விஜய்: 'தலைவருக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது, ஏன்னா.!' - தவெக அருண்ராஜ்
ஹோட்டல்ல கட்சி; மண்டபத்துல `பிரமாண்ட' மாநாடு! - பண்ருட்டியாரின் கிச்சு கிச்சு
`I'm running on 89' என பெருமிதமாக எம்.ஜி.ஆர் அதிமுக என்கிற புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். 89 வயதில் தளராமல் கட்சி ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் அந்த கட்சியின் அறிமுக நிகழ்ச்சியில் மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையும் கிச்சு கிச்சும் மூட்டிச் சென்றார் பண்ருட்டியார்.

சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் 'எம்.ஜி.ஆர் அதிமுக' என்கிற கட்சியை ஏன் தொடங்கினேன் என பேசப்போவதாக பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் பண்ருட்டியார். அவர் அழைத்த நேரத்துக்கு ஷார்ப்பாக தாஜ் ஹோட்டலுக்கு சென்றுவிட்டோம். அலைகடலென திரண்டு வந்திருந்த தன்னுடைய ஆதரவாளர்கள் 18 பேருடன் திக்குமுக்காடி பண்ருட்டியார் பத்திரிகையாளர் சந்திப்பு அறைக்கு வந்து சேர்ந்தார். உள்ளே வந்ததிலிருந்தே பண்ருட்டியாரின் ஒவ்வொரு நகர்வுமே அரசியல் குறியீடுதான்.
அண்ணா படத்துக்கும் எம்.ஜி.ஆர் படத்துக்கும் மாலை தூவி விட்டு மைக் முன்பு அமர்ந்தார். 'ஐயா...இங்க ஜெயலலிதா படம் இல்லையே..' என பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, 'எல்லார் படத்தையும் வைக்கணுமா என்ன?' என கூலாக பதில் கொடுத்தார் பண்ருட்டியார்.
அம்மாவின் தொண்டர்களுக்கு அட்வைஸ் சொல்வதோடு சரி...அம்மா படத்துக்கெல்லாம் மாலை போட முடியாது என்பது மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கக்கூடும்.

கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தும் போதும் ஒரு சம்பவம் நடந்தது. நாலாக மடித்து வைத்திருந்த கருப்பு வெள்ளை சிவப்பு கொடியை விசாலமாக விரித்து காண்பித்தார் பண்ருட்டியார். நடுவில் யாருடைய படமும் இல்லாமல் ப்ளேனாக வெள்ளை பட்டை மட்டுமே இருந்தது. கட்சி ஆரம்பிக்கும் அவசரத்தில் எம்.ஜி.ஆர் படம் ப்ரிண்ட் ஆவதற்குள் கொடியை உருவி வந்துவிட்டார்களோ என்கிற சந்தேகத்தில், 'சார் எம்.ஜி.ஆர், அண்ணா படத்தையெல்லாம் காணோமே...' என்றார் நிருபர்.
'அடுத்தடுத்து வருங்க..' என அண்டம் நடு நடுங்கும் வகையில் ஒரு பதிலை சொன்னார் பண்ருட்டியார். கொடிக்கு பர்ஸ்ட் லுக் விடும் இந்த ஐடியா மட்டும் பனையூர் தலைவருக்கு தெரிந்திருந்ததால், கண்டண்ட்டே இல்லாமல் நான்கு சனிக்கிழமைகளை கொடியை மட்டும் வைத்தே ஓட்டியிருப்பாரே!
தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு வாரத்துக்கு முன்பு கட்சி ஆரம்பித்துவிட்டு, 'நாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' பண்ருட்டி கொடுத்த ட்விஸ்ட்டில் அவர் பக்கத்திலிருந்த கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் குமாரை தவிர யாரும் அதிர்ச்சி ஆகவில்லை. அவருக்கு ஏன் அதிர்ச்சியென்றால் அவர்தான் எம்.ஜி.ஆர் அதிமுகவின் ஏ.டி.எம்.
தாஜில் பிரியாணி விருந்துடன் கட்சி அறிவிப்பை வெளியிட அழைத்து வந்ததற்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்துவிட்டீர்கள் என பண்ருட்டியாரை பார்த்து அவர் ஒரு டைப்பாக முழிக்க, 'எங்களில் யாரேனும் தேர்தலில் போட்டியிட எண்ணினால் எங்களுக்கு ஒத்த கொள்கையுடைய கட்சிகளுடன் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவோம்' என ப்ளேட்டை மாற்றினார் பண்ருட்டியார். ரஞ்சித் குமார் அப்போதுதான் ஆசுவாசமடைந்தார்.

'ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என இலங்கையை போல இந்தியாவும் அழிவுப்பாதைக்கு செல்வதைப் போல தெரிகிறது. அதைத் தடுக்க வேண்டும்' என திடீரென அறச்சீற்றமும் கொண்டார் பண்ருட்டியார். இப்படியொரு கொள்கைவாதி உடன் இருந்ததால்தான் ஓ.பி.எஸ்க்கு பிரதமரை பார்ப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட்டே கிடைக்கவில்லை என்கிறது டெல்லி சோர்ஸ்!
ஆனால், ஓ.பி.எஸ் அவரது அரசியல் சாணக்கியரான பண்ருட்டியாரின் இந்த செய்தியாளர் சந்திப்பை பார்த்திருந்தால் கண்ணில் ஜலம் வைத்து விம்மி விம்மி அழுதிருப்பார். 'ஓ.பி.எஸ்க்காக உயிரையா கொடுக்க முடியும்?' என ஒரே போடாக போட்டு ஓ.பி.எஸ் யை மொத்தமாக டேமேஜ் செய்துவிட்டார். சரியான நேரம் பார்த்து அலேக்காக ஜம்படித்து எஸ்கேப் ஆவதும் சாணக்கியத்தனம்தான் என்பதை ஓ.பி.எஸ்க்கு பிராக்டிக்கலாக உணர்த்தியிருக்கிறார் போல!
பண்ருட்டியார் அடுத்து இறக்கியதுதான் ஹைலைட். 'பிப்ரவரி 23 ஆம் தேதி காஞ்சிபுரத்துல மாநாடு நடத்தப் போறோம். அன்னைக்கு மழை பெய்யும்னு சொல்லியிருக்குறதுனால கல்யாண மண்டபத்துல வச்சு...' பண்ருட்டியார் இப்படி அறிவிப்பை கொடுக்கையிலேயே அருகிலிருந்த ரஞ்சித் குமார் 'ஐயா...மூவாயிரம் பேர் கலந்துக்குறாங்க' என காதில் கிசுகிசுத்தார்.
நம்பரை சொன்னால் பிரமாண்டத்தின் மீது கண்ணுப்பட்டு விடும் என்பதால் கண நேரத்தில் 'மண்டபத்துல வச்சு பிரமாண்டமா நடத்துறோம்' என சமயோஜிதமாக லடாய் கொடுத்தார் பண்ருட்டியார். ஹோட்டலில் கட்சி அறிவிப்பு, மண்டபத்தில் மாநாடு! இது நல்லாருக்குல்ல?

'ஐயா நீங்கள் யாருடன் கூட்டணி' என நிருபர்கள் கேட்க, 'இன்னும் முடிவு செய்யவில்லை கொள்கைகளோடு ஒத்துப் போபவர்களோடு கூட்டணி!' என்றார்.
அடுத்ததாக 2026 தேர்தல் யாருக்கும் யாருக்கும் போட்டி இருக்குமென நினைக்கிறீர்கள் என்று கேள்வி, சற்றும் யோசிக்காமல் 'திமுக Vs விஜய்' என்றார்.
விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறார். உங்களின் கொள்கை என்னவென கேட்க, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார்.
'யாருடன் கூட்டணி' என முந்தைய கேள்வியை கேட்டிருந்த நிருபர், 'ஐயா மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்க' என சொல்ல வாயெடுத்து அப்படியே வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார்.
'சொந்தமா ஒரு கட்சி ஆரம்பிச்சு 1% ஓட்டையாச்சு வாங்கிக் காட்டுங்க' என்ற பனையூர் தலைவரின் சேலம் சேலஞ்சை ஏற்றிருக்கும் முதல் அரசியல் கட்சித் தலைவர் பண்ருட்டியார்தான் என்பதால், விஜய்யின் வியூகத் தரப்பு தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தோடு பனையூரில் காத்திருக்கிறதாம்!
பிரமாண்ட மாநாட்டுக்கான வேலைகள் இருப்பதால் மிகச்சுருக்கமாக நாற்பது நிமிடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு விர்ரென காஞ்சிபுரம் புறப்பட்டார் ஐயா!
கூட்டணிப் பேச்செல்லாம் மாநாட்டுக்கு பிறகதானாம்.
பிப்ரவரி 23 ஆம் தேதி அடிக்கப்போகும் அரசியல் சுனாமியில் எத்தனை தலைகள் உருளப்போகிறதோ.!














