செய்திகள் :

வெளியான லிஸ்ட்; கரைசேருமா `கமலாலய' கப்பல்? - மோடி சந்திப்பும் அரண்டுகிடக்கும் தமிழக பா.ஜ.க!

post image

இதோ, அதோ என இழுத்துக் கொண்டிருந்த தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் ஒருவழியாக வெளியாகியிருக்கிறது. நாம் ஏற்கெனவே கூறியிருந்தபடி, இந்தத் தேர்தலில் போட்டியிட அண்ணாமலை விரும்பாததால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கட்சியில் கரை கண்ட சீனியர்கள் பலருக்கும் வாய்ப்பளித்து வேட்பாளர்களாக்கியிருக்கிறது டெல்லி பா.ஜ.க தலைமை. பெரும் போராட்டத்துக்குப் பிறகு மயிலாப்பூருக்கு தமிழிசை செளந்திரராஜனும் நாகர்கோவிலுக்கு எம்.ஆர்.காந்தியும் வேட்பாளர்களாகியிருக்கிறார்கள். பா.ஜ.க-வின் இந்த வேட்பாளர் பட்டியல் சொல்வதென்ன?

கமலாலயம்
கமலாலயம்

பா.ஜ.க-வின் மையக்குழு உறுப்பினர்கள் சிலர் நம்மிடையே பேசுகையில், "பா.ஜ.க-வுக்கு சாதகமான தொகுதிகளை அ.தி.மு.க-விடமிருந்து கேட்டுப் பெறவில்லை என்கிற கோபம் கட்சிக்குள் கொழுந்துவிட்டு எரிகிறது. கிடைத்த தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர்கள் இல்லை. திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல தொகுதிகளிலும் வேட்பாளர்களைப் போடுவதற்குள் தண்ணீர் குடித்துவிட்டது தலைமை. அதேசமயம், கட்சியிலுள்ள சீனியர்கள் பலரும் ஆளுக்கொரு பக்கம் லாபி செய்து தங்களுக்குத் தோதான தொகுதியைப் பெற்றுவிட்டார்கள்.

மயிலாப்பூர் தொகுதிக்கு தமிழிசை செளந்திரராஜன், கே.டி.ராகவன், எஸ்.ஜி.சூர்யா ஆகிய மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ராகவனுக்கும் சூர்யாவுக்கும் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சிபாரிசு செய்திருந்தார். ஆனால், ஜெ.பி.நட்டா தொடங்கி அமித் ஷா வரையில் பலரிடமும் லாபி செய்து மயிலாப்பூரை தட்டிச் சென்றுவிட்டார் தமிழிசை.

திருப்பத்தூரில் போட்டியிட மறுத்த கூட்டணிக் கட்சித் தலைவரான திருமாறனை பெரும்பாடுபட்டு சமாதானம் செய்து வேட்பாளராக்கியுள்ளனர். திருவாரூரில் போட்டியிட 'நாராயிணி' கார்த்திகேயனிடம்தான் முதலில் பேசினார்கள். அவர் மறுத்துவிடவே கோவி சந்துருவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மானாமதுரைக்கு ம.வெங்கடேசனும் பொன்.பாலகணபதியும் மோதிக்கொண்ட நிலையில், பாலகணபதிக்கு சீட் கிடைத்திருக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு ஏ.பி.முருகானந்தம் அல்லது காடேஸ்வரா தங்கராஜ் பெயர்கள்தான் பரிசீலிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்றதும், ஏ.பி.முருகானந்தமும் சீட்டுக்கான ரேஸில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதனாலேயே, காடேஸ்வரா தங்கராஜ்க்கு சீட் கிடைத்திருக்கிறது. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட மறுத்த ஜி.பி.எஸ்.நாகேந்திரனை, எல்.முருகன் தான் சமாதானம் செய்து போட்டியிட வைத்திருக்கிறார். முன்னாள் சபாநாயகர் தனபால் போட்டியிட்டு வென்ற அவினாசி தொகுதியில் எல்.முருகன் களம் காண்கிறார்.

உதகை தொகுதியை, தன்னுடைய ஆதரவாளரான உமாதேவிக்குப் பெற்றுக் கொடுக்கத்தான் எல்.முருகன் விரும்பினார். அதற்கு, மாநில மையக்குழு கூட்டத்திலேயே பி.எல்.சந்தோஷ் தடை போடவும் எல்.முருகனின் திட்டம் தவிடுபொடியானது. கட்சியில் சீனியரான போஜராஜனுக்கு உதகை அளிக்கப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கும், வாசுதேவநல்லூர் ஆனந்தன் அய்யாசாமிக்கும் அண்ணாமலை கோட்டாவில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனந்தன் அய்யாசாமிக்குத் தேவைப்படும் சகல உதவிகளையும், 'ஜோகோ' நிறுவனத் தலைவர் ச்ரிதர் வேம்பு செய்துத் தருவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

இந்தப் பட்டியலில், சீட் எதிர்பார்த்திருந்த இளைஞர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. வினோஜ் பி.செல்வம், எஸ்.ஜி.சூர்யா, அமர் பிரசாத் ரெட்டி, அஸ்வத்தாமன் என்று பலருமே ஓரங்கப்பட்டுள்ளனர். தனக்கு சீட் வேண்டாமென அண்ணாமலையே ஒதுங்கிக் கொண்டுவிட்டார். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வதற்குத் தயாராகும் அண்ணாமலை, தேர்தல் நாளன்று கவுண்டம்பாளையம் தொகுதியிலுள்ள ஒரு பூத்தில், பூத் ஏஜெண்ட்டாக அமரவும் முடிவெடுத்திருக்கிறார்" என்றனர் விரிவாகவே.

எஸ்.ஜி.சூர்யா

வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அறிவித்துவிட்டாலும், அதில் ஆறு தொகுதிகளே சாதகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள். அதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், "அவினாசி, கோவை வடக்கு, வாசுதேவநல்லூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், மொடக்குறிச்சி தொகுதிகளில் மட்டுமே வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

மயிலாப்பூர், ராசிபுரம், திருப்பூர் தெற்கு, புதுக்கோட்டை, மதுரை தெற்கு, ராமநாதபுரம், விளவங்கோடு தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், வெற்றியை உறுதியாகச் சொல்லிவிட முடியாது. மயிலாப்பூரிலுள்ள பட்டியல் சமூகத்தினரும் மீனவர்களும் த.வெ.க., தி.மு.க ஆதரவு மனநிலையில் இருப்பது, தமிழிசைக்கு சவால்தான்.

தவிர, அந்தத் தொகுதியின் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரான அசோக், வேளச்சேரியில் போட்டியிடுகிறார். தன்னுடைய தொகுதியில் வெற்றிப்பெறுவதில்தான் அசோக் கவனம் செலுத்துவாரே ஒழிய, தமிழிசைக்காக இறங்கி வேலைப் பார்க்கமாட்டார். இதையெல்லாம் எதிர்கொண்டுதான் தமிழிசை வெற்றிப்பெற்றாக வேண்டும்.

ராசிபுரத்தில், சிட்டிங் அமைச்சர் மதிவேந்தனை எதிர்த்து வேட்பாளராகியிருக்கிறார் வி.பி.துரைசாமியின் மகன் பிரேம்குமார். அந்தத் தொகுதியில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் த.வெ.க வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த மும்முனைப் போட்டியில் வெற்றிப்பெற பிரேம்குமார் கடுமையாக உழைக்க வேண்டும்.

திருப்பூர் தெற்கு, புதுக்கோட்டை, மதுரை தெற்கு, ராமநாதபுரம் தொகுதிகளில் பா.ஜ.க-வுக்கென வாக்குவங்கி இருக்கிறது. அதேசமயம், கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமல் அங்கேயெல்லாம் வெற்றிக்குச் சாத்தியமில்லை. அ.தி.மு.க., அ.ம.மு.க வாக்குகள் பா.ஜ.க-வுக்கு எந்தளவுக்கு மடைமாறும் என்பதைப் பொறுத்துதான் வெற்றியை நிர்ணயிக்க முடியும்.

நயினார் நாகேந்திரன்

விளவங்கோட்டில் தனக்கென தனிச்செல்வாக்கு இருப்பதால் வெற்றிப்பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுகிறார் விஜயதரணி. ஆனால், அவர் தாமரை சின்னத்தில் களமிறங்குவதால், தொகுதியிலிருக்கும் கிறிஸ்தவர்களிடம் ஆதரவு குறைய வாய்ப்பிருக்கிறது. இது விஜயதரணிக்கு சவால்தான்.

சாத்தூர் தொகுதியே நயினாருக்கு சவால்தான். த.வெ.க., நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முக்குலத்தோரை வேட்பாளராக நிறுத்தியிருக்கும் நிலையில், அதே சமூகத்தைச் சேர்ந்த நயினாரும் அங்கே போட்டியிடுகிறார். முக்குலத்தோர் வாக்குகள் பிரியும் நிலையில், நாயுடு சமூகத்தைச் சேர்ந்த கடற்கரை ராஜூவை தி.மு.க வேட்பாளராக்கியிருக்கிறது. இந்த சமூக கணக்கில், நயினாருக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தொகுதிகளைத் தாண்டி வேறெந்த தொகுதிகளும் பா.ஜ.க-வுக்கு சாதகமானதாக இல்லை. மானாமதுரை, கந்தர்வக்கோட்டை, திருப்பத்தூர், தளி, ஆவடி தொகுதிகளில் மூன்றாமிடம் சென்றுவிடுவோமோ என்ற அச்சம் கட்சிக்குள் நிலவுகிறது" என்கிறார்கள் மிரட்சியுடன்.

பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலே வெளியிடத்தான் முதலில் ஏற்பாடானது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் சொதப்பல் என்று பல விஷயங்களிலும் அப்செட்டாகியிருக்கும் கோயல், பட்டியலை ஆன்லைனில் வெளியிடச் சொல்லிவிட்டாராம். டெல்லி எதிர்பார்த்த விதத்தில் வேட்பாளர்கள் இல்லாததால், பிரதமரை வைத்து வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டமும் திடீரென ரத்தாகியிருக்கிறது.

புதுச்சேரி பிரசாரத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பும் பிரதமர் மோடி, இன்றிரவு சென்னையில் தங்கவிருக்கிறார். தமிழக பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலரையும் ஹோட்டலில் சந்திக்கவிருக்கிறார். அப்போது, அவரிடமிருந்து கடுமையான டோஸ் விழுமென இப்போதே அரண்டுகிடக்கிறார்கள் தமிழக பா.ஜ.க-வினர்.

கோவை: `இப்போது வந்தவர்களுக்கெல்லாம் எம்.எல்.ஏ சீட்!'- ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய காங்கிரஸார்

கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான காமராஜ் பவன் முன்பு சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்... மேலும் பார்க்க

'பெரம்பூரில் 52 வயது; திருச்சி கிழக்கில் 51 வயது!' - வேட்புமனுவில் குழப்பிய விஜய்?

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுக்களில் வெவ்வேறு வயதை விஜய் குறிப்பிட்டிருப்பது இப்போத... மேலும் பார்க்க

`மாநில காங்கிரஸ் தலைவருக்கு அக்கறையும், தெளிவும் இல்லையென்பது...' - வேட்பாளர் பட்டியல் பற்றி ஜோதிமணி

நீண்ட இழுபறிக்குப் பிறகு, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. வேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் பற்றி உள்கட்சியினரும், மாற்று கட்சியினரும் தொடர்ந்த... மேலும் பார்க்க

கேரள சி.எஸ்.ஐ நிர்வாகி விளவங்கோடு வேட்பாளராக அறிவிப்பு - பின்னணியில் கே.சி.வேணுகோபால்?

கன்னியாகுமரி மாவட்டதில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள விளவங்கோடு தொகுதியில் கடந்த மூன்று பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் விஜயதரணி வெற்றிபெற்றார். விஜயதரணி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல... மேலும் பார்க்க

எல்.முருகனுக்கு அவிநாசி தொகுதி; 'வாய்ப்பு கேட்டேன்தான்; யாரும் வந்து பார்க்கவில்லை'- தனபால் குமுறல்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தொகுதி தனி தொகுதி ஆகும். அந்தத் தொகுதியில் 2016, 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பாக தனபால் களமிறங்கினார். களமிறங்கியது மட்டுமல்லாமல்... அந்தத் தொகு... மேலும் பார்க்க

'எளிதாக' ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிடுவோம் - ட்ரம்ப் லேட்டஸ்ட் பதிவு

ஈரான் போரின் எதிரொலியை விட, ஹார்முஸ் ஜலசந்தி மூடல் தான் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.இந்த ஜலசந்தி மூலம் தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு வர்த்தகம் நடந்து வருகிறது. அது மூடப்பட்டிருப்பதால், கச்சா ... மேலும் பார்க்க