வெளியான லிஸ்ட்; கரைசேருமா `கமலாலய' கப்பல்? - மோடி சந்திப்பும் அரண்டுகிடக்கும் தம...
Leader Review: ஆக்ஷன் தெறிக்கும் `ஓஜி' டெம்ப்ளேட் சினிமா - இந்த லெஜண்ட் லீடர் ஆகிறாரா?
மகள் மட்டுமே உலகம் என தூத்துக்குடியில் வாழ்ந்து வரும் சக்திவேல் (லெஜண்ட் சரவணன்), அங்கு மெக்கானிக்காக இருக்கிறார். துறைமுகத்திற்கு வருபவர்களின் வாகனங்களைப் பழுது பார்ப்பதே இவரின் பிரதான வேலை.
துறைமுகத்தில் பல்வேறு கிரைம் விஷயங்கள் நடப்பதாக அறியும் காவல் அதிகாரி ஆண்ட்ரியா, அதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப் போராடுகிறார். அதற்காகத் தினமும் துறைமுகத்திற்கு வந்து போகும் சக்திவேலிடம் உதவி கேட்கிறார்.

ஆனால், வாடிக்கையாளருக்கு நேர்மையாக இருக்க வேண்டுமென ஆன்ட்ரியாவின் வேண்டுகோளை நிராகரிக்கிறார் சக்திவேல்.
இதன் பிறகு, சக்திவேல் வாழ்க்கையில் வரும் மாற்றங்கள் என்ன, அவரின் உண்மையான அடையாளம் என்ன, எதற்காகத் துறைமுகம் அருகில் அவர் வேலை செய்கிறார் என்பதே துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் 'லீடர்' படத்தின் கதை.
மகளுக்காகத் துடிக்கும் இடம், எதிரிகளை அடித்துப் பறக்கவிடும் இடம், சைலண்டாக இருந்து காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் இடம் என மாஸ் ஹீரோ அம்சங்கள் நிறைந்த சக்திவேல் கதாபாத்திரத்தில் லெஜண்ட் சரவணன்.
எமோஷனல் காட்சிகளைச் செயற்கைத் தனங்களால் நிறைத்திருப்பவர், மாஸ் காட்சிகளில் முறைத்துக்கொண்டே விசில் பறக்க அன்னநடை போடுகிறார். கொஞ்சம்கூட க்ளோசப் வைக்காமல் எடிட்டிங்கில் விளையாடியிருப்பது போங்காட்டம் என்றாலும், காட்சிகளின் தன்மை அதைக் குறையாக எடுத்துக்காட்டவில்லை.

கார்ப்பரேட் வில்லனாக சந்தோஷ் பிரதாப், திடமான உடல் தோற்றம், ரக்கெட் லுக் எனத் தன் கதாபாத்திரத்துக்கு(ங்களுக்கு) நியாயம் செய்திருக்கிறார்.
நேர்மையான காவல் அதிகாரிகளாக ஷ்யாம், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை. நாயகியாகப் பாயல் ராஜ்புட் பிளாஷ்பேக் சண்டைக் காட்சிகளையும் காதல் காட்சிகளையும் கரை சேர்க்கிறார்.
படத்தின் தொடக்க நிமிடங்களில் காமெடி ரகளை செய்யப் பணிக்கப்பட்டிருக்கும் விடிவி கணேஷ், அந்த வேலையைச் சரியாகக் கவனிக்கவில்லை.
இவர்களைத் தாண்டி லால், அமிர்தா ஐயர், ஜார்ஜ் மரியன், ஐஸ்வர்யா பாஸ்கரன் என டஜன் கணக்கிலான துணைக் கதாபாத்திரங்களுக்கு நடிப்பில் முக்கிய மிஷன்கள் கொடுக்கப்படவில்லை.
தோட்டாக்கள் தெறிக்கும் பரபர ஆக்ஷன் களத்தை ப்ரேமுக்குள் அடக்கி பிரமாண்ட விஷுவல்களாகத் திரையில் ஏற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.எஸ்.
ஆனால், இவருடைய விஷுவல்களை மெருகேற்றிடும் பணியை கிராபிக்ஸ் குழு நேர்த்தியாகச் செய்யாமல் தவறவிட்டிருக்கிறது.
சில இடங்களில் ஆபத்பாந்தவனாகத் திரைப்படத்தைக் காப்பாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், இரண்டாம் பாதி கதையை நீட்டி நெளித்துச் சொல்லி நம்மைச் சோம்பல் முறிக்கவும் வைக்கிறார்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் பாடல்களில் 'முத்தைத்தரு' முருகன் பாடல் மட்டும் கூஸ்பம்ஸ் தர, மற்ற பாடல்கள் இருந்தும் இல்லாமல் போயிருக்கின்றன. பின்னணி இசையில் மட்டும் ஆங்காங்கே பவரைக் கூட்டுகிறார்.
வந்தே பாரத் ரயில் தொடங்கி வெளிநாடு வரை பறக்கும் சண்டைக் காட்சிகளைச் சிறப்பாகவே வடிவமைத்திருக்கிறார் ஆக்ஷன் இயக்குநர் மகேஷ் மேத்யூ.
மகளுக்கான தந்தையின் போராட்டம், மிஷனை முடிக்க நினைக்கும் லீடரின் தீரம் என இந்த ஆக்ஷன் படத்தை விரித்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.
படத்தின் மையத்தைப் பற்றிய காட்சி விவரணை, கதாபாத்திரத்தின் பின்கதைகள் என்பதாக வழக்கமான ஆக்ஷன் பட மீட்டரிலேயே முதல் அரை மணி நேரம் ஃபர்ஸ்ட் கியர் போடுகிறது.
இதற்குப் பிறகு வரும் விஷயங்களும் பழைய ஆக்ஷன் படங்களின் டெம்ப்ளேட்தான். ஆனால், கதாபாத்திர வடிவமைப்புகள் கொண்டு சில சுவாரஸ்யமான விஷயங்களை எழுப்பியிருப்பது, எதிர்பாராத சர்ப்ரைஸ்!

படத்தின் இடைவேளை காட்சி வழக்கமான பாட்ஷா டெம்ப்ளேட்தான் என்றாலும், ட்விஸ்ட்களாலும், அது ஸ்டேஜ் செய்யப்பட்ட விதத்தினாலும் நல்லதொரு திரையரங்க அனுபவமாக மாறியிருக்கிறது. சக்திவேல் யார், அவர் எத்தகைய லீடர், அவரின் பின் கதை என்ன, அவர் ஏன் மெக்கானிக்காக இருக்கிறார் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது இரண்டாம் பாதி.
ஆனால், அதன் லாஜிக்கே இல்லாத மேக்கிங்தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ்! '12 மேன் ஸ்குவாட்', அதிரடி உளவாளிக்குழு என இஷ்டத்துக்குச் சர்வதேச மிஷன்களை அடுக்கியிருப்பதில் எந்தவித நம்பகத்தன்மையும் இல்லை.
ரஜினி, விஜயகாந்த், அர்ஜுன், விஜய் தொடங்கி அத்தனை ஆக்ஷன் ஹீரோக்களின் 'ஓஜி' படங்களின் தடயங்களும் இத்திரைக்கதையிலும் காணப்படுகின்றன. அது இன்னும் சோர்வைத் தந்து நம்மைச் சொக்கி விழவைக்கிறது.
ஒருவழியாக பிளாஷ்பேக் முடித்தபின் வரும் கதையோட்டம் மூலம் அடுத்தடுத்த ட்விஸ்ட்களை நுழைத்து திரைக்கதையைப் பள்ளத்திலிருந்து தூக்கி நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். ஆனாலும், முதல் மற்றும் இரண்டாம் பாதியில் கண்டும் காணாமல் பல்டி அடித்து ஓடும் எக்கச்சக்க லாஜிக் விஷயங்களை நாங்கள் கவனித்துவிட்டோம் சாரே!

உதாரணத்துக்கு, ஏற்கெனவே தன் கட்டுப்பாட்டிலிருக்கும் துறைமுகத்தை அழிக்க, ரிஸ்க்கான அமோனியம் நைட்ரேட்டை கன்டெயினர் கன்டெயினராக இறக்கும் வில்லனின் ஐடியா... ஏன்? எதற்கு?
செவித்திறன் கருவியைக் கொண்டு வரும் ஐடியா, வலது புறம் இதயம் இருக்கும் பிரச்னையை லாஜிக்காகப் பயன்படுத்தியது, இறுதியில் அடுக்கப்படும் ட்விஸ்ட்கள் போன்றவை க்ளைமாக்ஸை வந்தே பாரத் ரயிலாகத் தடதடக்க வைத்திருக்கின்றன.
வழக்கமான மாஸ் ஹீரோ ஆக்ஷன் படத்தில் புதுமைக்கு இடம் கொடுக்கவில்லை என்றாலும், சில சுவாரஸ்யமும், சர்ப்ரைஸும் கொண்டு மிஷனை திருப்திகரமாக முடித்திருக்கிறார் இந்த `லீடர்'.

















