும் தலங்கள் பல நம் தமிழகத்தில் உள்ளன. இப்படிப்பட்ட தலங்களில் வழிபட்டால் நம்மிடம் இருக்கும் தனம் தான்யம் ஆகியன பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.
வாருங்கள் சுவாமி அட்சயபுரீஸ்வரராய் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு அருளும் தலம் ஒன்றைக் குறித்து அறிந்துகொள்வோம்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள விளங்குளம். இங்குதான் ஈசன் அட்சயபுரீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை இத்தலம் சென்று வழிபட்டால் அந்த ஆண்டு முழுவதும் செல்வவளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்கே அம்பிகை ஸ்ரீஅபிவிருத்தி நாயகி என்கிற திருப்பெயரோடு அருள்பாலிக்கிறார். இருவருமே இக, பர லோகத்துக்குமான அனைத்துச் செல்வங்களையும் அருளுபவர்கள். மேலும் இத்தல விசேஷங்களில் ஒன்று ஆதி பிருஹத் சனீஸ்வரர் சந்நிதி கொண்டிருப்பது.

முதலாம் மாறவர்ம பராக்கிரம பாண்டியன், இத்தலத்தை வழிபட்டு பெரும் செல்வம் அடைந்தான் என்கிறது தல வரலாறு. அதனால், இந்தக் கோயிலுக்கு நிலங்களையும் அவற்றுக்கு வரிவிலக்கும் அளித்துள்ளார், அந்த மன்னர்.
ஒருமுறை, யமதர்மன் கொடுத்த சாபத்தால் சனிபகவான் தனக்கு ஏற்பட்ட தோஷங்களைத் தணிக்க, விளா மரங்கள் கொண்ட இந்த வனப்பகுதிக்கு வந்தார். சுரைக்குடுக்கையில் யாசகம் பெற்று, அவற்றை உடல் குறைபாடுகள் கொண்டவருக்கு தானம் அளித்துவந்தார் சனி பகவான்.
ஒருநாள் விளாமரத்தின் வேரால் கால் இடற, ஒரு பள்ளத்தில் விழுந்தார். அப்போது அங்கு ஊற்று ஒன்று எழும்ப, அதனால் சனிபகவான் சாப விமோசனம் பெற்று உடல் குறைபாடுகள் நீங்கப் பெற்றார்.
அந்த ஊற்று ‘பூச ஞான வாவி’ என்றாகியது. அந்தத் தலமும் ஈஸ்வர கிருபையால் விளங்குளம் என்றானதாகச் சொல்கிறது தல புராணம். சனி பகவான் ஊற்றில் விழுந்த நாள் அட்சய திருதியை நாள் என்கிறது புராணம்.
சாப விமோசனம் அளித்த ஈசன், ‘மந்தா, ஜேஷ்டா எனும் இருவரைத் திருமணம் செய்துகொண்டு, தம்பதி சமேதராக பொங்கு சனீஸ்வரராக இங்கேயே காட்சி தருவாய்’ என உத்தரவிட்டார். அதன்படியே சனீஸ்வர பகவான், பொங்கு சனியாக செல்வவளம் அருளும் தெய்வமாகக் திருக்காட்சி தருகிறார் என்பது விசேஷம்.
குபேர கணபதி, செல்வமுருகர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்கை, நாகர், நர்த்தன கணபதி, மகாலட்சுமி ஆகியோர் சந்நிதிகளும் இங்குள்ளன.

ஈசனுக்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்கள் பதித்து அலங்காரங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆதி சனீஸ்வரருக்குப் புனுகு கலந்த சந்தனக் காப்பு சாத்தி, எள், அரிசி, கோதுமை, பாதாம்பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து அலங்கரிப்பார்கள். அந்நாளில் இருவரையும் தரிசித்து வணங்க குடும்பத்தில் தரித்திரம் ஒழிந்து செல்வம் சேரும். தீராதக் கடன் பிரச்னைகள் தீர்ந்து நலமும் வளமும் பெறுவர்.
ஆதி பிருஹத் சனீஸ்வரரின் நட்சத்திரம் பூசம். திருதியை, சனிப்பெயர்ச்சி நாள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாள்கள் மற்றும் சனிக்கிழமைகளில் ஆதி பிருஹத் சனீஸ்வரருக்குச் சந்தனக் காப்பு செய்து, எள் சாதம், எள் உருண்டை, எள் தட்டை, எள் முறுக்கு ஆகியவை நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கினால், சனி பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
எத்தனை சம்பாதித்தாலும் சேர்க்கவே முடியவில்லை என்று வருந்துபவர்களுக்கு நிச்சயம் விரையச் செலவுகள் குறைந்து சேமிக்கும் நிலை உருவாகும். இங்கு சனி பகவானுக்குச் செய்யப்படும் நைவேத்தியம் காக்கைகளுக்கு அளிக்கப்படுகிறது.
ஒருவேளை, காக்கைகள் அந்த உணவை எடுக்காவிட்டால்... மறுநாள் வந்து காக்கைகளுக்கு மீண்டும் உணவிடும் வழக்கமும் இங்கு உள்ளது. பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பரிகாரக் கோயில் இது.
சனி பகவானால் உருவான பூச ஞான வாவி தீர்த்தத்தில் நீராடி, பழைய ஆடையை விட்டுவிட்டு, புத்தாடை அணிந்து சனி பகவானை நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட்டால், தோஷ வக்கிரப் பார்வையிலிருந்து விடுபடலாம்.
சனி பகவான் தம்பதி சமேதராகக் காட்சி தரும் தலம் என்பதால், இங்கு வந்து வணங்கினால், திருமணத் தடைகளும் தோஷங்களும் விலகி, மங்கல காரியங்கள் யாவும் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

உடல் மந்தமும் குறைபாடும் கொண்ட சனி பகவான் இங்கு வந்து ஈசனை வழிபட்டு நலம் கொண்டதால், உடல் செயல்பாட்டில் குறையுள்ளவர்கள், உடல் உறுப்புகளில் குறைபாடு கொண்டவர்கள் இங்கு வந்து அட்சயபுரீஸ்வரரை வணங்க குறைகள் குறைந்து நிறைகள் வளரும் என்பதும் நம்பிக்கை.
அட்சயம் என்றால் வளர்வது. இங்கு வந்து ஈசனையும் அபிவிருத்தி நாயகியையும் வணங்க, எல்லா நன்மைகளும் வளரும் என்பது நம்பிக்கை.
பொருள் படைத்தவருக்கே இவ்வுலகம் என்பது யதார்த்தமான உண்மை. விரும்பியவற்றை அடையச் செல்வம் அவசியம். அது நேர்மையாகவும் நிலைத்த வண்ணமும் நம்மைச் சேர, இந்த அட்சய திருதியை நாள் ஆசி வழங்கட்டும்.





















