``3 வீடுகள்; 3 வேட்டி கொள்ளையர்கள்; அடுத்தடுத்த நாளில் கொள்ளை சம்பவங்கள்” - பீதி...
அஜித் பவார்: இளம் பெண் பைலட் சாம்பவி பதக் டு கேப்டன் சுமித் கபூர்! - விமானிகளின் விவரம்!
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவர் பயணம் செய்த விமானத்தில் அஜித் பவாரையும் சேர்த்து மொத்தம் 6 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். விமானத்தை கேப்டன் சுமித் கபூர், உதவி கேப்டன் சாம்பவி பதக் ஆகியோர்தான் இயக்கி இருக்கின்றனர்.
இது தவிர சாஹில் மதன் என்ற பைலட்டும் விமானத்தில் இருந்துள்ளார். கேப்டன் சுமித் கபூர்தான் விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டியிருக்கிறார். மூத்த பைலட் என்ற முறையில் விமானத்தை தரையிறக்குவது, விமானத்தை மேலே கிளப்புவது போன்ற முக்கிய முடிவுகளை எடுப்பார்.
அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த பைலட் என்று விமான போக்குவரத்து ஆணையமும், விபத்துக்குள்ளான விமான நிறுவனமும் தெரிவித்துள்ளன. அவர் 16 ஆயிரம் மணி நேரம் விமானத்தை இயக்கி இருக்கிறார்.
சாம்பவி பதக் இணை பைலட்டாகவும், விமானத்தின் முதல் நிலை அதிகாரியாகவும் செயல்பட்டார்.

இவரது பிரதான பணி விமானத்தின் உபகரணங்களை கண்காணிப்பது, விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது மற்றும் விமானத்தை தரையிறக்குவது உட்பட முக்கிய முடிவுகள் எடுப்பதில் பங்கெடுப்பார். மும்பை பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்துள்ளார் சாம்பவி பதக்.
அதோடு சாம்பவி பதக் நியூசிலாந்தில் நவீன முறையில் பைலட் பயிற்சி எடுத்து வந்துள்ளார். சிறிய ரக விமானங்களை இயக்கி சாம்பவி அதிக அனுபவம் உள்ளவர் ஆவார். இது தவிர சாஹில் மதன் என்ற ஒரு பைலட்டும் விமானத்தில் இருந்துள்ளார்.
விமான விபத்து குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் பாராமதி விமான நிலையம் டேபிள்டாப் போன்ற வடிவமைப்புடையது என்று கூறப்படுகிறது. ஓடுதளம் சிறியது ஆகும். எனவே முதல் முயற்சியில் விமானத்தை தரையிறக்க முடியாமல் இரண்டாவது முறை தரையிறக்க முயன்றபோதுதான் விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
விமானம் பாராமதியில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் வந்தபோது, சாம்பவி பதக் புனே விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். வெளிச்சம் 3000 மீட்டர் தூரத்திற்கு நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விமானம் தரையிறங்க அனுமதி கொடுத்துள்ளனர்.
ஆனால் விமானம் தரையிறங்க சென்றபோது போதிய வெளிச்சம் இல்லாமல் ஓடுதளம் தெரியவில்லை. இதையடுத்து விமானம் மீண்டும் மேல் நோக்கி பறந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு முறை ஓடுதளத்தில் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்த பிறகுதான் பைலட் விமானத்தை தரையிறக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அஜித் பவார் இறப்பை தொடர்ந்து மாநில அரசு மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இன்று மாலையே அஜித்பவாரின் இறுதிச்சடங்கு நடைபெறுவதால் தேவேந்திர பட்னாவிஸ் பாராமதிக்கு அவசரமாக புறப்பட்டு சென்றுள்ளார்.
அஜித்பவார் இடத்தை நிரப்பப்போவது யார்?
அஜித்பவாரின் திடீர் மரணம் பவார் குடும்பத்திலும், மராத்தா சமுதாயத்திலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மராத்தா சமுதாயத்தில் அஜித் பவார் முக்கிய தலைவராக இருந்தார். அதோடு கூட்டுறவு துறையிலும் மிகவும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். அஜித் பவார் மனைவி இப்போது எம்.பி.யாக இருந்தாலும் அவர் அஜித் பவார் இடத்தை நிரப்புவாரா என்பது கேள்விக்குறிதான். அஜித் பவாரின் மகன் பார்த் பவார் அரசியலில் இருக்கிறார். ஆனால் அவர் இன்னும் அரசியலில் தனக்கான இடத்தை பெறவில்லை. மற்றொரு மகன் ஜெய் பவார் குடும்ப தொழிலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனால் தேசியவாத காங்கிரஸ், மராத்தா சமுதாயத்தில் அஜித் பவாரின் இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


















