"எனது வெற்றியை விட கோவையில் திமுக-வின் வெற்றிதான் முக்கியம்’ – உதயநிதி ஸ்டாலின் ...
மயிலாடுதுறை மாவட்டம் தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில்: தலைமுறைகள் செழிக்க அருளும் ஈசன்!
பெருமாள் என்றதும் நம் அனைவரின் நினைவிற்கும் வருவது சங்கு சக்கரமே. அதிலும் பெருமாள் வைத்திருக்கும் சங்குக்குப் பாஞ்சசன்யம் என்பது பெயர். அந்த அற்புதமான சங்கை பெருமாள் ஈசனை வழிபட்டுப் பெற்றதலம் ஒன்று உண்டு. அதுவே தலைச்சங்காடு.
பூம்புகாருக்கு மிக அருகில் உள்ள பழம்பெருமை வாய்ந்த தலமிது. புதுச்சேரி - நாகப்பட்டிணம் நெடுஞ்சாலையில் சீர்காழிக்கும் ஆக்கூருக்கும் இடையில் அமைந்துள்ளது . மயிலாடுதுறை - பூம்புகார் வழித்தடத்திலும் செல்லலாம்.

முற்காலத்தில் கடற்கரையை ஒட்டி இருந்த இப்பகுதியில் சங்கு வாணிகம் சிறந்திருந்தது. அதனாலேயே இவ்வூருக்கு தலைச்சங்காடு என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். சங்ககாலத்தில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்துப் போற்றிய இடம் என்பதால் இதனை 'தலைச்சங்கம்' என்றனர் அதுவே பின் மாறி தலைச்சங்காடு என்றானது என்கிறார்கள்.
அதுபோலவே முற்காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் சங்குப் பூக்களை உடைய கொடிகள் நிறைந்த வனமாக இருந்தது. எனவே இதனை சங்காரண்யம் என்று அழைத்தனர். அதனாலேயே இந்தப் பெயர் வந்தது என்பதும் உண்டும்.
இங்கு அமைந்திருக்கும் ஈசனின் திருக்கோயில் மாடக்கோயிலாக அமைந்துள்ளது. கோவில்பத்து தலைச்சங்காடு என்பது இந்த ஆலயத்தின் முந்தைய பெயர். இங்கு சௌந்தர்யநாயகி சமேதரராய் ஈசன் சங்காரண்யேஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்கிறார். மூலவர் உயரமான இடத்தில் எழுந்தருளியிருப்பதால் பிரதான வாயிலுக்கு நேராகவே பிரதோஷ நாயகராகக் காட்சி தருகிறார் பெருமான்.
நந்தியுடன் பெருமான் அம்மையப்பராக கல் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் காட்சி நம் சிந்தையை நிறைப்பது. வலப்புறத்தில் அம்பிகை சௌந்தர்யநாயகி வடக்கு நோக்கியவளாய் சந்நிதி கொண்டிருக்கிறாள். இவ்வம்மையினுடைய சந்தனப்பிரசாதம் பெண்களுக்கு உண்டாகும் கடும் வயிற்றுவலிக்கு அருமருந்து என்கிறார்கள்.

இடது புறத்தின் பக்கவாட்டில் சிலபடிகள் ஏறிச் சென்றால் உயரமான இடத்தில் மூலஸ்தானம் கொண்டு விளங்குகின்றார் திருசங்காரண்யேஸ்வரர். இவருக்கு நல்லெண்ணையைச் சாற்றியபிறகு விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் பாணத்தின் மீது முடிக்கால்கள் தெரியுமாம். ஆகவே இச்சிவலிங்கத் திருமேனியை 'ரோமாஞ்சன லிங்கம்' என்று சொல்கிறார்கள்.
மூன்றடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியான இவருக்கு அபிஷேகம் செய்யும் நீர் கீழே விழுவதில்லை என்பது அதிசயம். சங்கிற்குள் ஜலம் தேங்கி நிற்பது போல அபிஷேகம் செய்யப்படுகிற திரவியங்கள் மூலவரின் ஆவுடையாருக்குள் தேங்கி நிற்பதைக் காணலாம். அதேபோல் மொத்த ஆலயத்தின் அமைப்பும் சங்கு வடிவிலேயே அமைந்திருப்பது மற்றுமோர் அதிசயம்.
அதற்கேற்றார்போல ஆலயத்திற்கு எதிரே அமைந்திருக்கும் தீர்த்தக்குளமும் சங்கு தீர்த்தம்தான். கருவறையை ஒட்டி யோகநிலையில் திருமால் காட்சி தருகிறார். சங்கினைப் பெறுவதற்காக இத்தலத்துப் பெருமானைப் பூஜித்த பெருமாள் இவர். இவருக்கு அருகிலேயே வில்லுடன் காட்சி தருகிறார் சீதாராமர்.
இவரும் இத்தலத்தில் வழிபட்டிருக்கிறாராம். ரிஷப வாகனத்துடன் கூடிய அரிய கோலத்தினராய் தென்முகக் கடவுள். ஆவுடையாருடன் பூமிக்கு அடியில் பிணைப்பு உடைய வலம்புரி விநாயகர் அதிசயம். கன்னி மூலைக் கணபதியாக உச்சிஷ்ட கணபதி அருளுகிறார்.
வெளிச்சுற்றில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரரான சீனுவாச பெருமாள் எழுந்தருளி இருக்கிறார். ஆறரை அடி உயரத்தில் நின்றநிலையில் அருளுகின்ற கோலத்தினர். மிகுந்த வரப்பிரசாதி.

சம்பந்தர் பாடல்பெற்ற காவிரித் தென்கரைத் திருத்தலமான இதை கோச்செங்கண்ண சோழர் அமைத்த யானை ஏறா மாடக்கோயில் என்கிறார்கள். பஞ்சாரண்ய தலங்களுள் ஒன்று. சோமாஸ்கந்தர் அமைப்பு உடைய ஆலயம். மூலவருக்கு பத்துதலை உடையவர் என்பது சிறப்புத் திருநாமம்.
தவக்கோலத்தில் காட்சி தரும் மகாவிஷ்ணு. புவனேஸ்வரித் தாயார் சந்நிதி. தலவிருட்சம் புரசு என இந்த ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பௌர்ணமி தினங்களில் இத்தலத்து சங்கு தீர்த்தத்தில் நீராடி அம்மையப்பர் சந்நிதிகளில் நெய்தீபமேற்றி வழிபட தம்பதியர் ஒற்றுமை நிலைத்திடும், சந்தான பிராப்தி கிடைத்திடும். குழந்தை பிறந்தவுடன் அம்பிகைக்கு சந்தனம் சாற்றி நேர்ச்சை செய்வதும் தொன் சம்பிரதாயம்.
இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால் உங்கள் ஏழேழ் தலைமுறையும் செழித்து வாழும் என்பது நம்பிக்கை. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும். நலமாகும்.


















