பயிர்க்கடன் தள்ளுபடி: "ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி" - முதல்வர் அறிவிப்பின் முழு ...
ஷிண்டே சிவசேனாவுக்குத் தாவும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்? - தாக்கரே கட்சியில் மீண்டும் ஒரு பிளவா?
மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனாவில் ஏற்பட்ட பிளவில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே உத்தவ் தாக்கரே இன்னும் மீளவில்லை. அதற்குள் மேலும் ஒரு பிளவை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எதிர்நோக்கியுள்ளது.
மீண்டும் ஒரு பிளவை நோக்கி?!
இரண்டு நாள்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரே தனது இல்லத்தில் தனது கட்சி எம்.பி-க்கள் கூட்டத்தை கூட்டி இருந்தார். ஆனால் இந்தக் கூட்டத்தில் மொத்தமுள்ள 9 பேரில் வெறும் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். எஞ்சியவர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டதாக அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவுத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அன்றைய தினமே டெல்லியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி சஞ்சய் தேஷ்முக், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மத்திய அமைச்சர் பிரதாப் ஜாதவைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்.
இதனால் வெளியில் கட்சி எம்.பி-க்கள் தங்களுக்குத்தான் விசுவாசமாக இருப்பதாக உத்தவ் தாக்கரே தரப்பில் சொல்லப்பட்டாலும், அதில் உண்மை இல்லை என்றே ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தேஷ்முக் கல்வி நிறுவன பிரச்னை தொடர்பாகத்தான் தன்னைச் சந்தித்துப் பேசியதாக சிவசேனா அமைச்சர் பிரதாப் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
நண்பர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவோம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''சஞ்சய் தேஷ்முக்கிற்கு யவத்மால் மாவட்டத்தில் ஒரு கல்வி நிறுவனம் உள்ளது. அது குறித்த சில தகவல்களை அவர் தெரிந்துகொள்ள விரும்பினார். நான் டெல்லியில் இருந்த நிலையில், அவரும் தற்செயலாக அன்று காலை அங்கு வந்திருந்ததால், நாங்கள் தேநீர் அருந்திக்கொண்டே பேசினோம். சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற தனது கட்சியின் கூட்டத்தில் அவர் இணையவழியாகப் பங்கேற்றார். சஞ்சய் தேஷ்முக்கும் நானும் ஒரே கட்சியில் இருந்த காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகிறோம். நாங்கள் இருவரும் ஒரே பிராந்தியத்தைச் (விதர்பா) சேர்ந்தவர்கள். அவர் எனது பக்கத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். அரசியலில் நாங்கள் எதிரிகளாக இருந்தாலும், நண்பர்களாக அடிக்கடி சந்தித்துக்கொள்கிறோம்" என்றார்.
அதேசமயம் உத்தவ் கட்சி எம்.பி-க்கள் 7 பேரும், எம்.எல்.ஏ-ஏக்கள் 16 பேரும் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைய இருப்பதாக ஷிண்டே சேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ கிரிபால் துமானே தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், ''உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 7 எம்.பி-க்களுடன் ஏக்நாத் ஷிண்டே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். அவர்களை எந்த தேதியில் எங்களது கட்சியில் சேர்க்க வேண்டும் என்பது மட்டும்தான் இன்னும் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. உத்தவ் தாக்கரே செயல்படும் விதம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை'' என்று தெரிவித்தார்.
இது குறித்து ஷிண்டே கட்சியைச் சேர்ந்த நிதித்துறை இணையமைச்சர் ஆஷிஷ் ஜெய்ஸ்வால், ``சிவசேனா (உத்தவ்) எம்.எல்.ஏ-க்களைத் எங்கள் பக்கம் இழுப்பதற்கான 'ஆபரேஷன் டைகர்' (Operation Tiger) குறித்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும். இன்னும் சில நாள்களில் 2022-ஆம் ஆண்டின் நடந்த நிகழ்வின் ஆண்டுவிழா வரவுள்ளது. அப்போது அது ஒரு மிக ரகசியமான நடவடிக்கையாக இருந்தது. இது போன்ற விஷயங்கள் பொதுவெளியில் பேசப்படுவதில்லை. குறிப்பாக, முன்கூட்டியே ஒருபோதும் பேசப்படுவதில்லை" என்று கூறினார்.

அதே உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த ராம்டெக் தொகுதி முன்னாள் எம்.பி-யான க்ருபால் துமானே, உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த 7 எம்.பி.க்களும் சில எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகவும், 2022-ல் ஏற்பட்ட பிளவு ஒரு பெரிய நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்தார். ``பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தவே நாங்கள் அந்த முடிவை எடுத்தோம். அது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்குமா என்பது குறித்து இப்போது பேசுவது சரியாக இருக்காது" என்று அவர் கூறினார். ஆனால் எம்.பி-க்கள் கூட்டத்தில் பேசும்போது, ``செல்ல விரும்புபவர்கள் மகிழ்ச்சியுடன் செல்லலாம்" என்று உத்தவ் தாக்கரே வெளிப்படையாகப் பேசினார்.


















