BHEL 10 % Down Why? | 500% Tariff விதிக்கப்போகிறாரா Trump? |Russia | Metal secto...
வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!
ஆற்றங்கரையிலும் ஆலமரத்து அடியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு எளிமையாக அருள் பாலிப்பவர் பிள்ளையார். இவரை எல்லோரும் எப்போதும் வழிபடலாம், வழிபடவேண்டும் என்பதற்காகவே இப்படியாக அமைத்தனர் நம் முன்னோர்கள்.
அப்படிப்பட்ட விநாயகர் தலங்களுள் மிகவும் முக்கியமான பல தலங்கள் உண்டு. அப்படி, வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே உண்டான தலங்களில் முக்கியமானது சேண்பாக்கம்.
வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிகின்ற பாதையில், சுமார் 1.5 கி.மீ தொலைவில் சேண்பாக்கம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இத்தலம் காணாபத்யம் என்னும் கணபதி வழிபாட்டின் பிரதான தலமாக விளங்கியது.
இந்தத் தலத்துக்கு ஒருமுறை விஜயம் செய்த ஆதி சங்கரர் அங்கே லிங்க வடிவில் காணப்பட்ட 11 சுயம்பு மூர்த்திகளையும் கண்டு தரிசனம் செய்த போது அவருக்கு ஞானதிருஷ்டியில் விநாயகப்பெருமான் தெரிந்தார்.
11 சுயம்பு மூர்த்திகளும் விநாயகப்பெருமானே என்பதை அறிந்துகொண்டவர் அதை வெளிப்படுத்தினார். அன்று முதல் இத்தல மூர்த்திகளை விநாயகப்பெருமானாகவே வழிபட ஆரம்பித்தனர்.

ஆதியில் இந்தப் பகுதி செண்பக மரங்கள் நிறைந்திருந்த வனமாகக் காட்சி அளித்ததால் 'செண்பகவனம்' என்று அழைத்தனர். பின்னர், விநாயகர் சுயம்பு வடிவங்களாய் எழுந்தருளியதால் `ஸ்வயம்பாக்கம்' என்று பெயர்பெற்றது. இந்தப் பெயரே பிற்காலத்தில் `சேண்பாக்கம்' ஆனது என்கிறார்கள், ஆன்மிகப் பெரியோர்கள்.
பின்னர் இத்தலம் கால வெள்ளத்தில் சிதைவுற்றது. 17 ம் நூற்றாண்டின் போது மராட்டி மன்னர் துக்கோஜி ராவ் என்பவர் இப்பகுதிக்கு வந்தபோது அவரின் ரதம் திடீரென்று நின்றுவிட்டது. மன்னரும் மற்றவர்களும் திடுக்கிட்டுக் கீழே இறங்கிப் பார்த்தபோது ரதத்தின் சக்கரங்களில் ரத்தக் கறை காணப்பட்டது.
மன்னர் பதறினார். மிகுந்த சஞ்சலத்துடன் அன்று இரவு உறங்கப்போன மன்னரின் கனவில் கணபதிப் பெருமான் தோன்றினார். “உன் தேர் நின்ற இடத்தில் என்னுடைய ஏகாதச ரூபங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து அங்கு ஓர் ஆலயம் எழுப்புவாயாக” என்று உத்தரவிட்டார்.
மறுநாள் விடிந்ததும் அந்த இடத்துக்குச் சென்ற மன்னர், விநாயகர் ரூபங்களை வெளிக்கொணர்ந்து அங்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபாடுகள் செய்தார். அதுவே தற்போது ஆலயம் விளங்கும் தலமாக உள்ளது. மகாபெரியவரும் இத்தல மகிமையை எடுத்துரைத்துள்ளார்.
இந்தத் தலத்தில் 11 விநாயகர்களையும் மூலவருக்கு எதிரே அமைந்திருக்கும் யானை வாகனத்தையும் சேர்த்து தரிசிக்க வேண்டும். அப்போது அந்த அமைப்பு ஓம்கார வடிவில் அமைந்துள்ளது தெரியும் என்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு மேற்கூரை இல்லை. அதன் காரணம்... தேவர்களும் ரிஷிகளும் தினமும் ஆகாய மார்க்கமாக வந்து இந்த விநாயகரை வழிபாடு செய்வார்களாம். அதனாலேயே கூரை வேயப்படாமல் இருக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீநடன விநாயகர், ஸ்ரீஓம்கார விநாயகர், ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீசிந்தாமணி விநாயகர், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீமயூர விநாயகர், ஸ்ரீமூஷிக விநாயகர், ஸ்ரீவல்லப விநாயகர், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீபஞ்சமுக விநாயகர் ஆகியோரே இங்கு எழுந்தருளியிருகிறார்கள்.
இவர்களில் மையமாக அமர்ந்திருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகரே மூலவர்; பிரதானமானவர். இவருக்கே அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வழக்கமாக விநாயகருக்கு மூஷிக வாகனம் அமைந்திருக்கும். ஆனால், இந்தத் தலத்தில் மூலவருக்கு யானை வாகனம் அமைந்துள்ளது.
ஒரு மனிதனுக்கு வாழ்வில் 16 செல்வங்கள் தேவை. அவற்றுள் மிகவும் முக்கியமான 11 செல்வங்களை நமக்கு அருளும் அற்புத மூர்த்தியராக இந்த விநாயகர்கள் திகழ்கிறார்கள். இந்தத் தலத்தை `விநாயக சபை' என்று சொல்லும் மரபும் உண்டு.
மூலவரான செல்வ விநாயகரின் சந்நிதிக்கு எதிரிலேயே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தல விருட்சம் வன்னிமரம். இந்த விநாயகருக்கு எதிரிலேயே நவகிரக சந்நிதி உள்ளது. குறிப்பாக சனி பகவான் விநாயகரைத் தரிசித்தபடி அமைந்துள்ளார்.
யாரெல்லாம் செல்வ விநாயகர் திருவடிகளைப் பணிந்து சரணடைகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மங்கலம் பொங்கவும், தன்னால் உண்டாகும் தோஷம் பீடிக்காமல் இருக்கவும் இந்தச் சனி பகவான் அருள்புரிகிறார் என்கின்றனர் பக்தர்கள்.

இந்தத் தலத்தில் 108 தேங்காய்கள் உடைத்து வழிபட்டால், நம் துன்பங்கள் யாவும் உடைந்து சிதறும் என்பது நம்பிக்கை. வேலூர் சுற்றுவட்டாரத்தில் புதிதாக வண்டி வாகனங்கள் வாங்குபவர்கள் முதன்முதலில் இங்குவந்து செல்வ விநாயகரை வேண்டிச் செல்கிறார்கள்.
ஆண்டுதோறும் இங்கு 10 நாள்கள் நடைபெறும் விநாயக சதுர்த்திப் பெருவிழா மிகவும் சிறப்புடையது. சித்ரா பௌர்ணமி அன்று பூப்பல்லக்கு உற்சவமும் ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமையில் லட்சதீபத் திருவிழாவும், புரட்டாசி மாதத்தில் சங்கடஹர சதுர்த்தியில் நடைபெறும் பவித்ரோத்சவமும் இங்கு நடைபெறும் முக்கியமான விசேஷங்களாகும்.
இந்த நாள்களில் விநாயகரைத் தரிசித்து வழிபடச் சகலவிதமான செல்வங்களும் சேரும் என்பது ஐதிகம்.






















