அஜித் பவார்: இளம் பெண் பைலட் சாம்பவி பதக் டு கேப்டன் சுமித் கபூர்! - விமானிகளின்...
திருவாரூர்: கீரிப்பிள்ளை கடித்த 7 வயது சிறுவன் - 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த சோகம்!
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் புது தெருவைச் சேர்ந்த முத்து-தேவி தம்பதியின் மகன் நவீன்(7) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். முத்து வீட்டில் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டில் தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்துள்ளார் நவீன். வீட்டில் கொடாப்பில் அடைத்திருந்த கோழியை பிடிப்பதற்கு கீரிப்பிள்ளை வந்துள்ளது. அப்போது வீட்டிற்குள் நுழைந்த கீரிப்பிள்ளை தூங்கி கொண்டிருந்த நவீன் கையை கடித்து விட்டது. வலி தாங்காமல் அலறிய நவீனை அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுள்ளனர்.

அதன் பிறகு வேறு எந்த சிகிச்சையும் நவீனுக்கு பெற்றோர் கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நவீனுக்கு காய்ச்சல் அதிகமாக அடிக்க பெற்றோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு காய்ச்சல் கடுமையாக அதிகரித்த நிலையில், நவீன் உயிரிழந்து விட்டார். மகன் இறப்பை தாங்க முடியாமல் பெற்றோர் கதறியுள்ளனர்.
இது குறித்து சிலரிடம் பேசினோம், ``கீரிப்பிள்ளை கடித்த நவீனை பெற்றோர் முறையாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். கீரிப்பிள்ளை கடித்த பாதிப்பு நவீன் உடம்புக்குள் அதிகரித்து கொண்டே இருந்துள்ளது. நேற்று கீரிபிள்ளை என்ன செய்யுமோ அது போல் செய்ததாக சொல்கிறார்கள். காய்ச்சலும் அதிகமாக அடித்து இறந்து விட்டார். நவீன் உடலை உடனடியாக மருத்துவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்க வில்லை. சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது" என்றனர். கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் மூன்று மாதம் கழித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

















