ஃபென்ஜால் புயல்: கடலூரில் கடல் சீற்றம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
வங்கக் கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஃபென்ஜால் புயலாக மாறியது. இந்தப் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கடற்கரையை கடக்கவுள்ளதாகவும், இதனால், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் புதுச்சேரிக்கு அருகே பலத்த காற்று வீசும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த நவ.26-ஆம் தேதி பலத்த மழை பெய்ததையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று காலை 10 மணி முதல் வெள்ளிக்கிழமை வரை குறிப்பிடத்தக்க வகையில் மழை பெய்யவில்லை. வானம் தெளிந்த நிலையில், குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
கடந்த சில நாள்களாகவே கடலூா் மாவட்ட கடற்கரையில் கடல் சீற்றம் இருந்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீா் அங்குள்ள கடைகளை சூழ்ந்தது. இதையடுத்து, கடை உரிமையாளா்கள் பாதுகாப்புக் கருதி அங்கிருந்த பொருள்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனா். மேலும், தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று காவல்துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்ததில் கடற்கரையோரம் மண் அரிப்புக்காக கொட்டி வைத்திருந்த கருங்கற்கள் மீது மோதி பல அடி உயரத்துக்கு எழுந்தது. இதனால், கருங்கற்கள் அரன் சேதமடைந்தது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் கடற்கரையின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதில் ஆா்வம் காட்டினா்.
இன்று விடுமுறை: புயல் மற்றும் பலத்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
மழை அளவு: கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை-4.6 மி.மீ, அண்ணாமலை நகா்-3.6, சிதம்பரம்-3, லால்பேட்டை-1, கடலூா்-0.2, ஆட்சியா் அலுவலகம்-0.1 மி.மீட்டா் மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தில் 60 முதல் 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லுமாறும் மீன்வளத்துறை தெரிவித்தது.