ஜூ.வி மெகா சர்வே: `இழுபறியில் நயினார் நாகேந்திரன்?' - விருதுநகர், ராமநாதபுரம், த...
"‘Bigg Boss’ மாதிரி இருக்கும் வரவேற்பு கிடைக்கும்" - தொகுப்பாளராகும் நடிகர் பரத் | பேட்டி
சென்னை சாவேரா ஹோட்டலில் நேற்று முன்தினம் மாலை ‘பிக் பிட்ச்சர்’ (Big Pitchure) ரியாலிட்டி ஷோவின் அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ் பதிப்பை நடிகர் பரத் தொகுத்து வழங்குகிறார்.
மலையாளத்தில் இந்திரஜித் சுகுமாரன், தெலுங்கில் நவ்தீப், கன்னடத்தில் வசிஷ்டா என். சிம்ஹா மற்றும் இந்தியில் விஜய் ராஸ் ஆகியோர் தொகுப்பாளர்களாக இணைந்துள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு வந்திருந்த நடிகர் பரத்துடன் உரையாடினோம். அவர், "அனைத்து வயதினருக்கும் இந்த நிகழ்ச்சி பொருந்தும். திறமையும் வாய்ப்பும் ஒன்றாக இணையும் இடமாக ‘பிக் பிட்ச்சர்’ இருக்கும். திறமை வெளிவர ஒரு சரியான மேடை இது.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே அல்ல. இரண்டு மணி நேரம் நம்மை எல்லாவற்றையும் மறக்கச் செய்து மகிழ்ச்சியாக வைத்திருக்கக்கூடிய ஒரு உலகம் அது.
ஆனால் அந்த சினிமா எப்படி உருவாகிறது, அதன் பின்னணியில் எவ்வளவு உழைப்பு இருக்கிறது, எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் என்பதைக் காட்டும் முயற்சிதான் இந்த நிகழ்ச்சி. அந்த ‘மேக்கிங்’ செயல்முறையைப் பார்ப்பதன் மூலம் சினிமாவின் உண்மையான சுவாரஸ்யத்தை மக்கள் உணர முடியும்.
அதுவே இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டிய முக்கிய காரணம். நிச்சயமாக நல்ல வரவேற்பு கிடைக்கும். ‘பிக் பாஸ்’ போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பைப் போலவே இதற்கும் கிடைக்கும்.
முக்கியமாக, சினிமா அனைவருக்கும் பிடித்த ஒன்று என்பதால், சினிமாவில் ஆர்வமுள்ளவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இது சமமாகப் பிடிக்கும். இது ஒரு புதுமையான முயற்சி.
சினிமாவில் பல விஷயங்களைச் செய்து பார்த்த பிறகு, இந்த மாதிரியான ஒரு ரியாலிட்டி ஷோ எவ்வாறு இருக்கும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன். இது கண்டிப்பாகப் பேன் இந்தியா அளவில் வெற்றி பெறும்.
சினிமா உருவாகும் பின்னணியை மக்களுக்கு நேரடியாகக் காட்டுவது இதன் முக்கிய நோக்கம்" என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தேவா, “நாம் பல நேரங்களில் கடின உழைப்பில் உருவாகும் திரைப்படங்களை எளிதாக விமர்சித்துவிடுகிறோம். அந்த அனுபவத்தை உணர வைக்கும் ஒரு முயற்சிதான் இது.
இந்த நிகழ்ச்சிக்கான பாடலை உருவாக்கும்போது பல முயற்சிகள் செய்தோம். இறுதியில் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற பாடல் உருவாக்கப்பட்டது. பாடலாசிரியர் பா. விஜய் எழுதிய இந்தப் பாடலை ஆதித்யா, மோனிஷா மற்றும் R.A.V இணைந்து பாடியுள்ளனர்” என்றார்.
பாடலாசிரியர் பா. விஜய் பேசும்போது, “நம்மை விமர்சிப்பவர்களையே படைப்பாளர்களாக மாற்றுவது இந்த நிகழ்ச்சியின் தனித்துவம். ‘All lights on, roll camera’ என்ற வரிகளுடன் தொடங்கும் பாடல் இந்த நிகழ்ச்சியின் மையக்கருத்தைப் பிரதிபலிக்கிறது” என்றார்.
நடன இயக்குநர் தினேஷ், “நான் 2001 முதல் இந்தத் துறையில் இருக்கிறேன். சினிமாவில் வாய்ப்பு பெறப் பல ஆண்டுகள் பாடுபட வேண்டிய நிலையில், இந்த நிகழ்ச்சி அதை எளிதாக்குகிறது” என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷன் தேர்வு முறைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் நடைபெறுகின்றன. சென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில் நேரடித் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
சமூக வலைத்தளங்களில் ஒரு நிமிட வீடியோக்களைப் பதிவேற்றி மக்கள் வாக்களிக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டண்ட் போன்ற பிரிவுகளுக்கு வீடியோக்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
வயது வரம்பு இல்லாமல் அனைவரும் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சினிமாவை மக்கள் கைகளில் கொடுக்கும் ஒரு புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.


















