விழுப்புரம்: அணிவகுத்த பாரம்பர்ய உணவுகள்; சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மகுடம...
அடுத்தடுத்த சிக்கல்கள்; திமுகவை நெருக்கும் கூட்டணி கணக்குகள்! என்ன முடிவெடுக்கப் போகிறார் ஸ்டாலின்?
தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கே இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், அந்த அணியில் அடுத்தடுத்த சிக்கல்கள் எழ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தி.மு.க-வுக்கு நெருக்கமாக இருந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் சீட் விசயத்தில் கறார் காட்டும் மூடில் இருப்பதால் அறிவாலயம் தரப்பு அப்செட்டில் இருப்பதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.
தி.மு.க கூட்டணயில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, ஐ.யு.எம்.எல், ம.ம.க உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கிறன. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுடனே இந்த முறையும் தேர்தலை சந்திக்க தி.மு.க திட்டமிட்டு வருகிறது. அதனால் சீட் விசயத்தில் பெரிய மாற்றம் இருக்காது என நினைத்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் த.வெ.க தரப்பு பேச்சுவார்த்தை நடத்த துவங்கியதும், நிலைமை மாறியது. தங்களுக்கு கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என வரிசையாக கோரிக்கைகளை வைக்க துவங்கியது காங்கிரஸ். சரி, காங்கிரஸ் கட்சியை கடைசியாக பார்த்துக்கொள்ளலாம் என்று தி.மு.க திட்டமிட்ட நிலையில் அந்த கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சீட் எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிட்ட ம.ம.க இந்த முறை ஐந்து சீட்டை எதிர்பார்ப்பதாக சொல்லியது. மற்றொருபுறம், மார்சிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை தங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்று கேட்க துவங்கியது.
இவர்களை சரிகட்டவே தி.மு.க யோசித்துவரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சயின் தலைவர் திருமாவளவனும் தன் பங்கிற்கு இப்போது தி.மு.க-வுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார். திருமாவின் கோரிக்கையை தி.மு.க-வும் புறக்கணிக்க முடியாது என்கிறார்கள் வி.சி.கவினர்.
கூட்டணி விசயத்தில் திருமா என்ன நினைக்கிறார் என்று வி.சி.கவினரிடம் பேசிய போது, “நாங்கள் தி.மு.க கூட்டணியில் 2019-ம் ஆண்டு தேர்தல் முதல் இப்போதுவரை தொடரந்து கொண்டுள்ளோம். தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சியாகவும் இப்போது வி.சி.க வளர்ந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு ஆறு இடங்களில் வாய்ப்பு வழங்கியது தி.மு.க. நான்கு இடங்களில் நாங்கள் வெற்றியும் பெற்றோம்.
இந்த முறை கூடுதல் இடங்கள் கேட்க வேண்டும் என்று நிர்வாகிகள் தொடர்ந்து தலைவருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனால்,தி.மு.க தரப்பிலிருந்து எங்களை ஏற்கனவே தொடர்பு கொண்டவர்கள் ஆறு தொகுதியை அப்படியே வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதை ஏற்பதா? என்கிற குழப்பம் இருந்து வந்த நிலையில், ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டுவர தி.மு.கவின் சில நிர்வாகிகள் காய் நகர்த்தி வந்தனர்.
இது குறித்து தி.மு.க தரப்பிலிருந்து எங்களிடம் கேட்டபோது, “நாங்கள் பா.ம.க, பா.ஜ.க உள்ள அணியில் இருக்கமாட்டோம்” என்கிற முடிவை தெளிவாக சொல்லிட்டோம். இருந்தாலும் ராமதாஸ் தரப்பு மீது இப்போதும் தி.மு.கவுக்கு ஒரு சாப்ட் கார்னர் உள்ளது. அதுதான் எங்கள் தலைவருக்கு வருத்ததை ஏற்படுத்தி வருகிறது.

இதுஒருபுறம் என்றால், தே.மு.தி.க-வை தி.மு.க கூட்டணிக்கு கொண்டு வரும் வேலைகள் நடக்கிறது. எங்களுக்கு வந்த தகவல்படி அந்த கட்சிக்கு ஆறு தொகுதிகள் வரை கொடுக்க தி.மு.க தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
தே.மு.தி.கவின் இன்றை நிலை அனைவருக்கும் தெரியும். அந்த கட்சிக்கும் ஆறு தொகுதிகள், எங்களுக்கும் ஆறு தொகுதிகளே என்று சொன்னால் எப்படி. தே.மு. தி.க-வை விட நாங்கள் வலிமையாக இருக்கிறோம். அதனால் குறைந்தபட்சம் எட்டு தொகுதிகளாவது எங்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் தலைவர் அடுத்தகட்ட முடிவை எடுப்பார்” என்கிறார்கள்.
தி.மு.க தரப்பிலோ, “தே.மு.தி.கவுடன் இதுவரை கூட்டணியை இறுதி செய்யவில்லை. அதற்காக விடுதலை சிறுத்தைகளை நாங்கள் கழற்றிவிட போவதில்லை. கூடுதல் தொகுதிகள் எல்லோரும் கேட்டால் தி.மு.க மைனாரட்டி அரசைதான அமைக்க முடியும். அதைதான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விரும்புகிறது. குறைந்த பட்சம் 160 தொகுதிகளிலாவது தி.மு.க போட்டியிட வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார். அதற்கு தகுந்தமாதிரி கூட்டணி கணக்குகள் இருக்கும். வி.சி.க-வை சமாதானப்படுத்தவே ராமதாஸ் தரப்பை இப்போது கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது தலைமை” என்கிறார்கள்.

ஏற்கனவே தலித் ஓட்டுகள் பெரிய அளவில் த.வெ.கவுக்கு செல்லும் என்று உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை அரவணைத்து செல்ல வேண்டிய நிலை தி.மு.கவுக்கு உள்ளது. எனவே திருமாவை திருப்தி படுத்தவேண்டிய நிலை தி.மு.க-வுக்கு உள்ளது. இந்த தேர்தல், குறிப்பாக கூட்டணிகளை கையாள்வதில், உண்மையில், தி.மு.கவுக்கு பெரும் சிக்கலான தேர்தலாகவே இருக்கும் என்பது நிதர்சனம்.!















